“நன்றி.. தொடர்ந்து நடிப்பேன்!”: ‘வாழை’யில் முத்திரை பதித்த ஜே.எஸ்.கே. நெகிழ்ச்சி!
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளில் இருந்து பெரும் பாராட்டுகளை பெற்ற ‘வாழை’ திரைப்படம். இதில், வியாபாரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் ஜே.எஸ்.கே. விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என்று பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்து ஜொலித்து வருகிறார்.
இது குறித்து பேசிய ஜே.எஸ்.கே., “இந்த சிறந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ், படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட், தயாரித்த மாஸ்டர் திலீப் சுப்பராயன் படத்தில் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
படத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்த ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும், ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள், குறிப்பாக உதவி, துணை இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
திரையுலகில் எனது ஆரம்ப காலம் முதல்தற்போது என்னுடைய நடிப்பு பயணத்திலும் உறுதுணையாக இருந்து வரும் பத்திரிகையாளர்கள், வெற்றிப்படமாக்கிய மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
‘வாழை’ படத்தில் நடித்த நிகிலா விமல், திவ்யா துரைசாமி, கலையரசன், பொன்வேல், ராகுல், அம்மாவாக நடித்த ஜானகி, புரோக்கராக நடித்த பத்மன் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள். பொன்வேலுக்கு தேசிய விருது கிடைப்பது உறுதி.
தேசிய விருது பெற்ற வெற்றி படங்களை தயாரித்திருந்தாலும் நடிகனாக என்னை ‘தரமணி’ படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் ராம்-க்கு நன்றி.
தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘பேரன்பு’ திரைப்படத்திலும், ‘கபடதாரி’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பில் சிபிராஜுடனும் தெலுங்கு பதிப்பில் சுமந்துடனும் நடித்தேன். ஜான் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ஹர்பஜன் சிங் நடித்த ‘ஃபிரெண்ட்ஷிப்’, வசந்தபாலன் இயக்கத்தில் ‘அநீதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். இவை அனைத்திற்கும் பத்திரிகையாளர்கள் பாராட்டு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
தற்போது நவீன் இயக்கத்தில் அருண் விஜய்-விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘யாருக்கும் அஞ்சேல்’ நட்டி, ஶ்ரீகாந்த் உடன் ‘சம்பவம்’ மற்றும் ‘சேவியர்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன்.
இவை மட்டுமில்லாது, எஸ்.கே.ஜீவா இயக்கத்தில் ‘குற்றம் கடிதல்’ இரண்டாம் பாகத்தில் 60 வயதை நெருங்கிய அரசு பள்ளி ஆசிரியராக நடிக்கிறேன். தமிழின் ஆகச்சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்றாக இருக்கும்.
தவிர, பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாந்தினி தமிழரசன், காயத்ரி ஷான், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி, பத்மன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் ‘ஃபயர்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்குகிறேன். இப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது. இசை வெளியீட்டு விழா வெகு விரைவில் நடைபெற உள்ளது.
மலையாள திரைத் தறையில் இருந்தும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன” என்றார் ஜே.எஸ்.கே.