நரிவேட்டை: திரைப்பட விமர்சனம்
கடந்த 2003-ம் வருடம், கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முத்தங்காவில் பழங்குடி மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தை – உண்மைச் சம்பவத்தை – ரத்தமும் சதையுமாக வெளிப்படுத்தி இருக்கும் படம் நரிவேட்டை.
விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டதால் தந்தை தற்கொலை செய்துகொண்டுவிட, ஆழப்புழாவில் தாயுடன் வாழ்கிறார் டொவினோ தாமஸ். சொற்ப நிலத்தை மாமன்காரர் பராமரிக்க, இவரோ தனக்கு தகுதியான பெரிய அரசு வேலை கிடைத்தால்தான் செல்வேன் என்று உறுதியாக இருக்கிறார்.
குடும்ப வறுமை ஒரு பக்கம், காதலிக்கு திருமண ஏற்பாடு நடப்பது மறுபக்கம் என அவரைத் துரத்த, கிடைக்கும் கான்ஸ்டபிள் வேலைக்குச் செல்கிறார்.
அப்போது, வயநாடு மலைப் பகுதியிலிருந்து அரசால் வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்கள், மீண்டும் தங்கள் வாழ்விடத்தில் குடியேற முயற்சிக்க.. இதை அரசு ஏற்க மறுக்க.. பழங்குடியினர் வனப்பகுதிக்குள் போராட்டம் நடத்த ஆரம்பிக்கின்றனர்.
காவல் உயர் அதிகாரி சேரன் தலைமையில், சீனியர் காவலர் சூரஜ் வெஞ்ரமூடு உள்ளிட்டோருடன், டொவினோ தாமஸும் செல்கிறார்.
அதன் பிறகு நடக்கும் கொடுமைகள் – கொடூரங்கள்தான் மீதிக்கதை.
முதல் பாதியில், அம்மாவுக்கு அடங்காத பிள்ளையாக பெரிய வேலைக்குத்தான் போவேன் என்கிற கனவுடன் ஊரைச் சுற்றிவரும் ஜாலியான இளைஞனை கண் முன் நிறுத்துகிறார் டொவினோ தாமஸ். இடைவேளைக்குப் பிறகு அப்படியே தலைகீழாக மாறுகிறார். அநீதியைக் கண்டு பொங்கி, அதனால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனிதனாக வாழ்ந்திருக்கிறார்.
அட, சேரனா இது! வழக்கமாக சாஃப்டான கதாபாத்திரங்களில் வருபவர், இதில் காவல் உயர் அதிகாரியாக வருகிறார். அதுவும் வஞ்சக மனிதராக வலம் வந்து மிரட்டுகிறார்.
எதார்த்தவாதி தலைமை காவலராக சூரஜ் வெஞ்சரமூடு, மனதில் நிற்கிறார். டொவினோ மீது அவர் காட்டும் பாசம் நெகிழ வைக்கிறது. அவரது முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
உண்மைக் கதாபாத்திரமான பழங்குடி உரிமைகள் போராளி சி.கே.ஜானுவாக வரும் ஆர்யா சலீம் சிறப்பாக நடித்து உள்ளார். பழங்குடி இளைஞராக வரும் பிரணவ் தியோஃபைன் அருமையான நடிப்பை அளித்து இருக்கிறார்.
மலை, வயல், காயல் என கேரளாவின் அழகை அள்ளித் தந்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்.
ஜேக்ஸ் பிஜாய் இசையில், ‘மின்னல்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் ஈர்க்கின்றன.
ஷமீர் முகமதுவின் எடிட்டிங் கச்சிதம். அதுவும் கடைசி இருபது நிமிடங்களில் அபாரம்!
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுத்தாளர் அபின் ஜோசப் கதையாக எழுத, அதை இயக்கி இருக்கிறார் அனுராஜ் மனோகர்.
வனவிலங்கு சரணாலயம், தேசியப் பூங்கா என்று அரசுகள் அறிவித்து, மலைகளிலிருந்து பூர்வீக பழங்குடி மக்கள் வெளியேற்றப்படுவதையும், அதை எதிர்க்கும் எளிய மக்கள் மீது அரசி பயங்கரவாதம் கட்டவிழ்த்துப் படுவதையும் நேர்மையாகக் காட்சிப்படுத்தி உள்ளனர்.
அதை ஆவணப்படம் போல் அல்லாமல், டொவினோ தாமஸின் குடும்பம், காதல், வேலைக்குச் சேர்வது, அங்கே ஹெட் கான்ஸ்டபிளுடன் நட்பு என ஒரு நாவலைப்போல் எடுத்துச் சென்ற விதம் சிறப்பு.
பழங்குடிகளின் பரிதாபகரமான வாழ்க்கை, அவர்களது நில உரிமைப் போராட்டம், அரசுகளின் ஏமாற்றுவித்தை – பயங்கரவாதம் என முடிந்தவரை வெளிப்படுத்தி இருக்கிறது படம்.
ரேட்டிங்: 3.3/5
