‘நண்பன் ஒருவன் வந்த பிறகு…’ விமர்சனம்

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு…’ விமர்சனம்

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்கிற மூதுரையை, இந்தக் காலத்துக்கு ஏற்ப, ஜாலி, கேலி, ரகளையாக – அதே நேரம் நெகிழ்ச்சியாக – அளித்திருக்கும் திரைப்படம், ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு…’

நடுத்தர குடும்பத்தில் பிறந்த அனந்த், தக்கி முக்கி, பி.இ. முடிக்கிறார். ஆனால் கிரியேட்டிவிட்டியில் கிங்! நீங்களும் ஹீரோ ஆகலாம் என்கிற பெயரில் ரியாலிட்டி ஷோ நடத்தவும் அதற்காக ஒரு ஆப் துவக்கவும் திட்டமிடுகிறார். அதில் பல பிரச்சினைகளை சந்திக்கிறார். அவர் வெற்றி பெற்றாரா என்பதே கதை.சராசரி குடும்ப இளைஞரை கண்முன் நிறுத்தி இருக்கிறார் நாயகன் அனந்த். தந்தையிடம் தன் விருப்பங்களை தெரிவிப்பது, பிறகு அவரது அறிவுரையை ஏற்று நடப்பது, தாழ்வு மனப்பான்மையில் அழுவது, காதலியை நினைத்து உருகுவது என சிறப்பாக நடித்து இருக்கிறார்.

அவரது நண்பர்களாக வருபவர்களும் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.

அனந்தின் காதலியாக வரும் பவானி ஸ்ரீக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். ஆனாலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்திி கவனத்தை ஈர்க்கிறார்.

அஜித் ரசிகராக வரும் வினோத் ரகளையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நண்பர்களிடம் காட்டும் பாசம்- உரிமையில் மனதுக்கு நெருக்கமாகிறார். அவரது பிளாஷ்பேக்கும் முடிவும் மனதை உருக்குகின்றன.

ஏ.ஹெச்.ஹாசிப் இசை தாளம்போட வைக்கிறது. தனுஷ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளது கூடுதல் சிறப்பு.தமிழ் செல்வனின் ஒளிப்பதிவு,  ஃபென்னி ஆலிவரின் எடிட்டிங் ஆகியவை படத்துக்கு பலம்.

“நம்பிக்கையுடன் போராடு…” என்கிற கான்செப்டில் ஆயிரமாயிரம் கதைகள் வந்திருக்கின்றன. இன்னும் ஆயிரமாயிரம் படங்கள் வரவேண்டும். காலம் தோறும் தேவைப்படும் கான்செப்ட் இது.

இதைச் சொன்னதற்காகவும்.. அதை சுவாரஸ்யமாக சொன்னதற்காகவும் படத்தின் நாயகன் + இயக்குநர் அனந்துக்கு பாராட்டுகள்!

ரசிக்கு பார்க்க வேண்டிய படம்!

 

Related Posts