“வயது வரம்பு உயர்வு.. இளைஞர்களின் கனவுகளுக்குச் சிறகு!”: முதலமைச்சர் அறிவிப்புக்கு சைதை துரைசாமி பாராட்டு!
சென்னை, அக்டோபர் 31 –
அரசப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் உச்ச வயது வரம்பை உயர்த்திய தமிழக அரசின் முடிவு, எண்ணற்ற இளைஞர்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையை விதைத்துள்ளதாகப் பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி அவர்கள் மனதாரப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்:
அரசப் பணி வாய்ப்புகளைப் பெறுவதற்கான வயது உச்சவரம்பை, தற்போதைய விதிகளிலிருந்து கூடுதலாக 5 ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். இது தமிழ்நாட்டு இளைஞர்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்மானமாகும். இதனை நான் முழு மனதுடன் வரவேற்றுப் போற்றுகிறேன்.
வயதுக் கட்டுப்பாடு காரணமாக அரசுப் பணியில் சேரும் வாய்ப்பை இழந்துவிட்டோம் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு, இந்த அதிரடி அறிவிப்பு புதிய வாழ்வையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் தந்துள்ளது. அவர்களின் அரசுப் பணி கனவுகள் நனவாக இந்த அரசாங்கம் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது.
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதும், சமூகநீதியைத் தடம் மாறாமல் காப்பதும், அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதுமே ஒரு சிறந்த நல்லாட்சியின் அடையாளமாகும். அந்த வகையில், போட்டித் தேர்வுகளுக்குத் தீவிரமாகத் தயாராகி வரும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்பான அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ‘மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். கல்வியகம்’ சார்பாகவும், போட்டித் தேர்வுகளை எதிர்நோக்கும் மாணவச் செல்வங்களுடன் இளைஞர்கள் சார்பாகவும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் மனமார்ந்த பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறேன் என்று சைதை துரைசாமி அதில் குறிப்பிட்டுள்ளார்.ர் கூறியுள்ளார்.

