அன்றே சொன்ன ரஜினி! அரசியலைவிட்டு விலகுவாரா விஜய்?

அன்றே சொன்ன ரஜினி! அரசியலைவிட்டு விலகுவாரா விஜய்?

நடிகர் விஜய், அரசியலுக்கு வருவதாக யூகம் கிளம்பியதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் பெரும் விளைவுகளை ஏற்படுத்துவார் என்று ஊடகங்கள் பல தெரிவித்தன.

அதற்கேற்றவாறு அவரும் பிரம்மாண்டமாக மாநாடு நடத்தினார், “திராவிடமும் தமிழ்த்தேசியமும் இரு கண்கள்” என்று அவர் கூறியது வரவேற்பைப் பெற்றது. அதே போல, “பெரியாரை ஏற்கிறோம்.. ஆனால் கடவுள் மறுப்பை ஏற்கவில்லை” என்று தெரிவித்ததையும் பலர் வரவேற்றனர். ஆனால் அதே மேடையில், மூன்று மத நூல்களை உயர்த்திக்காட்டியது விமர்சனத்துக்கு உள்ளானது.

பிறகு அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டில் அவர் கலந்துகொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “அம்பேத்கர் குறித்து பேசாமல், தேர்தல் அரசியல் குறித்து மட்டும் பேசினார்” என்ற விமர்சனம் எழுந்தாலும், பரபரப்பை அதிகப்படுத்தியது என்பதை மறக்க முடியாது.

ஆனால் இந்த இரு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அவர் தனது பனையூர் வீட்டை விட்டு படப்பிடிப்புக்காகவும், நடிகை கீர்த்தி திருமணத்துக்காக த்ரிசாவுடன் கோவா சென்றதுக்காகவும் மட்டுமே வெளியில் வந்தார்.மற்றபடி அரசியல் ரீதியான நிகழ்வுகள் எதற்கும் வெளியே வரவே இல்லை. வேலு நாச்சியார் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள், பெரியார் நினைவு தினம் உள்ளிட்ட நாட்களில் அவர்களது படங்களை தனது பனையூர் வீட்டில் வைத்து வணங்குவது போல போஸ் கொடுத்ததோடு சரி. மேலும் அந்தந்த தலைவர்கள் குறித்து ட்விட் போடுவார். அவ்வளவுதான்.

இடையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக்கூட நேரில் சென்று சந்திக்காமல், தனது பனையூர் இல்லத்துக்கு அழைத்து நிவாரண உதவி செய்தார்.

அண்ணா பல்கலை வன்கொடுமை விவகாரம் குறித்தும்கூட ட்விட்டரில் விமர்சித்தார்.. ஆளுநரை சந்தித்து மனு கொடுத்தார். அவ்வளவுதான்.

இந்த சம்பவம் குறித்து விஜய் எழுதிய கடிதத்தை, பிரிண்ட் எடுத்து விநியோகித்த அவரது கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகும்கூட விஜய் களத்துக்கு வரவில்லை.

இதனால் விஜயை, “பனையூர் பண்ணையார், ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்வாதி” என்றெல்லாம் சமூகவலைதளங்களில் பலரும் விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் அவரது ரசிகர்கள் மனம் நொந்துபோய்விட்டனர்.

அவர்கள், “அரசியல் களத்தில் குதித்துவிட்டால் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாது அண்ணா. வெளியே வந்தால் கூட்டம் கூடுகிறது என்று தானே வீட்டோடு முடங்கியிருக்கிறீர்கள். இந்த கூட்டம் கூடாதா என ஏங்குபவர்கள் உண்டு. அப்படி இருக்க உங்களுக்கு தானாக சேர்ந்த கூட்டம் இருக்க அதற்கு போய் பயப்படலாமா?. வீட்டை விட்டு வெளியே வாங்க” என்று வெளிப்படையாக சமூகவலைதளத்தில் பதிவிட ஆரம்பித்துவிட்டார்கள்.மேலும், “கூட்டம் கூடுவதால் பிரச்சினை என்கிறீர்களே… கூட்டம் வருவதால் ஷூட்டிங்கிற்கு போகாமல் இருக்கிறீர்களா, உங்கள் படம் வெளியாகும்போது கூட்டம் கூடுவதில்லையா” என்றும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலையில் ரஜினி பற்றிய நினைவு வருகிறது.

“உயிரே போனாலும் அரசியலுக்கு வருவேன்” என்றவர், “உடல் நலம் பாதித்துவிட்டது ஆகவே அரசியலுக்கு வரவில்லை” என்று 2020ல் அறிவித்தார்.

அவரது ரசிகர்கள், அவரது போயஸ்கார்டன் இல்லத்தின் வாசலில் நின்று கதறினர். போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“தலைவா.. எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆகவே வீட்டில் இருந்துகொண்டே இரண்டு நிமிட வீடியோ போடுங்கள். களத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 234 தொகுதிகளிலும் வெல்வோம். எம்.ஜி.ஆர் படுத்துக்கொண்டே ஜெயித்தார். நீங்கள் வீட்டில் இருந்து பிரச்சாரம் செய்தே ஜெயிக்கலாம்” என்று கதறினர்.

ஆனால் ரஜினி தனது முடிவில் உறுதியாக இருந்தார்.இது குறித்து அவர், “கட்சி‌ ஆரம்பித்தால், நான்‌ மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி, பிரச்சாரத்திற்குச் சென்று லட்சக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டும்; சமூக வலைத்தளங்கள்‌ மூலமாக மட்டும்‌ பிரச்சாரம்‌ செய்தால்‌ மக்கள்‌ மத்தியில்‌ அரசியல்‌ எழுச்சியை உண்டாக்க முடியாது.. தேர்தலில்‌ பெரிய வெற்றியைப் பெற முடியாது. இதுதான் யதார்த்தம்” என்றார். அதே உறுதியுடன் அரசியல் முடிவை திரும்பப் பெற்றார்.

தற்போது விஜய் நடத்தும் “அரசியலுக்கு”, நான்கு வருடங்கள் முன்பாகவே ரஜினி சொன்ன பதிலாக இதைப் பார்க்கலாம்.

இதையும் கடந்து விஜய், தனது வீட்டிலே இருந்தபடியே “அரசியல்” நடத்தினால், ரஜினி சொன்னது போல மக்கள் ஆதரவைப் பெற முடியாது – தேர்தலில் வெல்ல முடியாது என்பது நிதர்சனம்.

ஆகவே, தன்னால் வெளியில் சென்று அரசியல் நடத்த முடியாது என நினைத்தால், அரசியலைவிட்டு விஜய் விலகுவதே சரி.

அவரை நம்பி, அரசியல் களத்தில் இறங்கி உள்ள அவரது ரசிகர்கள் ஆகப்பெரும்பாலோர், அரசியல் முதிர்ச்சி உள்ளவர்கள் அல்லர். அவர்களை சிக்கலில் மாட்டுவதற்குப் பதிலாக விஜய் அரசியலைவிட்டு விலகுவதே ரசிகர்களுக்கு செய்யும் நன்மையாகும்.

– டி.வி.சோமு

Related Posts