“ஹரிஹர வீரமல்லு படத்தில் நான் தான் ஹீரோயின்!”: சத்யராஜ் கலகல!
தெலுங்கு நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் நடித்துள்ள ஹரிஹர வீரமல்லு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. கிருஷ் ஜகர்லமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கியுள்ள படம் இது.
ஆர்ஆர்ஆர் படத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற கீரவாணி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற விழாவில் படத்தின் “தாரா தாரா” பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
படத்தின் நாயகனான பவன் கல்யாண் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் அவர் பங்கேற்க முடியாமல் போனது.
அவருக்கு பதிலாக நிகழ்ச்சியை நாயகி நிதி அகர்வால், நடிகர்கள் சத்யராஜ் மற்றும் நாசர் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடத்தி முடிக்க துணை புரிந்தனர். அதிலும், மேடையேறி நாசர் மற்றும் சத்யராஜ் இருவரும் செய்த ரகளை பார்வையாளர்களை ரசிக்கவைத்தது.
நடிகர் சத்யராஜ் எப்போதுமே ஜாலியாக பேசுவார். அவர், “இந்த படத்தில் உண்மையான ஹீரோயின் நித்தி அகர்வால் இல்லை! நான் தான் ஹீரோயின்” என்றும் கூறினார்.
அவர், “எப்போதுமே படத்தில் ஹீரோவின் வேலை என்ன.. ஹீரோயினை காப்பாற்றுவது. இந்த படத்தில் பவன் கல்யாண் என்னை தான் காப்பாற்றுகிறார், அப்போ நியாயமா பார்த்தா நான் தானே ஹீரோயின்” என படத்தின் முக்கியமான கதையையும் ரிவீல் செய்துவிட்டார் சத்யராஜ்.
