’பூர்வீகம்’ : திரைப்பட விமர்சனம்

’பூர்வீகம்’ : திரைப்பட விமர்சனம்

நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் போற்றும் படம் பூர்வீகம்.

விவசாயி போஸ் வெங்கட், தனது மகன் கதிரை உயர் படிப்பு படிக்கவைத்து அரசு அதிகாரியாக்கி நகரத்தில் வாழ வைக்க ஆசைப்படுகிறார். அதன்படியே நடக்கிறது. மகன் கதிரும் வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.

தன் மகன் வாழ்க்கையில் உயர்ந்துவிட்டாலும், ஒரு தந்தையாக போஸ் வெங்கட்டினால் மகனின் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போகிறது. மகனோடு உரிமையாக உறவாட முடியாத சூழல் ஏற்படுகிறது.மகன் நகரத்தில் வாழ வேண்டும் என ஆசைப்பட்டு தன் மகனையே இழக்கும் நிலைக்கு ஆளான போஸ் வெங்கட்டின் நிலை என்ன ஆனது.. பூர்வீகத்தை விட்டுவிட்டு நகர வாழ்க்கையில் ஈடுபட்டு, தனது பெற்றோரையே மறந்துபோகும் மனநிலைக்கு ஆளான கதிர், மனம் மாறினாரா… இதுதான் மீதிக்கதை.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாழும் கிராமத்து இளைஞர் மற்றும் பெற்றோரை கவனிக்க முடியாமல் தவிக்கும் நகரத்து குடும்பத் தலைவர் என இரண்டு வித நிலைகளில் நடித்திருக்கிறார் நாயகன் கதிர். இரண்டு வித உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் மியா ஸ்ரீ குடும்ப பாங்காக, எளிய கிராமத்துப் பெண்ணாக வருகிறார். அவரது இயல்பான நடிப்பு சிறப்பு.நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் போஸ் வெங்கட் வழக்கம்போல் இயல்பான நடிப்பு. நகர வாழ்க்கை மோகத்தால் மகனை படிக்க வைப்பது.. பிறகு மகன் தன்னிடம் இருந்து விலகும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது என கலங்க வைக்கிறார்.

போஸ் வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீ ரஞ்சனியும் நடிப்பில் அசத்துகிறார்.சங்கிலி முருகன், இளவரசு, ஒய்.எஸ்.டி.சேகர், சூசன், சிவக்குமார் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

சாணக்யாவின் இசையில் பாடல்கள்கிராமத்து கிராமிய மணத்தோடு ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை லயிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் விஜய் மோகன், கிராமத்து காட்சிகளை சிறப்பாக படம் பிடித்து அளித்து இருக்கிறார்.

படிப்பிற்காகவும், தொழிலுக்காகவும் பூர்வீகத்தை விட்டுவிட்டு நகரத்திற்கு வரும் இளைஞர்கள், தங்களது கலாச்சாரங்களையும், உறவுகளின் மேன்மைகளையும் மறந்து போகும் போது, எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுத்துகிறது என்பதையும், விவசாயத்தின் அவசியத்தையும் சிற்பபாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஜி.கிருஷ்ணன்.
இதை பிரச்சாரமாக இல்லாமல், இயல்பான நகைச்சுவையுடன் சொல்லி இருப்பது சிறப்பு.

மொத்தத்தில், ‘பூர்வீகம்’ .. அவசியம் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங் 3.5/5

Related Posts