கல்கி 2898 ஏடி: விமர்சனம்  

கல்கி 2898 ஏடி: விமர்சனம்  

புராண காலத்தையும், அதி நவீன எதிர்காலத்தையும் முடிச்சுப்போட்டு ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

பார்ப்பதற்கு அம்பு போல இருக்கும்.. ஆனால், அது அதி நவீன துப்பாக்கி. இதுதான் கான்செப்ட்.

கி.பி 2898….

பேரழிவு ஏற்பட்டு உலகமே அழிய… காசி நகரம் மட்டும் மிச்சம் இருக்கிறது. அந்த நகரத்தில் ‘காம்ப்ளக்ஸ்’ என்ற பெயரில், அனைத்து வசதிகளும் கொண்ட தனி வாழ்விடத்தை உருவாக்கி மாஸாக வாழ்கிறார், சுப்ரீம் யாஸ்கின் (கமல் ஹாசன்).  ஆனால், மக்களை தன் வாழ்விடத்திற்கு வெளியே தள்ளி,  வறுமையில் உழலவைக்கிறார்.

இதனால், ஷம்பாலா என்ற ரகசிய நகரத்தைச் சேர்ந்த மக்கள்,  சுப்ரீம் யாஸ்கினுக்கு எதிராக போராட முயற்சிக்கிறார்கள்.

இந்த நிலையில், வீரன் பைரவா (பிரபாஸ்), வசதியான ‘காம்ப்ளக்ஸிற்குள்’  சென்று ஜாலியாக செட்டிலாக வேண்டும் என்று முயற்சி செய்கிறான்.இதற்கிடையில், கர்ப்பிணியாக உள்ள SUM 80-ஐ (தீபிகா படுகோன்) குறி வைக்கிறார்கள் சுப்ரீமின் ஆட்கள். பைரவாவும் அப்பெண்ணை சுப்ரீமின் ஆட்களிடம் கொடுக்க முயற்சிக்கிறான்.

இன்னொரு பக்கம்… குருச்சேத்திரப் போர் நடந்த காலத்திலிருந்து உயிரோடு இருக்கும் அஸ்வத்தாமனும் (அமிதாப் பச்சன்), ஷம்பாலா நகரத் தலைவியும் (ஷோபனா) அப்பெண்ணைக் காப்பாற்றப் போராடுகிறார்கள்.

அப்பெண்ணுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு, இறுதியில் அப்பெண்ணுக்கு என்ன ஆனது, உண்மையில் பைரவா யார் போன்ற கேள்விகளுக்கான பதிலைச் சொல்லியிருக்கிறது ‘கல்கி 2898 ஏடி’.

வழக்கம் போல, வித்தியாசமான மேனரிஸம், அதிரடி சண்டைக் காட்சிகள், குறும்புகள் என நடித்து இருக்கிறார் பிரபாஸ்.

நிஜமான கதா நாயகனாக அதிரடி ஆக்சனில் கலக்குபவர், அமிதாப்தான். மூர்க்கமான சண்டைக் காட்சிகளிலும், அழமாய் ஊடுருவும் பார்வையிலும் நம்மை கலங்க வைக்கிறார்.

தீபிகா படுகோனுக்கு வாய்ப்பு குறைவுதான். ஆனால் கொடுக்கப்பட்ட பாத்திரித்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் ஓரிரு காட்சிகளே வந்து போகிறார்.  ஆனாலும் அந்த பார்வை… அதிரவைக்கும் குரல்.. கமல், கமல்தான்!

சஸ்வதா சாட்டர்ஜி, ஷோபனா, பசுபதி, அன்னா பென். மிருணாள் தாக்கூர், திஷா பதானி, பிரம்மானந்தா என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். தவிர, துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, இயக்குநர்கள்  ராஜமொலி, ராம் கோபால் வர்மா, அனுதீப் என ஏகப்பட்ட பேர்  கௌரவ தோற்றத்தில் வந்து போகிறார்கள்.

கிராபிக்ஸ் காட்சிகள், அதிரடி ஆக்சன், பிரம்மாண்டம் என பிரமிக்க வைக்கிறார்  ஒளிப்பதிவாளர் ஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச்.

சந்தோஷ் நாராயணனின் பின்னணி படத்துக்கு பலம்.

அனில் ஜாதவ், சந்தோஷ் ஷெட்டி, வேலு, ரெம்பன் ஆகியோரின் கலை இயக்கம் பிரமிக்க வைக்கிறது.

பிரவீன் கிலாறுவின் வி.எஃப்.எக்ஸ்… செம மாஸ்.படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேசுவர ராவ்..  கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

மகாபாரத புராணக் கதைகளுடன், ரோபோக்கள், ஏ.ஐ போன்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் இணைத்து எதிர்காலத்தில் நடக்கும் ஒரு கற்பனை கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் நாக் அஷ்வின்.

உச்ச நடிகர்கள், அசத்தும் கிராபிக்ஸ், மிரட்டும் சண்டைக் காட்சிகள் என பல ப்ளஸ்கள். அதே நேரம்,  இயக்குநர் நாக் அஷ்வின் திரைக்கதையில் கூடுதல் கவனம் எடுத்து இன்னும் ஷார்ப்பாக தந்திருந்தால் படம், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கும்.

Related Posts