ஒன் மேன்: விமர்சனம்: உச்சம் தொட்ட ஒற்றை மனிதன்!
சினிமா கலை என்பது பல நூறு மனிதர்களின் கூட்டு உழைப்பில் உருவாகும் ஒரு பிரம்மாண்டம். ஆனால், அந்த ஒட்டுமொத்தக் கலை வடிவத்தையும் தன் தனி ஒருவனின் தோள்களில் தாங்கி, தமிழ் திரையுலகில் ஒரு புதுமையான முயற்சியை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார். ‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ போன்ற கவனிக்கத்தக்க படங்களை அளித்த இவர், ‘ஒன் மேன்’ திரைப்படம் மூலம் ஒரு அரிய சாதனையைப் படைத்திருக்கிறார்.
கதைக்களம்
பல்வேறு திறமைகளைக் கொண்ட நான்கு இளைஞர்கள் தங்களுக்கு வழங்கப்படவுள்ள விருதுகளை வாங்குவதற்காகப் புறப்படுகிறார்கள். அது சரியாக லாக்டவுன் அறிவிக்கப்படவுள்ள நேரம். அவர்கள் செல்லும் பாதையில் பல தடைகள் குறுக்கிட, எதிர்பாராதவிதமாக ஒரு முக்கியமான ஆய்வகத்திற்குள் சென்று விடுகிறார்கள். அங்கு அவர்கள் செய்யும் ஒரு காரியத்தால், உலகத்தில் உள்ள அனைவரும் மறைந்து விடுகிறார்கள். இந்த விசித்திரமான சூழலுக்குத் தீர்வு என்ன, மனித குலம் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. ஹாலிவுட் பாணியிலான ஒரு சிறந்த அறிவியல் புனைகதை கருவை அடிப்படையாகக் கொண்டு, அதனூடே பொதுமை நிறைந்த நல்லதொரு கருத்தையும் படம் முன்வைக்கிறது.
நடிப்பு
ஹீரோ, வில்லன், துணை நடிகர்கள் என படத்தில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களிலும் சங்ககிரி ராஜ்குமாரே நடித்திருக்கிறார். ஒப்பனை மற்றும் உடலமைப்பில் மட்டுமன்றி, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குமான உடல்மொழியிலும் (Body Language) அபார வித்தியாசத்தைக் காட்டி அசத்தியிருக்கிறார். ஒரு கதாபாத்திரத்திற்கும் இன்னொன்றிற்கும் இடையிலான மோதலும் பரபரப்பும் பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
தொழில்நுட்பப் பங்களிப்பு
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, தயாரிப்பு, ஒலி அமைப்பு (Sound Effects) மற்றும் காட்சி விளைவுகள் (Graphics) என எழுபதிற்கும் மேற்பட்ட திரைத்துறைசார் பணிகளை எந்தவொரு உதவியாளரும் இன்றி ஒரே ஆளாகச் செய்திருப்பது அசாத்தியமான ஆச்சரியம். அமெரிக்க கார் சேசிங், ஹெலிகாப்டர் சேசிங் மற்றும் ரயில் விபத்துக் காட்சிகள் போன்ற பிரம்மாண்டமான தருணங்களைத் தனி ஒருவராகச் சாத்தியப்படுத்தியிருப்பது இவரது கலைத் தாகத்தையும் பெருங்காதலையும் காட்டுகிறது.
நிறை
-
சினிமா மீதான தீவிர காதலும், வியக்க வைக்கும் தனிநபர் உழைப்பும்.
-
பல கதாபாத்திரங்களை ஒரே ஆள் ஏற்று நடித்திருந்தாலும், கெட்டப் மற்றும் நடிப்பில் காட்டியிருக்கும் நேர்த்தி.
-
நல்லதொரு அறிவியல் புனைகதை மையக்கருவும், சமூகத்திற்கான பொதுமையான சிந்தனையும்.
- அதீத தொழில் நுட்பம் என்றாலும், கொஞ்சமும் துருத்தல் இல்லை. அதோடு, மனிதமே வெல்லும் என்ற கருத்தைச் சொல்லி முடித்திருப்பது.
குறை
சங்ககிரி ராஜ்குமாரிடமோ, படத்திலோ குறை இல்லை. இப்படியான படத்தை திரையுலகமே கொண்டாடி மக்களிடம் சேர்த்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை என்பதே நமத ஆதங்கம்.
ஃபைனல் கமெண்ட்
படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில், இந்தப் படத்தை அவர் தனியாளாகச் சவால்களை எதிர்கொண்டு எப்படி எடுத்து நடித்தார் என்பதை வீடியோவாகக் காட்டும்போது நெஞ்சம் நெகிழ்கிறது; கண்கள் கலங்குகின்றன.
“இப்படி ஒரேயொருவர் எல்லாவற்றையும் செய்ய முடியுமா?” என்ற வியப்பு படம் முடியும் வரை நம்மைத் தொடர்கிறது.
வெறும் விளம்பரத்திற்காக அல்லாமல், பொருளாதாரச் சவால்களைத் தாண்டி உருவாகியிருக்கும் இந்த ‘ஒன் மேன்’, சினிமா வரலாற்றில் தனி மனிதனின் தன்னம்பிக்கைக்கும் கலைத் தாகத்திற்கும் சான்றாக நிற்கும் ஒரு மகத்தான படைப்பு.

