ஒற்றைப் பனை மரம்: திரைப்பட விமர்சனம்

ஒற்றைப் பனை மரம்: திரைப்பட விமர்சனம்

ஈழத்தில் 2009 ம் ஆண்டு ஈழத்தில் இறுதிப் போரின் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் படம் ஆரம்பிக்கிறது. ஒரு போர்க்களத்தில் புலிகள் இயக்க போராளிகள் கொல்லப்பட்ட பின்னர் தனித்து நிற்கிறார், கஸ்தூரி எனும் பெண் போராளி.
தற்செயலாக அந்த இடத்திற்கு வருகிறார் சுந்தரம் என்கிற வேறு இயக்கத்தைச் சேர்ந்த போராளி.

கஸ்தூரியை தனது மனைவி என்றும், மனநலம் பாதிக்கப்பட்டு தனியே நிற்கும் சிறுமியை தனது மகள் என்றும் சொல்லி சிங்கள ராணுவத்தில் சரணடைகிறார். மூவரும் புனர்வாழ்வு முகாமில் அடைக்கப்படுகிறார்கள்.

பிறகு 2012 காலகட்டத்தில், வெளியில் வந்து ஒன்றாக வசிக்கிறார்கள். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் கதை.

போருக்குப் பிறகு சரணடையும் தமிழப் பெண்களில் ஒருவரை சிங்கள ராணுவ அதிகாரி பலாத்காரப்படுத்துவது, ‘அரசியல் பேசுறியா’ என்று தமிழர் ஒருவரை, வெள்ளை வேன் வந்துஇழுத்துச் சென்று கொடுமைப்படுத்தி அனுப்புவது ஆகிய காட்சிகள் போர் முடிந்த பிறகும் தொடரும் சிங்கள பேரினவாத கொடூர சூழலைச் சொல்கிறது.

கணவனை இழந்த தமிழ்ப்பெண், தனது பிள்ளைகளுக்காக விபசாரத்தில் ஈடுபட வேண்டிய நிர்பந்த சூழல்…  புலிகளுக்காக வெளி நாட்டில் நிதி வசூலித்த சிலர், போருக்குப் பிறகு அந்த பெரும் பணத்தை பதுக்கியது –  உல்லாசமாக ஈழம் வந்து செல்வது, தமிழ் மக்களையே சுய லாபத்துக்காக பயன்படுத்துவது…  முன்னாள் போராளிகளை பெரும்பாலான தமிழ் மக்களே மதிக்காத தன்மை ஆகியவற்றையும் சொல்லி இருக்கிறது திரைப்படம்.

அதே நேரத்தில் பட இயக்குநருக்கு, விடுதலைப்புலிகள் மீது ஒவ்வாமை இருக்கிறதோ என தோன்றும் வகையில் காட்சிகள் உள்ளன.

வேறு ஒரு இயக்கத்தைச் சார்ந்தவர் கதை நாயகன் – மக்களுக்காக உழைப்பவர்,  விடுதலைப் புலி இயக்கத்தில் இருந்தவர்கள் செயின் அறுப்பாளர்கள் – வில்லன்கள்.  அதே நேரம், “இயக்கத்தில் இருந்தவன் என்று சொல்லி எவரும் வேலை தருவதில்லை.. என்ன செய்வது” என்று அவர்கள் வருந்தும் காட்சியும் இடம் பெற்று உள்ளதையும் குறிப்பிட வேண்டும்.

புலிகளின் தலைநகராக இருந்த கிளிநொச்சி பகுதிதான் படத்தின் களம். இப்பகுதி உட்பட, ஈழப்பகுதியில் எட்டு தமிழர்களுக்கு ஒரு சிங்கள ராணுவ வீரர் இருக்கிறார். ஆனால் படத்தில் முதல் காட்சி தவிர, இறுதிவரை ஒரு சிங்கள வீரரைக் கூட படத்தில் காணவில்லை.  வெள்ளைவேன் வந்து போவது – நாயகனை ஒரு காட்சியில் சிங்கள ராணவ வீரர்கள் கொடூரமாக தாக்குவது மட்டும் விதிவிலக்கு.

இன அழிப்பில், லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.. இவர்களில் சரணடைந்த பல்லாயிரம் பேர் அடங்குவர். அந்த காலகட்டத்தில் சிங்கள ராணுவம் நடத்திய போர்க்குற்றம் குறித்து ஐ.நா.வில், அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.

“சர்வதேச நீதிபதிகள் இலங்கைக்கு வந்து விசாரிப்பார்கள்” என்று சொன்னது ஐ.நா. தீர்மானம். இதை இலங்கை அரசு இன்றளவும் ஏற்கவில்லை.

‘என்னை விசாரிக்க, நானே நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்துக்கொள்வேன்’ என்பதே இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது.

குடும்பத்தலைவர்களை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த குடும்பத்தலைவர்கள் இன்னமும் ஈழத்தில் அல்லாடுகிறார்கள்.. அவர்கள் குறித்தோ, இலங்கை சிங்கள அரசின் செயல்பாடு குறித்தோ படத்தில் இல்லை.

இலங்கை சிங்கள படை முகாம்களுக்காக, தமிழர் பகுதியான வடக்கு கிழக்கில் ஏராளமான தமிழர் நிலங்கள் பறிக்கப்பட்டன. இன்றும் அவை சிங்கள ராணுவ வசம் இருக்கின்றன. இதனால் தமிழர்கள் பலர், விவசாய பூமியோ, வாழ இடமோ இன்றி தவிக்கிறார்கள். இலங்கை சிங்கள ராணுவம் மட்டுமல்ல.. இலங்கை அரசின் தொல்பொருள் துறையும் ஏதாவது காரணம் காட்டி தமிழர் நிலத்தை அபகரிப்பது தொடர்கிறது.

இது குறித்து படம் அழுத்தமாகச் சொல்லவில்லை.  ‘ராணுவ கேண்ட்டீனில் வேலை இருக்கு.. போறியா..’ என்கிற ஒரு வசனத்தோடு முடித்துவிடுகிறார்கள்.

தமிழர் பகுதிகளை ஆக்கிரமிக்கும்  சிங்கள அரசு – ராணும் அங்கு புத்தகவிகார்களை சிங்கள அரசு – ராணுவம் இப்போதும் கட்டி வருகிறது. வலிகாமம், காங்கேசன் துறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களில்கூட அப்படி புத்த விகார்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

வடக்கு கிழக்கில் இன்னமும் நூற்றுக்கணக்கான முகாம்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். எட்டு தமிழர்க்கு ஒரு சிங்கள ராணுவ வீரர் அங்கே நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

இதை எல்லாம் படத்தில் சொல்லவில்லை.

அதே நேரம், நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு தமிழப்பெண், கள் குடிக்கவும், ஆண் சுகத்துக்கும் அலைவதாக மிக விரிவாக காட்சிப் படுத்தி இருக்கிறார் இயக்குநர்.  ஒரு வேளை, ‘உயர் சாதி’ பெண்ணாக அந்த கதாபாத்திரம் படைக்கப்பட்டு இருப்பதும், கள் இறக்கும் ‘தாழ்ந்த சாதி’யைச் சேர்ந்தவரை  நாடுவதும் சாதிப் பிரச்சினையை உள்ளீடாக வைத்துச் சொல்லப்பட்டு இருக்கிறதோ!

தவிர, முன்னாள் போராளி, “எதிரிகூட அனுசரணையா இருக்கான்.. நம்மவங்கதான் பிரச்சினை பண்றாங்க” என பேசுவதாக வசனம் வைத்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

1990களில் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து இஸ்லாமியரை வெளியேற்றினர் புலிகள். இஸ்லாமியர்ள் சிலர் விடுதலைப் போரில் ஈடுபட்டதாக சொல்லப்பட்டது உண்டு. அந்த நிலை மாறி, பெரும்பாலான இஸ்லாமியர்கள் சிங்கள படையினரின் ஆதரவோடு தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. அதையடுத்து அவர்களை புலிகள் வெளியேற்றியதாகவும் தகவல் வெளியானது.

இந்தப் படத்தில், “இஸ்லாமியரை வெளியேற்றியதற்கு மன்னிப்பு கோருகிறேன்” என்கிறார் முன்னாள்  புலிப்படை பெண்.

தவிர, இது குறித்து ஏற்கெனவே (நிஜமாகவே) புலிகள் வருத்தம் தெரிவித்ததும் நடந்தது.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்த விசயத்தை மீண்டும் கிளறுவது பகையைத் தொடர வழி வகுக்காதா என்கிற கேள்வி எழுகிறது.

தமிழரின் நியாயமான உரிமைகளுக்காக போராட ஒருவர், புதிதாக சங்கம் துவங்க முயற்சி ப்பதாக படத்தில் காண்பித்து இருக்கிறார்கள். பல சங்கங்கள், அமைப்புகள், கட்சிகள் ஈழத்தில் இருக்கும்போது, எந்த அமைப்பும் இல்லை என்பது போல காட்சிப் படுத்தி இருப்பது, இருக்கும் இயக்கங்கள் எதுவும் சரியில்லை என்கிற விமர்சனத்தை இயக்குநர் வைக்கிறாரோ..!

தவிர அப்படி புதிய சங்கம் அமைக்க நினைக்கும் ஒருவரை, சக தமிழரே கொல்வதாக காட்சிப் படுத்தி இருக்கிறார்.

அதாவது தமிழர்கள், கொடுமைகளை அனுபவத்து அடங்கிக் கிடப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்கிற உணர்வை ஏற்படுத்துவதாக அமையாதா?

இயக்குநரைப் பொறுத்தவரை, ஈழத்தின் பிரச்சினைகளை முழுமையாக காட்சிப்படுத்துவதைவிட,  தமிழர்களுக்குள் நிலவும் விவகாரங்களை முதன்மைப் படுத்தி பதிவு செய்ய விரும்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

குறிப்பாக, விடுதலைப்புலிகள் அமைப்பினர் செயல்பட்ட காலத்தில், வெளிநாடுகளில் நிதி வசூலித்தவர்கள் பலர்,  2009 இன அழிப்புக்குப் பிறகு அந்த நிதியை பதுக்கிவிட்டனர் என்கிற விமர்சனம் உண்டு. அப்படி பதுக்கியவர்கள், ஈழ மக்களுக்கு அந்த நிதியை செலவிட வேண்டும் என்பது இயக்குந் புதியவன் ராசையாவின் நோக்கம் என்பதாகவே நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

– டி.வி.சோமு