‘சிங் கீதம்’ – 94 வயதிலும் சிங்கீதத்தின் மாயாஜால இசை வேட்டை!

‘சிங் கீதம்’ – 94 வயதிலும் சிங்கீதத்தின் மாயாஜால இசை வேட்டை!

94 வயதிலும் ஒரு இளைஞனுக்குரிய துடிப்புடன், சினிமா உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிந்திருக்கிறார் லெஜண்ட் சிங்கீதம் சீனிவாச ராவ். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் விதைத்த ஒரு கற்பனை, இன்று ‘சிங் கீதம்’ என்ற பெயரில் ஒரு மியூசிக்கல் ஃபேண்டஸியாக வெள்ளித்திரையில் மலர்ந்திருக்கிறது.

கதைக்களம்: தங்கச் சுரங்கங்கள் நிறைந்த குபேரபுரம் என்ற கிராமம், பேராசை பிடித்த மனிதர்களால் கடைசி மரத்தை இழக்கிறது. இதனால் கிராமமே ஒரு சாபத்திற்கு உள்ளாகிறது. மக்கள் பேசுவதற்குப் பதிலாகப் பாடுகிறார்கள்! வாயைத் திறந்தால் இசைதான் வருகிறது. இந்த விசித்திரமான சூழலில் சிக்கிய ஊர் மக்கள், அந்தச் சாபத்திலிருந்து எப்படி மீண்டார்கள்? பேராசைக்கும், இயற்கைக்குமான போரில் வென்றது எது? என்பதுதான் இந்தப்படத்தின் மையக்கரு.

நடிப்பு: அயான், அஹல்யா பம்ரு, மற்றும் ஷாலினி கொண்டபுடி ஆகிய புதுமுகங்கள், ‘பாடிக்கொண்டே நடித்த’ அந்த சவாலான பாத்திரங்களில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளனர். குறிப்பாக, கௌரியாக வரும் அஹல்யாவின் கண்கள் சொல்லும் பாஷை அற்புதம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நிவேதா பெத்துராஜ், ஃபிளாஷ்பேக் காட்சிகளில் கண்ணீர் வரவழைக்கிறார். விஜய் தேவரகொண்டாவின் மின்னல் வரவு, அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.இசை: இப்படத்தின் உயிர்நாடி தேவி ஸ்ரீ பிரசாத். வசனங்களுக்குப் பதில் மெட்டமைத்து பாடல்களைத் திணிப்பது சாதாரண விஷயமல்ல; அது ஒரு தவம்! ஒவ்வொரு அசைவையும் இசையாக மாற்றியதில் அவர் ஒரு மேஸ்ட்ரோவாகத் தெரிகிறார். பின்னணி இசையில் கதை ஓடும் விதம், படத்திற்குத் தனி கௌரவத்தைச் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவு: ஒளிப்பதிவாளர் அன்கூர் சி, சுரங்கக் கிராமத்தை மர்மமாகவும், அதே சமயம் வசீகரமாகவும் காட்டியிருக்கிறார். எடிட்டிங்கில் முதல் பாதியின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்றாலும், இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு குறையைக் கவர் செய்துவிடுகிறது.

இயக்கம்:  சிங்கீதம் ராவின் முத்திரை ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. வசனங்கள் அற்ற மௌனத்தை இசையால் நிரப்பிய விதம், ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கிவிட்டது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் எமோஷனல் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ், பேராசைக்கும் இயற்கைக்கும் இடையிலான போராட்டத்தை உரக்கச் சொல்கின்றன. சில இடங்களில் வி.எஃப்.எக்ஸ் (VFX) காட்சிகள் குறையாகத் தெரிந்தாலும், அவர் சொல்ல வந்த அந்த ‘எக்கோ- மெசேஜ்’ மனதைத் தொடுகிறது.

ஃபைனல் கமெண்ட்:

‘சிங் கீதம்’ வெறும் சினிமா அல்ல; அது சிங்கீதத்தின் கனவு. வழக்கமான மசாலா படங்களைச் சாப்பிட்டு சலித்தவர்களுக்கு, இது ஒரு புதுவிதமான ‘இசை விருந்து’. லாஜிக் தேடாமல், மேஜிக் தேடுபவர்கள் நிச்சயம் திரையரங்கிற்குச் சென்று அனுபவிக்க வேண்டிய ஒரு படைப்பு!

ரேட்டிங்: 4.1/5