விமர்சனம்: அவள் பெயர் ரஜினி

விமர்சனம்: அவள் பெயர் ரஜினி

 

ஒரு கொலை நடக்கிறது…  அது மனிதரால் நிகழ்த்தப்பட்டக் கொலையாஇல்லை அமானுஷ்ய சக்தியால் நடந்த  கொலையா என்கிற கேள்விக்கு விடை தேடிச் செல்கிறது திரைக்கதை.

 

நாயகனின் அக்காவும் அவரது கணவரும்  செல்லும் கார் ஹைவேஸ் பகுதியில் பெட்ரோல் இல்லாமல் நின்று போகிறது.

தன் மனைவியை காரில் விட்டுவிட்டு கணவர், பெட்ரோல் வாங்கச் செல்கிறார். அப்பொழுது

அங்கு ஒரு கொலை விழுகிறது.

 

ஒருபுறம் போலீஸ் கொலை தொடர்பான சாட்சியங்களை விசாரித்து குற்றவாளியைப் பிடிக்கப் பார்க்க, இன்னொருபுறம் நாயகன் இந்த கொலையை செய்தவர் யார் என்பதை கண்டறியும் முயற்சியில் இறங்குகிறான்.

 

அந்த முயற்சியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழத் துவங்க, நாயகனின் குடும்பம் மீது அடுத்தடுத்து தாக்குதலும் நடக்கத் துவங்குகிறது.

தன் குடும்பத்தைப் பாதுகாத்துக் கொண்டே நாயகன் அந்தக் கொலை குற்றவாளியை கண்டுபிடித்தானா..? எப்படி கண்டுபிடித்தான்? அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது திரைக்கதை.

 

நவீன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காளிதாஸ் ஜெயராமிற்கு தன் அக்காளாக வரும் நமீதா ப்ரமோத்தின் இன்றைய நிலையை நினைத்து கலங்கி, அவளின் மனசாந்திக்காக அந்தக் கொலையின் பின்னணியை தேடிக் கண்டு பிடிப்பது மட்டுமே வேலையாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

அவரது அக்காவாக நடித்திருக்கும் நமீதா ப்ரமோத் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக போலீஸ் விசாரணையின்போது அவரின் அழுகையும், உடல் மொழியும், வசன உச்சரிப்பும் அதிஅற்புதம்.

 

ரஜினியாக நடித்திருக்கும் லஷ்மி கோபாலசாமி நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அவருடைய கதாபாத்திர வார்ப்பு ஒட்டு மொத்த கதையிலும் தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது.

இந்தக் கொலை ஏன் நடந்தது என்பது தொடர்பாக விவரிக்கப்படும் அந்த பின்கதையில் லஷ்மி கோபாலசாமியின் நடிப்பு நம்மை கலங்கச் செய்கிறது.

அந்தப் பின் கதையும் இவர் மீது என்ன குற்றம் என்பதான கேள்வியை நம்மில் எழுப்பிச் செல்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் அஸ்வின் குமார் மேற்சொன்னபடி நாயகன் கொடுக்கும் தடயங்களைப் பெற்றுக் கொண்டு, கடைசி நேரங்களில் நாயகனுக்கு வந்து பந்தோபஸ்து கொடுக்கும் வேலையை செவ்வனே செய்து இருக்கிறார்.

நாயகியாக வரும் ரெபோ மோனிகா ஜானுக்கு வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் கூட இல்லை. ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் போல் வந்து செல்கிறார்.

அக்காவின் கணவராக வரும் ஷாஜி குரூப் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும், தன் இயல்பான நடிப்பினால் நம் மனதில் நிற்கிறார்.

வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் ஒருவராக ரமேஷ் கண்ணா வந்து செல்கிறார். சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் இல்லை.

ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, தீபு ஜோசப் எடிட்டிங் செய்திருக்கிறார். 4 ம்யூசிக்ஸ் குழுவினர் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள்.

படத்தில் பாடல்களை விட பின்னணி இசையில் அவர்களின் உழைப்பு அட்டகாசமாக பிரகாசிக்கிறது.

அறிமுக இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

நவரசா ப்லிம்ஸ் சார்பாக ஸ்ரீஜித் மற்றும் ப்ளஸ்டி ஸ்ரீஜித் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

 

மொத்தத்தில் படம் ரசிக்கவைக்கிறது.