‘என்ன விலை’: விலைமதிப்பற்ற முதல்பார்வை வெளியீடு!
பிரபலங்கள், டிஜிட்டல் ஜிகினாக்கள் என எதுவுமே தேவையில்லை! அன்பும், நன்றியுணர்வும் இருந்தால் போதும் என்பதை ’என்ன விலை’ படக்குழு நிரூபித்துள்ளது. வழக்கமான பாணியைத் தூக்கியெறிந்துவிட்டு, தங்கள் படத்தின் முதல் பார்வையை, படப்பிடிப்பு நடந்த பாலம் கிராமத்தின் மண்ணின் மைந்தர்களைக் கொண்டே வெளியிட்டிருப்பது தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான முன்னெடுப்பு.
தனுஷ்கோடி அருகிலுள்ள பாலம் கிராம மக்களின் அன்பை இதயத்தில் சுமந்து, அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே இந்த நிகழ்வை படக்குழுவினர் வடிவமைத்துள்ளனர். பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள், கிராமத்து விருந்து என விழா ஒரு திருவிழாக் கோலம் பூண்டது. வெறும் விளம்பரத்திற்குப் பின் ஓடாமல், தாங்கள் உழைத்த மண்ணையும் மக்களையும் கௌரவித்த இந்த மனமுவந்த செயல், அந்த கிராம மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே ஒரு நெகிழ்ச்சியான பிணைப்பை உருவாக்கியுள்ளது.
சஜீவ் பாழூர் இயக்கத்தில், ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனு கோபால் வேணுகோபாலன் தயாரிப்பில், சமூக மற்றும் அரசியல் பின்னணியில் ஒரு குடும்ப த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. கருணாஸ், நிமிஷா சஜயன் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். ஏற்கனவே தாதாசாகேப் பால்கே விருது பெற்றுள்ள இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே, பாலம் கிராம மக்களின் அன்பால் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துவிட்டது!

