‘கர’: விமர்சனம்

‘கர’: விமர்சனம்

ன்னிடமுள்ள ‘திருடன்’ என்ற கறையைத் துடைக்க நினைக்கும் ஒருவன், தன் குடும்பத்தையும் ஊரையும் கடன் எனும் சுழலிலிருந்து காப்பாற்ற மீண்டும் திருட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறான். இதுவே இப்படத்தின் ஒன்லைன். வளைகுடா நாட்டுப் போர், இங்கே உள்ள விவசாயிகளின் டிராக்டர் கடனை எப்படிப் பாதிக்கிறது என்ற நுணுக்கமான அரசியலை த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறது இப்படம்.

நடிப்பு நாயகன் கர என்கிற கரசாமியாக தனுஷ். படத்தின் மிகப்பெரிய பலமே இவரது நடிப்புதான். வசனங்களே இல்லாமல், கண்களாலும் உடல் மொழியாலும் இயலாமையையும் வலியையும் கடத்துவதில் அவர் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். குறிப்பாக, தந்தை முன் கலங்கி நிற்கும் அந்த காட்சி.. அற்புதம்! அதே போல, வங்கிக் கொள்ளை காட்சியில் பதற்றத்தையும், திட்டமிடலையும் சரிவிகிதத்தில் வெளிப்படுத்தி, ரசிக்க வைக்கிறார்.

கரவின் காதல் மனைவி செல்லியாக மமிதா பைஜூ. தான் காதலித்த நபர், திருடன் என்பதை அறியாமல், போலீஸ் ஸ்டேஷனில் ரகளை செய்வதாகட்டும், உண்மை தெரிந்த பிறகு அவனை உலுக்கி எடுப்பதாகட்டும், மீண்டும் கணவன் தவறான வழிக்குச் செல்கிறானோ என்று கலங்கி நிற்பதாகட்டும்.. அசத்தியிருக்கிறார் பைஜூ.நாயகனின் முதிர்ந்த தந்தை கந்தசாமியாக, அறிமுக நடிகர் கே.எஸ்.ரவிக்குமார். ஆம்.. அப்படித்தான் சொல்ல வேண்டும். இதுவரை அவர் நடித்ததெல்லாம் சும்மா. இந்தப் படத்தில்தான் துவங்கியிருக்கிறார். என்ன ஒரு அற்புதமான நடிப்பு! மீண்டும் மகனைப் பார்த்து கலங்கி நிற்பது, நிலத்தை விற்கச் சொல்லும் மகனை, “எல்லோருக்கும் முன்னால அடிக்க வச்சிராதே” என பொங்குவது, மகன் மீண்டும் வந்துவிட்டான் என்பதற்காக நேர்த்திக்கடனுக்காக வைத்திருக்கும் பணத்தை அவனுக்கே திரும்பித் தர முயல்வது.. என அற்புத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் கே.எஸ்.ஆர். இறுதியில் இன்னும் கலங்கவைத்து விடுகிறார்.

ஜெயராமும் வித்தியாசமான கதாபாத்திரம். நிஜமான திருடன் அவர்தான். அந்த நயவஞ்சகத்தனத்தை மெல்லிய புன்னகையில் அநாயாசமாய் வெளிப்படுத்தி விடுகிறார்.

எம்.எஸ்.பாஸ்கர்.. வழக்கம்போல அதி சிறந்த நடிப்பை அளித்துள்ளார். நம்மாழ்வாரை கண்முன் நிறுத்துகிறார். கைதட்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்!

சுராஜ் வெஞ்சாரமூடு காவல்துறை அதிகாரியாக வருகிறார்.  பாத்திரம் அறிந்து நடித்துள்ளார். ஆனால் “புஹ்ஹூ.. புஹ்ஹூ..” என மலையாள வாடை அடிக்கும் பேச்சுதான் எரிச்சலூட்டுகிறது. மலையாள கதாபாத்திரங்களுக்கு இவரைப் போன்றவர்களை தமிழில் பயன்படுத்தலாம். தவறில்லை. ஆனால் தமிழ்க் கதாபாத்திரங்களுக்கு லால், சுராஜ் போன்றவர்களைத் தவிர்க்க வேண்டும். குறைந்தபட்சம் டப்பிங்காவது போட்டுத் தொலைக்க வேண்டும்.

கருணாஸ், நாயகனின் மாமாவாக,  கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து உள்ளார். கொள்ளையடிக்கச் செல்லும்போது எப்போதும் கண்களில் தேக்கி வைத்திருக்கும் பயத்தை சிறப்பாக வெளிக்காட்டி உள்ளார்.  நாயகனின் நண்பனாக வரும் பிரித்வி பாண்டியராஜன் உள்ளிட்ட அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு: 90களில் நடக்கும் கதைக்களத்துக்கே நம்மை அழைத்துச் சென்றுவிட்டார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். மண்மணத்தை உணரச் செய்கிறது அவரது ஒளிப்பதிவு. தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசக்காட்சிகளாகட்டும்.. வங்கிக் கொள்ளை பரபரப்பு, காவல்துறை துரத்தல் விறுவிறுப்பு என எல்லாவித உணர்வுகளையும், அப்படியே படம் பிடித்துக் காட்டிவிட்டார் தேனி ஈஸ்வர்.

இசை: ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை, இந்தப் படத்துக்கும் ஆன்மாவாகச் செயல்படுகிறது. ‘கண்ணம்மா ஏ கண்ணம்மா’ பாடல் படத்தின் வேகத்திற்கு நடுவில் ஒரு மென்மையான ஆசுவாசத்தைத் தருகிறது. கிராமப்புற மெலடிகளில் ஜி.வி.பி எப்போதுமே ஸ்பெஷல் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

பின்னணி இசை: த்ரில்லர் படங்களுக்குப் பின்னணி இசைதான் முதுகெலும்பு. இடைவேளைக் காட்சியிலும், இரண்டாம் பாதியில் வரும் சேஸிங் காட்சிகளிலும் ஜி.வி.பியின் இசை தியேட்டரில் அமர்ந்திருக்கும் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வருகிறது. மௌனத்தைப் பயன்படுத்த வேண்டிய இடங்களில் கச்சிதமாகப் பயன்படுத்தி, காட்சிகளின் கனத்தைக் கூட்டியிருக்கிறார்.

எடிட்டிங்: ஒரு த்ரில்லர் படத்தின் வெற்றி அதன் கத்தரிக்கோலில்தான் இருக்கிறது. அந்தக் காட்சிகளில் எடிட்டர் ஸ்ரீஜித் சாரங் அதைச் சரியாகச் செய்துள்ளார். இதர காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

இயக்கம்:  ‘போர் தொழில்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தில் தனது முத்திரையை இன்னும் ஆழமாகப் பதித்துள்ளார். திருட்டு, சேசிங் என ஆரம்ப காட்சிகள் பரபரத்து நிற்க.. அப்படியே காதல் மற்றும் குடும்பக் கதையாக மாறுகிறது.. மீண்டும் வங்கிக் கொள்ளை த்ரில்லராக மாறுகிறது. இந்த மாற்றங்கள் எல்லாவற்றையும் இயல்பாகத் தந்து மனதில் பதிய வைத்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் சம்பவங்கள், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மை அனைத்துமே எதற்காக என்பதற்கான விளக்கம் இடைவேளைக்கு வரும் காட்சிகளில் கிடைக்கும் போது அட போட வைக்கிறது.

முதல் பாதி ஒரு குடும்பக் கதையாக மெதுவாக நகர்ந்தாலும், மருத்துவமனை மற்றும் இடைவேளைக் காட்சிகளில் சட்டென வேகமெடுக்கிறது. சர்வதேசப் போருக்கும், உள்ளூர் விவசாயியின் டிராக்டர் கடனுக்கும் இடையிலான சங்கிலித் தொடர்பை விளக்கிய விதம் சிறப்பு.நிறை – குறை

பிளஸ்: தனுஷின் நடிப்பு, இடைவேளைக் காட்சி, ஜி.வி.பியின் இசை மற்றும் பிஜிஎம், ஒளிப்பதிவு.

மைனஸ்: ஆரம்பக் காட்சிகள் சற்று மெதுவாக நகர்வது, சில இடங்களில் காமெடி மற்றும் சீரியஸ் காட்சிகளுக்கு இடையே உள்ள தடுமாற்றம்.

பைனல் கமெண்ட்:  ‘கர’ – இது தனுஷின் நடிப்பில் மிளிரும் ஒரு எமோஷனல் த்ரில்லர். தியேட்டரில் ரசித்துப் பார்க்க வேண்டிய படம்!

ரேட்டிங்: 4.2/5

Related Posts