மலேசியத் துணை அமைச்சர் நடித்த முதல் தமிழ்ப்படம்… மர்மம் நிறைந்த ‘இரும்புத் தோட்டம்’!
ஏ.வி.எல்.டி புரொடக்ஷன் (AVLT Production) சார்பில் ஜெகன் ஜான் பீட்டர் தயாரிப்பில், முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகியுள்ள புலனாய்வு க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘இரும்புத் தோட்டம்’. இயக்குநர் ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ள இப்படத்தை, ‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஹேவன் பிக்சர்ஸ் (Haven Pictures) சார்பில் ஆர்.கே. கண்ணன் தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.
நட்சத்திரப் பட்டாளமும், வரலாற்றுச் சாதனையும்: நடிகர் விஜய்யின் ‘கோட்’ மற்றும் ‘ஜனநாயகன்’ ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்ற இர்ஃபான் ஜைனி இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ். வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்சலி ஜி, கலைமாமணி கே.எஸ். மணியம், நிஷா மற்றும் விஜய் நாயுடு உள்ளிட்ட பல மலேசிய நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாக, மலேசியத் தேசிய ஒருமைப்பாட்டுத் துணை அமைச்சர் மாண்புமிகு துவான் யுனேஸ்வரன் ராமராஜ், ‘துவான் தெய்வீகன்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பதவியில் இருக்கும் ஒரு துணை அமைச்சர் மலேசியத் தமிழ்த் திரைப்படத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.
கதைக்களம்: ஒரு மாணவியின் மர்மமான கொலையும், அதைச் சுற்றி ஒரு ஆசிரியர் மீது எழும் சந்தேகமுமே படத்தின் மையப்புள்ளி. தடயவியல் டிடெக்டிவ் அதிகாரி ஒருவர் உள்ளூர் காவல்துறை அதிகாரியுடன் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கும்போது, பல அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள் முடிச்சு முடிச்சாக அவிழ்கின்றன. உண்மையான கொலையாளி யார் என்பதைக் கண்டறிவதுடன், சமூகத்தின் மேலோட்டமான பிம்பத்திற்குப் பின்னால் மறைந்திருக்கும் கசப்பான உண்மைகளைத் தேடும் நீதிக்கான பயணமே இந்த ‘இரும்புத் தோட்டம்’.
இயக்குநரின் பார்வை: படம் குறித்து இயக்குநர் ஜெயதேவ் ஜெயகுமார் கூறுகையில், “நவீன சமூகத்திலும் கூடப் பேசத் தயங்கும் விஷயங்களைச் சுற்றியுள்ள மவுனத்தை உடைப்பதே ‘இரும்புத் தோட்டம்’ படத்தின் நோக்கம். குற்றப் புலனாய்வுத் திரைப்படங்களின் தீவிர ரசிகன் என்ற முறையில், கடினமான சமூக யதார்த்தங்களைப் பேசுவதற்குப் புலனாய்வு வகையின் விறுவிறுப்பையும் பதற்றத்தையும் ஒரு பாலமாகப் பயன்படுத்தியுள்ளேன். எனது சிறுவயது நினைவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்டு, எனது சொந்த ஊரான மலாக்காவில் உள்ள டெபோங்கில் முழுப் படத்தையும் படமாக்கியுள்ளோம். சமூக விதிமுறைகள் குறித்த பார்வையாளர்களின் கண்ணோட்டத்திற்கு இப்படம் நிச்சயம் சவால் விடும்” என்றார்.
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

