மையல்: திரைப்பட விமர்சனம்
ஊரைவிட்டு ஒதுங்கி ஒரு குடிசை. அதில் வாழும் சூனியக்கார கிழவி. அவளுக்கு ஓர் அழகான பேத்தி. ஆடு ஒன்றை களவாடிவிட்டு சிக்கிக்கொள்ளும் திருடன் தப்பி, அந்த குடிசைக்கு வருகிறான். கால்வேறு உடைந்துவிடுகிறது. அப்போது கிழவியும் இல்லை.
பேத்தியே அந்த திருடனுக்கு சிகிச்சை அளிக்கிறாள். பிறகு வரும் கிழவியும், “உடனடியாக செல்லாதே… உன்னைத் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்” என்கிறாள். அதனால் திருடன் அங்கேயே சில நாட்கள் தங்குகிறான்.
இன்னொரு பக்கம், தனியாக வாழும் ஜமீன் தம்பதி கொலை செய்யப்படுகிறார்கள். அந்த வழக்கை இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது.
இந்த இரண்டு கதைகளும் ஒன்றிணையும் இடத்தில் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. அவை என்ன என்பதுதான் மையல்!
படத்தின் நாயகன், சேது.
மைனா படத்தில் சிறைத்துறை அதிகாரியாக வந்து, தனது இயல்பான – அற்புதமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். ஏனோ (இடையில் தமிழில் ஒரு படம் தவிர) இப்போதுதான் வந்திருக்கிறார்.
முந்தைய படத்தில் காவல் அதிகாரி.. இந்தப் படத்தில் திருடன். தனது நடிப்பாற்றலால் இந்த கதாபாத்திரத்துக்கும் உண்மைத் தன்மையை அளித்து உள்ளார்.
ஆடு திருடும் ஆரம்ப காட்சியிலேயே சேது ஈர்த்துவிடுகிறார்.. பிறகு காவலாளிகளிடம் இருந்து தப்பி ஓடுவது, கிணற்றில் விழுந்து நாயகி மூலம் காப்பாற்றப்படுவது, அவள் மீது காதல் கொள்வது, காவலர்களிடம் உண்மையைச் சொல்லி கெஞ்சுவது, இறுதியில் ஆக்ரோசத்தை வெளிப்படுத்துவது என்று படம் முழுவதையும் தாங்கிப் பிடிக்கிறார்.
இப்படி திறமையான இளைஞரை, தமிழ்த் திரையுலகம் ஏன் பயன்படுத்தவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. மைனா படத்திலயே சிறந்த துணைக் கதாபாத்திரம் விருது கிடைத்திருக்க வேண்டும். மையலில் சிறந்த நடிகர் விருது கிடைக்கும். வாழ்த்துகள்.
சூனியக்கார கிழவியின் பேத்தியாக வருகிறார் நாயகி சமிர்தி தாரா. ஊர் உலகமே அறியாத அப்பாவிப் பெண் என்பதை நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், காதல் தோல்வி என சிறப்பாக உணர்வுகளை அளித்து இருக்கிறார்.
சூனியக்கார கிழியாக ரத்னகலா, மிரட்டலாக நடித்து இருக்கிறார்.
இதர கதாபாத்திரங்களில் வரும் பி.எல்.தேனப்பன், சூப்பர் குட் சுப்ரமணி, சி.எம்.பாலா என அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். பொதுவாக அவருக்கு வலதுசாரிக்காரர் என்கிற பெயர் உண்டு. ஆனால் இந்தப் படத்தில், பாதிக்கப்படும் எளிய மக்களின் பக்கம் நின்று கதை சொல்லி இருக்கிறார். சிறப்பு.
இசை: அமர்கீத் எஸ்.
பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. அதே போல பின்னணி இசையும், ஒரு கதாபாத்திரம் போலவே படம் முழுதும் உடன் வருகிறது. பாராட்டுகள்.
பால பழனியப்பனின் ஒளிப்பதிவு ஈர்க்கிறது. ஊரைவிட்டு ஒதுங்கி அத்துவானக்காடு… அங்கே ஒரு குடிசை என வித்தியாசமான லொகேசன். அதை அழகுபடுத்திக் காட்டுகிறது கேமரா. அதே போல இரவு நேர காட்சிகளும் அருமை.
வெற்றி சண்முகத்தின் எடிட்டிங் கச்சிதம். கதைக்குத் தேவையான வேகத்தை அளித்திருக்கிறது. நடக்கும் நேரத்தில் பறக்கும் காட்சிகளைக் கண்டு பழகியவர்களுக்கு, இது கொஞ்சம் ஸ்லோ என தோன்றும். ஆனால் சரியான வேகத்தில் படம் செல்ல எடிட்டிங் உதவுகிறது. வாழ்த்துகள்.
ஜெயமோகனின் எண்ணத்தை சிறப்பாக திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஏ.பி.ஜி.ஏழுமலை. வித்தியாசமான – இயல்பான கதையை இயக்கியதன் மூலம் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
சிறப்பான படத்தை அளித்த ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல் எல் பி நிறுவனத்துக்கும் பாராட்டுகள்.
ரேட்டிங்: 3.6/5
விமர்சனம்: டி.வி.சோமு
