முதல் கவர்ச்சி நடிகை தவமணி தேவி கைப்படக் கண்காட்சி! கவிஞர் குட்டி ரேவதி திறந்துவைத்தார்!

முதல் கவர்ச்சி நடிகை தவமணி தேவி கைப்படக் கண்காட்சி! கவிஞர் குட்டி ரேவதி திறந்துவைத்தார்!

மறைந்த நடிகை கே. தவமணி தேவி, தமிழ்த்திரையுலகின் முதல் கவர்ச்சி நடிகை என்று அறியப்படுகிறார். 

இலங்கை  யாழ்ப்பாணம்  இணுவிலில் 1922ல் பிறந்த இவர், கொழும்பில் வளர்ந்தவர். இவரின் தந்தை கார்த்திகேசு, ஒரு பிரபல வழக்கறிஞராக விளங்கியவர்.  சிறுவயதிலேயே பெற்றோருடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார். இங்கு, பரத நாட்டியம், கர்நாடக இசை  ஆகியவற்றை பயின்றார்.

1937 இல் தனது 15வது வயதில் திரைப்படத்துறையில் நுழைந்தார். அந்தக் கால கட்டத்திலேயே காற் சட்டையுடன் துணிச்சலாக நடித்தார்.

இவரது முதல் படம் சதி அகல்யா மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1937 ஆம் ஆண்டில் வெளிவந்தது.

அகலிகை வேடத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். படமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது. இவர் நடித்து 1941 இல் வெளிவந்த வனமோகினியும் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இவர் அணிந்த, ஹவாய் நாட்டுப் பாணியிலான உடை, கவர்ச்சிக்கன்னி என்கிற பட்டத்தை அளிக்க காரணமாக அமைந்தது.

சிறந்த குரல் வளம் கொண்டவர் இவர். அதனால்,  “சிங்களத்துக் குயில்” என அழைக்கப்பட்டார்.

வேதவதி (சீதா ஜனனம்) என்ற படத்தில் சீதை பாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். தொர்ந்து,  வித்யாபதி படத்தில் தேவதாசி மோகனாம்பாள் என்ற வேடத்தில்  நடித்தார்.  இந்தத் திரைப்படத்தில் மேற்கத்திய பாணியிலான இவரது நடனங்களும் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் 1947 இல் வெளிவந்த ராஜகுமாரி திரைப்படத்தில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தார்.இது இவருக்கு பெரும் புகழையும் வெற்றியையும் ஈட்டிக் கொடுத்தது. தவமணி தேவிக்கு ராஜகுமாரி திரைப்படத்தில் நாயகனை மயக்கும் ராணி வேடம். இவரின் மெய்ப் பாதுகாவலராக சாண்டோ எம். எம். ஏ. சின்னப்பாதேவர் நடித்திருந்தார்.

தவமணி தேவி 1962 ஆம் ஆண்டில் ராமேசுவரத்தைச் சேர்ந்த கோடிலிங்க சாஸ்திரி என்பவரை காதலித்து மணந்து கொண்டார். திருமணத்தின் பின்னர் திரைப்படத் துறையை விட்டு முற்றாக விலகி ஆன்மீகத்தில் அதிக நாட்டம் செலுத்தினார்.  இராமேசுவரத்தில் தனது இறுதிக் காலத்தைக் கழித்த அவர் தனது 76வது வயதில் 2001 பெப்ரவரி 10 இல் காலமானார்.

தமிழ்த்திரைத்துறையில் கலையின் அரசியாகத் திகழ்ந்த வசீகர நடிகை தவமணி தேவியின் நூற்றாண்டு கடந்த வருடம் (2022) நிறைவடைந்தது. இதையொட்டி, அவர் குறித்த புகைப்படக் காட்சியை, யாழ் பல்கலைக் கழகத்தின் கவின்கலைத்துறை பேராசிரியர் அகிலன் ஒருங்கிணைத்து இருந்தார்.

‘வனமோகினி: நடிகை  தவமணி தேவி – சிலோனிலிருந்து மெட்றாசுக்கு’ என்கிற தலைப்பிலான இந்த  காண்பியக்காட்சி (புகைப்படக்கண்காட்சி)யை, யாழ் பல்கலையில்,   இன்று கவிஞர் குட்டி ரேவதி. திறந்துவைத்தார்.

தவமணி தேவியின் தொழில் வாழ்வை இன்றைய நவீன வாழ்வின் உடன் ஒப்பிட்டு, மாணவர்களிடையே   உரையாற்றினார் பேராசிரியர்  அகிலன்.எண்பது வருடங்களுக்கு முன் திரையில் தோன்ற ஆரம்பித்து,  1960களில் திரையுலகில் இருந்து விலகியவர் நடிகை தவமணி. அவர் மறைந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டன.ஆனாலும் கலைத்துறையில் மறக்க முடியாத  ஆளுமையாக இருக்கிறார் என்பதை, இந்த புகைப்படக்கண்காட்சி உணர்த்தி இருக்கிறது.

Related Posts