ரயில்: விமர்சனம்

ரயில்: விமர்சனம்

சிறு கிராமத்தில் மனைவியுடன் வசிக்கும் முத்தையா, எலக்ட்ரீசியன். கையில் தொழில் இருந்தாலும், எப்போதும் நண்பன் வரதனுடன் சேர்ந்து குடிப்பதுதான் வேலை.

இவனது பக்கத்து வீட்டில் வசிக்கிறான் வட இந்திய இளைஞன். பான் பராக்கூட போடாமல், தான் உண்டு, சம்பளத்தை ஊருக்கு அனுப்புவது உண்டு என வாழ்கிறான்.

வட இந்திய இளைஞனுடன் தனது மனைவி பேசுவது முத்தையாவுக்குப் பிடிக்கவில்லை. தவிர, இந்த வடக்கன்களால்தான் தன்னைப் போன்ற பூர்விக குடிகளுக்கு(!) வேலை கிடைப்பதில்லை என்றும் ஆதங்கப்படுகிறான்.

ஒரு கட்டத்தில் வடக்கனை கொலை செய்யவும் திட்டமிடுகிறான்.

ஆனால் எதிர் பாராத நிகழ்வு ஒன்று ஏற்பட்டுவிடுகிறது. அதைத் தொடர்ந்து இன்னொரு பிரச்சினையும் முளைக்கிறது…

அதன் பிறகு நடப்பதே கதை.நாயகன் குங்குமராஜா, அசல் குடிகாரனாகவே வாழ்ந்திருக்கிறார். வடக்கன் மீது கோபப்படுவது, பயம் வந்தால் தன்னை அறியாமல் கழுத்தில் கிடக்கும் முருகன் டாலரை எடுத்து மனதிற்குள்ளேயே வணங்குவது, மாமனார் மீது எரிச்சலடைவது என்று சிறப்பாக நடித்து உள்ளார்.

இவரது மனைவியாக வரும் வைரமாலா.. நடிப்பில் வைரம். கணவன் மீதான கோபம், அன்பு என அசல் குடும்பத்தலைவியாகவே வருகிறார். வடக்கன் மீது காட்டும் பாசம், பணம் காணவில்லை என்றதும் பதற்றம்… சிறப்பு.

நாயகி வைரமாலாவின் அப்பாவாக வரும் செந்தில் கோச்சடை, அசல் கிராமத்து மனிதராக வந்து மனதில் நிற்கிறார். ஓரிடத்தில்கூட நடிப்பு என சொல்ல முடியாத அளவுக்கு சிறப்பாக பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். அதுவும், “அவனும் என் மகன் மாதிரிதாம்மா.. அவன் காரியத்தை நான் எடுத்து செய்யறேன்” என்கிறபோது நெகிழ வைக்கிறார்.

நாயகனின் நண்பன் வரதனாக வரும் ரமேஷ்வைத்யா, வரும் காட்சிகள் எல்லாமே புன்னகைக்க வைக்கின்றன. இந்த ஒல்லி உருவத்துக்கு ஒவ்வாத தெனாவெட்டான நடை, அசால்ட்டான பேச்சு… அவர் சிகரெட் வலிக்கும் அழகே தனி!

வடக்கனாக வரும் பர்வேஸ் மெஹ்ரூ, அவரது  குடும்பத்தாராக வரும் நடிகர்கள் அனைவருமே இயல்பாக நடித்து உள்ளனர்.

தேனி ஈஸ்வரின் கேமரா, படத்துக்கு பலம். எந்தவொரு காட்சியிலும் அவசரமில்லாமல், நின்று நிதானித்து நகர்ந்து ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது ஒளிப்பதிவு. அதே போல,  எஸ்.ஜே. ஜனனியின்  இசையும் அருமை.

தமிழ் மக்களின்  பாசத்தை  நெகிழ்ச்சியுடன் சொன்ன விதத்தில் ஈர்க்கிறார் இயக்குநர் பாஸ்கர் சக்தி என்பதையும் சொல்ல வேண்டும்.

லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. குறிப்பாக, வட இந்தியாவில் இருந்து வந்து இங்கு தனியாக தங்கி வேலை பார்க்கும் இளைஞன், விபத்தில் இறந்துவிடுகிறான்.  போஸ்மார்ட்டத்துக்குப் பிறகு அவனது உடலை மின் குளிர் பெட்டியில் வைத்து, அவனது வீட்டில் கொண்டுவந்து வைக்கிறது போலீஸ். அதாவது, அவனுக்கென்று இங்கே உறவுகள் யாருமில்லாத நிலையில்.

இது போன்ற சூழலில் உடலை, மார்ச்சுவரியில்தான் வைத்திருப்பார்கள்…  உரியவர்கள் வரும் வரை.

தவிர போலீஸ் செலவு செய்து குளிர் மின் பெட்டி வாடகைக்கு எடுத்து வைக்கிறது என்பதும் நம்ப முடியாத.. நடக்கவே நடக்காத செயல்.

தமிழ்நாட்டு இளைஞர்கள் குடித்துவிட்டு கிடப்பதால்தான், வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்கிற கருத்தை விதைக்க முயல்கிறது படம்.இது தவறான புரிதல். குறைந்த கூலிக்கு, மாடாய் உழைக்கிறார்கள் என்பதால்தான் வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களத நிலை பரிதாபம்தான். இதை படம் உணர்த்தவில்லை.

தவிர, வயிற்றுப் பிழைப்புக்காக வட இந்தியர்கள் இங்கே வந்து குடியேறுவதையும், தமிழ்நாட்டில் இருந்து அரபு நாடுகளுக்குச் செல்வதையும் ஒரே பார்வையில் வைக்கிறது படம். இதுவும் தவறு.

மேலும், திட்டமிட்டு வட இந்திய இளைஞர்களை இங்கே குவிப்பதால் ஏற்படும் சமூக, பொருளாதார பாதிப்புகளையும் இயக்குநர் கவனித்ததாய் தெரியவில்லை..காதல், கத்திரிக்காய், மோதல், மசாலா என்று இல்லாமல் இயல்பான மனிதர்களை உலவ விட்ட திரைக்கதை… ரசிக்க வைக்கும் இசை, குளிர்ச்சியான ஒளிப்பதிவு, யதார்த்தமான வசனங்கள் என திரைப்படமாக நல்ல அனுபவத்தைத் தருகிறது ரயில்.

ஆனால் படத்தின் கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை!

ஆபரேசன் சக்சஸ்.. பேசண்ட் டெத் என்று சொல்லலாம்… அல்லது ‘நல்ல திரைக்கதையில் மோசமான கருத்து’ என்றும் சொல்லலாம்.

 

 

 

 

 

 

 

Related Posts