கின்னஸ் புத்தகத்தில் தெருக்கூத்து!: சங்ககிரி ராஜ்குமார் நெகிழ்ச்சி!
திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், தான் அமெரிக்காவில் நடத்திய பிரம்மாண்டமான தெருக்கூத்து நிகழ்ச்சி, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது:
“தெருக்கூத்து குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நான் திரைத்துறையில் இயங்கிக் கொண்டிருந்தாலும், தெருக்கூத்து கலையை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்து கொண்டே இருந்தது.
கோவில் திருவிழாக்களில் மட்டும் நடத்தப்படுகிற கலையாக இல்லாமல் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும் படி ,தெருக்கூத்தின் இலக்கணம் சிறிதும் மாறாமல் அதன் வடிவத்தை சீர் செய்து உலகெங்கும் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டேன்.
முதன்முதலாக கம்போடிய அங்கோர்வாட் முன்பாக தொடங்கிய பயணம், இன்று ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கும் நீண்டிருக்கிறது.
இன்னும் தெருக்கூத்தின் மீது மக்களின் அழுத்தமான பார்வையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தீவிரமாக செயல்படத் தொடங்கினேன்.
அதன் பலனாக வருகிற மே 25 ஆம் தேதி அமெரிக்காவின் சிகாகோ மாநகரில், தமிழ்நாடு அறக்கட்டளையின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில், உலக மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு பிரம்மாண்ட தெருக்கூத்தை நடத்த உள்ளேன்.
அமெரிக்காவின் டாப் 10 தியேட்டர்களில் ஒன்றான சிக்காகோ ரோஸ்மான்ட் தியேட்டரில் 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் 4500 பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இதில் கடை ஏழு வள்ளல்களில் புகழ் பெற்ற அதியமானின் வரலாற்று கதையை தெருக்கூத்து வடிவில் எழுதி நான் இயக்குகிறேன்.திரு. நெப்போலியன் அவர்கள் தலைமை தாங்குகிறார்.
நிகழ்த்து கலை வரலாற்றில் புதியவர்களுக்கு பயிற்சி அளித்து நிகழ்த்தப்படும் கலைகளில் இதுவே பிரம்மாண்டமான நிகழ்வு என்பதால் இது கின்னஸ் புத்தகத்தில் சாதனையாக இடம்பெறுகிறது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” – இவ்வாறு சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்து உள்ளார்.
