‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’: விமர்சனம்  

‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’: விமர்சனம்  

வெக்கை பூமியில், கோடை மழை போல் பெய்திருக்கிறதுஸ ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’.

சின்னஞ்சிறு கிராமம். குடிகார தந்தை, குடும்ப பாரத்தைச் சுமக்கும் தாய்.. இவர்களுக்கு பள்ளியில் படிக்கும் – ஆண், பெண் என – இரு சிறு குழந்தைகள். அந்த குழந்தைகளுக்கு, வழிதவறி வந்த ஆட்டுக்குட்டி ஒன்று கிடைக்கிறது. பாசத்துடன் வளர்க்கிறார்கள். குடிகாரத்தந்தையோ, அந்த ஆட்டுக்குட்டியை விற்று குடித்துவிடுகிறார்.

இதனால் பதறும் சிறுவர்கள்,  ஆட்டுக் குட்டியைத் தேடிப் புறப்படுதும், அப்போது அவர்கள் சந்திக்கும் சம்பவங்களும், ஆட்டுக்குட்டி கிடைத்ததா என்பதும்தான் கதை.

சிறுவர்கள் வாழ்க்கையாக துவங்கும் கதை, கிட்டதட்ட க்ரைம் கதைபோல சென்று முடிகிறது.

சிறுமி பிரிணதிதான் கதை நாயகி. நடிப்பு என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாக நடித்து உள்ளார். ஆட்டுக்குட்டியை பாசமாக வளர்ப்பது, காணவில்லை என்றதும் கதறுவது, அதைத் தேடி ஆர்வத்துடன் சுற்றித் திரிவது என அற்புதமாக நடித்து உள்ளார்.

சிறுமியின் அண்ணனாக வரும் கார்த்திக் விஜயும் உண்மையான அண்ணனகவே தோன்றியிருக்கிறார்.  ஆடு காணவில்லை என்றதும் தங்கையை தேற்றுவது, தங்கையின் பிடிவாதத்தால் ஆட்டைத் தேடி புறப்படுவது என்று பொறுப்பான அண்ணன், அதுவும், ஆரம்ப காட்சியில், ஆட்டுக்கறி வாங்கும்போது முகத்தில் வெளிப்படுத்தும் குதூகலம், ஆட்டுக்காக தங்கை அழுததால், “கறி திண்றதையே விட்டுட்டேன்”என்று சொல்வது.. அற்புதம்!இவர்களுக்கு உதவியாக வரும் தர்ஷினி கதாபாத்திரம் (டீன் ஏஜ்) சிறப்பான நடிப்பு. பெற்றோரை இழந்த நிலையில், ஒரு வீட்டில் வேலை பார்க்கிறார். எப்போதும் முகத்தில் சோகத்தை நிரப்பி… அதே நேரம் உயிர்களிடம் அன்பு காட்டி… அசத்தல் நடிப்பு.

நல்ல பண்ணையாளராக வரும் கமல்குமார் கவர்கிறார். குழந்தைகளிடம் பாசம் காட்டுவது, அவர்கள் காணவில்லை என்றதும் துடிதுடித்து தேடுவது என மனித நேயமிக்க பாத்திரத்தில் நடித்து உள்ளார்.

நேர்மையான காவல்துறை அதிகாரியாக வரும் லாவண்யா கண்மணி, கறிக்கடை நடத்தும் இஸ்லாமியராக வரும் நபர் உள்ளிட்ட அனைவரும் பாத்திரம் அறிந்து நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

அருண்மொழிச் சோழனின் ஒளிப்பதிவு சிறப்பு. கிராமத்துக் காட்சிகளை கண்முன் நிறுத்தி இருக்கிறது. மாதேஸ்வரன் படத்தொகுப்பு படத்துக்கு பலம். குறிப்பாக, குழந்தைகளைத் தேடி பண்ணையாரும், காவல் அதிகாரியும் ஒரு புறம் காரில் தேட.. இன்னொரு புறம் கொடூரர் ஒருவர் வேனில் தேட… இந்தக் காட்சிகளை மிகச் சிறப்பாக எடிட் செய்து உள்ளார்.

பிரச்சாரமாக இல்லாமல் மதுவின் கொடுமையைச் சொன்னது, உலகில் தீயவர்கள் மட்டுமில்லை.. நல்லவர்களும் உள்ளனர் என்பதை எதார்த்தமாக எடுத்துக் காட்டியது, இறுதி வரை பரபரப்பு குறையாமல் கதையை நகர்த்திச் சென்றது என இயக்குநர் ராம் கந்தசாமி கவனம் பெறுகிறார்.

குழந்தைகளுக்கான படம்.. ஆனால் குழந்தைத்தனமாக இன்றி.. அனைவரும் ரசிக்கும் வகையில் அளித்து இருக்கிறார்கள்.

Related Posts