ராஜபுத்திரன் : திரை விமர்சனம்

ராஜபுத்திரன் : திரை விமர்சனம்

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமம்…  மனைவியை இழந்த பிரபு தன் தாய் , மகள் , மகன் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

தாயில்லா பிள்ளையான தன் மகன் வெற்றி மீது அதீத பாசம். அவர்  வாலிப பருவம் அடைந்த வெற்றியை எந்த வேலைக்கும் அனுப்பாமல் செல்லமாக வளர்க்கிறார்.

மழை பொய்த்து விவசாயம் பாதிக்கப்படுகிறது. ஆகவே வட்டிக்கு கடன் வாங்கி சமாளிக்கிறார் பிரபு.

அப்பா பிரபு, பணத்திற்காக அல்லாடுவதைப் பார்த்த வெற்றி, அவருக்குத் தெரியாமலேய நண்பர்கள் மூலம் வேலைக்குச் செல்கிறார்.  அதாவது, அரசாங்கத்தை ஏமாற்றி சட்ட விரோதமாக பண பரி வர்த்தனை செய்பவரிடம் வேலை. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பத்திற்கு (அரசுக்குத் தெரியாமல்) அனுப்பும் பணத்தை வரி ஏதும் செலுத்தாமல் முறையற்ற முறையில் நேரடியாக கொண்டு சென்று அவர்களின் குடும்பத்தாரிடம் கொடுக்கும் வேலை.

ஒரு முறை, ஒரு குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய பணம் வெற்றியிடமிருந்து  திருடு போய் விடுகிறது. வில்லன் கோமல் குமார் வெற்றியை அடிக்க முற்படும்போது அப்பா பிரபு தன் வீட்டின் பத்திரத்தை வைத்து மகனை காப்பாற்றுகிறார் .

முடிவில் நாயகன் வெற்றி திருடு போன பணத்தை எடுத்தது யார் என கண்டுபிடித்தாரா, இதற்கிடையே காதலித்த இநாயகி கிருஷ்ண பிரியாவை திருமணம் செய்துகொண்டாரா என்பது மீதிக்கதை.

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்யும் வெற்றி, இந்த முறை கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து உள்ளார். கமர்சியல் ஹீரோவாக வலம் வர திட்டமிட்டு இருக்கிறார் என்பது புரிகிறது. சண்டைக் காட்சிகள் ஓகேதான். காதல், பாசம், சோகம் என மற்ற உணர்வுகளைஅடுத்த படத்தில் வெளிப்படுத்த வாழ்த்துகள்.

பாசத்தைக் கொட்டி நடித்திருக்கிறார் பிரபு. நாயகி கிருஷ்ண பிரியா, காதல் காட்சிகளில் பாஸ் மார்க் வாங்குகிறார்.தங்கதுரை, இமான் அண்ணாச்சி காமெடி சிரிக்கவைக்கவில்லை.

முக்கிய வில்லனாக கோமல் குமார் மிரட்டுகிறார். அடுத்தகட்ட வில்லன்களாக வரும் லிவிங்ஸ்டன், ஆர்.வி.உதயகுமார், மன்சூர் அலிகான் பாத்திரங்கள் மனதில் பதியவில்லை.

ஆலிவர் டெனியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

ராகேஷ் ராக்கியின் சண்டைக் காட்சிகள், கமலக்கண்ணனின் படத்தொகுப்பு ஆகியவையும் கவனிக்க வைக்கின்றன.

கலை இயக்குநர் அய்யப்பனுக்கு பாராட்டுகள். வில்லன் கூடாரம், சந்தை, அந்தக் கால பஸ், வீடுகள் என்று அசத்தி இருக்கிறார்.

நௌஃபல் ராஜா இசையில் ‘ஆகாசத்த தொட்டாச்சி’ பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.

அப்பா – மகன் பாசக்கதையை மசாலா கலந்து அளித்து இருக்கிறார் மகா கந்தன்.

ரசிக்கலாம்.

Related Posts