ஆபாச யுடியூபர்களுக்கு ஆப்பு? நடிகர் சங்கம் அதிரடி!
பாலியல் புகார் உறுதியானால் 5 ஆண்டுகள் தடை, மீடியாவிடம் பேசக்கூடாது, ஆபாச யு டியுபர்கள் மீது வழக்கு தொடுத்தால் உதவி என அதிரடியான தீர்மானங்களை இயற்றி இருக்கிறது, தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி.
மலையாள திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கையை வெளியான பிறகு நடிகைகள், பெண் கலைஞர்கள் தொடர்ந்து பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
தவிர, சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மலையாள திரையுலகை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகிலும் பாலியல் தொல்லை தொடர்பாக பல விவகாரங்கள் எழுந்துள்ளன. பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பொதுவெளியில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி கூட்டம் நடந்தது. சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் கலந்துகொண்டனர். கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது .
மேலும் ஏழு தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
அவை…
1. பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
2. பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.
3. பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
4. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ – மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
5. பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
6. யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
7. மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும்.