சட்டம் என் கையில் விமர்சனம்  

சட்டம் என் கையில் விமர்சனம்  

ஒரே இரவில் நடக்கும் அட்டகாசமான அதிரடி த்ரில்லர்.

ஏற்காடு மலை… இரவு நேரம்… மது அருந்தியபடியே காரை ஓட்டிக்கொண்டு வருகிறார் சதீஷ். திடீரென, எதிரே வந்த பைக் மீது கார் மோதுகிறது. பைக் ஓட்டிய நபர் சம்பவ இடத்திலேயே மரணடைகிறார்.

பயத்தில், உடலை தனது கார் டிக்கியில் ஏற்றி பயணிக்கிறார் சதீஷ். இடையில் போலீஸ் செக் அப்…காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். ( பிணம் டிக்கியில் இருக்க) அவரது கார், போலீஸ் ஸ்டேசன் வளாகத்தில் நிற்கிறது.

இந்த திக் திக் நிமிடங்களுக்கு இடையே…

அதே காவல் நிலைய பகுதியில் kொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உடல் கிடக்கிறது.. இந்த வழக்கும் அதே  காவல் நிலைய எஸ்.ஐ.யிடம் வருகிறது.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கிளைமாக்ஸ் வரை திக் திக் குறையாமல் சொல்லி இருக்கிறார்கள்!

நகைச்சுவை வேடங்களில் ரசிக்க வைத்த சதீஷ், சமீபத்தில் சில படங்களில் ஹீரோவாக உயர்ந்தார்.

ஆனால் இந்த, சட்டம் என் கையில் படம்தான் ஹீரோவாக முதல் படம் என்று சொல்லலாம். நகைச்சுவை சாயலே இன்றி, சீரியஸ் ரோலில் அப்படி அசத்தி இருக்கிறார். போலீஸைப் பார்த்து பயப்படுவது, டென்சனில் வாய் திக்குவது, தான் சிக்கிக் கொள்வோமோ என்கிற நிலையில் அதிரடியாக ஏதாவது செய்து கவனத்தைத் திருப்பது என சிறப்பான நடிப்பை அளி்த்து இருக்கிறார்.

தமிழ்த் திரையுலகுக்கு புதிய சீரியஸ் – அதிரடி ஹீரோ வந்திருக்கிறார்! வாழ்த்துகள் வாழ்த்துகள் சதீஷ்!எஸ்.ஐ.யாக வரும் அஜய் ராஜ் மிடுக்கான நடிப்பு. உயர் அதிகாரிகளிடம் காட்டும் பவ்யம்; தனக்குக் கீழ் பணி புரியும் அதிகாரி, திமிராக நடக்க.. அவரை பழி வாங்கும் விதம்.. குறிப்பாக டீ கொண்டு வரச் சொல்லும் காட்சியில் கூடுதலாக ரசிக்க வைக்கிறார்.எஸ்.எஸ்.ஐ.யாக வரும் பாவெல் நவகீதன் மிரட்டி இருக்கிறார். கிண்டலும் தெனாவெட்டுமான பேச்சு, திமிரான பாடி லேங்குவேஜ்.. சிறப்பு.

‘செத்த பிறகு இழுத்துத்துட்ட வந்த பிளட் மார்க்..’ என்று சொல்கிற காட்சியில் அவரது நடிப்பு அசத்தல்.

இன்ஸ்பெக்டராக வரும், மைம் கோபி கிளைமைக்ஸில் வருகிறார். வழக்கம் போல இயல்பான நடிப்பில் கவர்கிறார்.இயக்குநர் இ.ராமதாஸ், ரித்திகா, வித்யா பிரதீப், அஜய் ஜெஸ்ஸி, உள்ளிட்டோர் சிறப்பாக நடித்து உள்ளனர். பவா செல்லதுரை நடிப்பும் படத்துக்குப் படம், மெருகேறுகிறது.

மலைகள்,  பனி விழும் இரவு,  விளக்கொளி இல்லாத காவல் நிலைய் என அனைத்தையும் அம்சமாக படம் பிடித்து இருக்கிறது பி.ஜி. முத்தையாவின் கேமரா.

எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில்  பின்னணி இசை மிகச் சிறப்பு. படத்துக்கு பலம்.

மார்ட்டின் டைட்டஸ் ஏ வின் எடிட்டிங் கச்சிதம். ( இனிசியலை பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வது எப்போதிலிருந்து பேசன் ஆனதோ தெரியவில்லை!)

அருண் ஏகே, ராஜா நல்லையா கூட்டணி ஒலி வடிவமைப்பில் சிறப்பான பங்களிப்பை அளித்து இருக்கிறது.

ஜே.எம்.ராஜாவின் வசனம், பசார் என்.கே.ராகுலின் கலை இயக்கம், அருண் ஏ.கே. & ராஜா நல்லையா ஆகியோரின் ஒலி அமைப்பு ஆகியவையும் பாராட்டுக்கு உரியன.

ஒரே இரவில் நடக்கும் க்ரைம் த்ரில்லரை, சிறப்பாக நேர்க்கோட்டில் கொண்டுபோய் ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் சாச்சி. எந்தவொரு கதாபாத்திரமும் துருத்தாமல், சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

நாயகன் சிக்கி விடுவாரோ என நினைக்கும் நேரத்தில் வாட்டர் கேன் மற்றும் சேரில் குத்தியிருக்கும் ஆணியால் அவர் தப்பிக்கும் காட்சி…  இயக்குநரின் சிறப்பான யுக்தி. 

அதோடு காவல் நிலைய பாலிடிக்ஸ்களை, வெளிச்சம்போட்டு காட்டி இருப்பதும் அருமை.

ஹீரோயின் தேவையில்லை என்ற தைரியம முடியும் அருமை.

ரசிக்கும்படியான க்ரைம் த்ரில்லரை அளித்த தயாரிப்பாளர்கள் பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன் சண்முகம் & ஸ்ரீராம் சத்தியநாராயணன் ஆகியோருக்கும் பாராட்டு.

மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசிக்கலாம்… சட்டம் என் கையில்!

ரேட்டிங்: 3.8/5

– டி.வி.சோமு

 

 

Related Posts