‘பாரிஸ் கஃபே’: ஆணவக்கொலைக்கு எதிராக புதிய சட்டத்தையே கொண்டு வரும்!
தண்டர் மீடியா கண்மணி ரங்கநாதன் மற்றும் LV என்டர்டேன்மென்ட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ள ‘பாரிஸ் கஃபே’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. சமூகத்திற்குத் தேவையான ஒரு அழுத்தமான கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சராஜ் சீலன் எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு கே. கிருஷ்ணகுமார் இசையமைத்துள்ளார், சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். இவ்விழாவில் படக்குழுவினரும் சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன்: “பாரிஸ் கஃபே ஒரு சிறிய பட்ஜெட் படம் என்றாலும், சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமான விஷயத்தைப் பேசும் வலுவான கதைக்களத்தைக் கொண்டது. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் போன்ற சிறந்த நடிகர்கள் இதில் நடித்திருப்பது எங்களுக்குப் பெருமை. இயக்குநர் எனது கணவர்; இருபது வருடங்களாக அவர் இயக்கும் முயற்சியில் இருந்தார். இந்த நிலையை அடைவதற்காகவே நிறைய புத்தகங்களை வாசித்து, தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.”
இணை தயாரிப்பாளர் வெங்கல் எம். லிங்கேஸ்வரன்: “சினிமா துறை எனக்கு முற்றிலும் புதிது. ஆனால், இந்தப் படம் முடிந்த பிறகு எனக்கு மீண்டும் ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையை இயக்குநர் உண்டாக்கிவிட்டார்.”
கலை இயக்குநர் தாமு: “இப்படத்தில் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இயல்பான இடங்களை விட, செட் போட்டுப் படப்பிடிப்பு நடத்துவதே இயக்குநருக்குப் பிடிக்கும். எனக்கு இந்த வாய்ப்பளித்ததற்கு நன்றி.”
படத்தொகுப்பாளர் வி.ஜே. சாபு ஜோசப்: “இயக்குநர் சராஜ் சீலன் அறிமுக இயக்குநர் போல இல்லாமல் அனுபவம் வாய்ந்தவர் போலப் பணிபுரிந்தார். அவரின் இருபது வருடக் கனவு நனவாகியிருப்பதைப் பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. எனது உதவியாளர்கள் லோகேஷ் மற்றும் பிரகாஷுக்கும் நன்றி.”
இயக்குநர் மித்ரன் ஜவகர்: “ஒரு இயக்குநருக்கு அவருடைய மனைவியே தயாரிப்பாளராக அமைவது மிகப்பெரிய அதிர்ஷ்டம். குரு சோமசுந்தரம் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”
ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயன்: “இயக்குநரின் இருபத்தி மூன்று வருடக் கனவை நனவாக்க ஒரு நேர்மை தேவை, அது சராஜ் சீலனிடம் உள்ளது. தலைப்பே மிகவும் ஈர்க்கும் வகையில் உள்ளது. எழுத்தும் ஒளிப்பதிவும் இருட்டிலிருந்து உருவாவது போல, எழுத்தாளரையும் ஒளிப்பதிவாளரையும் வழிநடத்தும் இயக்குநர் கடவுளின் பார்வையில் விஷயங்களைப் பார்க்க வேண்டும்.”
சிறப்பு விருந்தினர் கௌசல்யா சங்கர்: “சினிமா களத்தைப் பற்றி எனக்குத் தெரியாது என்றாலும், படம் பார்த்த பிறகு இதன் சமூகத் தேவை புரிந்தது. ஒரு பெண் தன் இணையைத் தேர்ந்தெடுக்கும் பிற்போக்குத்தனமான பார்வையை இந்தப் படம் உடைக்கிறது. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தப் படம் நிச்சயம் வழிவகுக்கும்.”
நடிகை நயனா சாய்: “வாய்ப்பளித்த இயக்குநருக்கும், ஆதரவாக இருந்த எனது அம்மாவிற்கும் நன்றி. குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் போன்ற சான்றோர்களுடன் நடித்தது சிறந்த அனுபவம்.”
நடிகர் விஜய் விஸ்வா: “தமிழ்நாடு மற்றும் மலையாள திரையுலகின் இரு முக்கியப் பல்கலைக்கழகங்களான குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் உடன் நடித்ததில் நிறையக் கற்றுக்கொண்டேன். மேலும், சிறிய படங்களுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்க அரசு சார்பாக ஒரு பிரத்யேக O.T.T. தளத்தைத் தொடங்க வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.”
நடிகர் பிபின்: “நான் நடித்த படங்களிலேயே இது மிகவும் வித்தியாசமானது மற்றும் கதை மிகவும் நேர்த்தியானது.”
நடிகர் சாய் விக்கி: “ஏழு வருடப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த நல்ல மேடை இது. இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்களைப் பார்க்காமல் திறமையை மட்டும் பார்த்து வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. ஆணவக் கொலைகள் நடக்கும் இந்தச் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர ‘பாரிஸ் கஃபே’ உதவும்.”
நடிகை அர்ச்சனா: “இது எனது பத்து வருட உழைப்பிற்கு கிடைத்த மூன்றாவது படம். சிறுவயதில் பாடி ஷேமிங் செய்யப்பட்ட எனக்கு, கேமராவில் என்னை அழகாகக் காட்டிய ஒளிப்பதிவாளருக்கு நன்றி.”
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கணேஷ்: “ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. இந்த பாசிட்டிவ் டீமுடன் பணியாற்றியது மகிழ்ச்சி.”
நடிகை அனுமோல்: “சமூகத்திற்குத் தேவையான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பேன். இயக்குநர் கொடுத்த தன்னம்பிக்கையே இதில் நடிக்கக் காரணம். கே அவர்களின் இசையில் மலையாளப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.”
நடிகர் குரு சோமசுந்தரம்: “கதை கேட்டவுடனேயே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இயக்குநரின் மனைவி தயாரிப்பாளராக மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கௌசல்யா போன்றவர்கள் வந்திருப்பது பெருமை; பெண்களை மதிக்காத எந்த நாடும் வளராது. நாம் மாறினால் தான் சமூகம் மாறும்.”
இசையமைப்பாளர் கே. கிருஷ்ணகுமார்: “நல்ல கதையைத் தேடிக் கொண்டிருந்த காலத்தில் எனக்கு அமைந்த மிகச் சிறப்பான படம் இது. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்துள்ளோம்.”
இயக்குநர் சராஜ் சீலன்: “எனது சினிமா பயணம் எனது ஆறாவது வயதில் என் தந்தை மூலம் தொடங்கியது. பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் ஆகியோரே எனது முன்னுதாரணங்கள். குரு சோமசுந்தரத்திடம் கதை சொன்னதும் உடனடியாக ஒப்புக்கொண்டார். அனுமோலும் தொலைபேசியிலேயே கதையைக் கேட்டுச் சம்மதித்தார். இந்த நீண்ட காலக் கனவு நனவாக உறுதுணையாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.”

