விமர்சனம்: ‘போட் ‘: நமக்காக சிம்புதேவன் ‘வலித்திருக்கும்’ படகு!

விமர்சனம்: ‘போட் ‘: நமக்காக சிம்புதேவன் ‘வலித்திருக்கும்’ படகு!

சின்னஞ்சிறு படகில் நடக்கும் கதை… பெரிய பெரிய மெஸேஜ்களை மனதில் பதியும்படி சொல்கிறது.

இதுதான் போட்.

வெள்ளையர்களிடமிருந்து விடுதலை வேண்டி இந்தியா முழுதும் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருந்த 1940களில் கதை நடக்கிறது. இரண்டாம் உலகப் போர் காலகட்டம். சென்னை மீது ஜப்பான் குண்டுகளை வீசுகிறது. இன்னும் வீசும் என்கிற பதட்டமான சூழல்.

மீனவரான யோகி பாபு ஆங்கிலேயரிடம் கைதாகி இருக்கும் தன் தம்பியை மீட்க சென்னைக் கடற்கரைக்குப் பாட்டியுடன் செல்கிறார். அப்போது விமானங்கள் பறந்து வர… ஜப்பான் குண்டு வீசப் போகிறது என்கிற பதட்டம் சூழ்கிறது.

கடலுக்குள் சென்று விட்டால் தாக்குதலில் இருந்து தப்பித்துவிடலாம் என்று யோகி பாபு தன் பாட்டியுடன் படகுக்கு விரைகிறார். அப்போது தாங்களும் தப்பிக்க யோகிபாபுவிடம் தஞ்சம் கேட்டு வருகின்றனர் சிலர். அவர்களுக்கும் படகில் இடம் அளிக்கிறார்கள் யோகிபாபுவும், அவரது பாட்டியும்.

தஞ்சம் கேட்டு படகில் ஏறிய வட இந்தியர் சாம்ஸ், பிராமணர் சின்னி ஜெயந்த் – அவரது மகள் கௌரி கிஷன், கேரள இஸ்லாமியர் ஷாரா, சிறுவனான மகனுடன் கர்ப்பிணி மதுமிதா, நூலகரான எம் எஸ் பாஸ்கர், ஆங்கிலேயே காவல் அதிகாரி ஆகியோருடன் படகு புறப்படுகிறது.இடையில் படகில் ஓட்டை ஏற்பட.. மூன்று பேர் கடலில் குதிதித்தால்தான் இதரர்கள் தப்பிக்கலாம் என்கிற நிலை.. வானில் போர் விமானங்கள்.. கடலில் சுறாவின் ஆபத்து.. என பரபர பதட்டத்துடன் நகர்கறது கதைப்படகு.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதை அற்புதமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

படகோடு சேர்த்து கதையையும் தனது வலிமையான துடுப்பாட்டலில் கரை சேர்க்கிறார் யோகி பாபு. மண்டேலா, பொம்மை நாயகி படங்களுக்குப் பிறகு யோகி பாபுவுக்கு பெயர் சொல்லும் கதாபாத்திரம்.பூர்வீக சென்னைவாசியாக இயல்பான கோபம், கொப்பளிக்கும் கருணை, இக்கட்டான நிலையில் வெடிக்கும் ஆத்திரம் என அற்புதமாக நடித்து உள்ளார்.

யோகிபாபுவை காதலிக்கும் பெண்ணாக கௌரி கிஷன் சிறப்பாக நடித்து உள்ளார். பார்வையிலேயே காதலைச் சொல்வது, யோகிபாபு தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவரைக் கொலை செய்ய இதரர்கள் திட்டமிட, அதை எதிர்ப்பது என அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

கர்ப்பிணியாக வரும் மதுமிதாவும் உணர்ச்சிகரமான நடிப்பை அளித்து உள்ளார். கடலில் குதித்து தான் பலியானாலும் பரவாயில்லை மற்றவர்கள் பிழைக்கட்டும் என அவர் எடுக்கும் முடிவு.. நெகிழ்ச்சி.

பாட்டி ஷீலா, எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் , சாம்ஸ், ஜெஸ்ஸி என அனைவரின் நடிப்பும் சிறப்பு.

கடலும், படகும் மட்டுமே கதைக்களன் என்கிற சவாலை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். கடலின் விடியல் – அந்தி – இரவு என காட்சிகளின் ஒளியில் ரசிக்க வைக்கிறார். எஎந்தக் காட்சிகள் கிராபிக்ஸ் என்பது தெரியாத அளவுக்கு சிறப்பான உழைப்பு.

கதாபாத்திரங்களில் ஒன்றாகவே படம் முழுதும் உடன் வருகிறது ஜிப்ரானின் இசை. ஆகா.. அற்புதம்!

ஒரே லோகேசன்.. மிகக் குறைவான நடிகர்கள் என்கிற நிலையிலும் சுவாரஸ்யத்துக்கு குறைச்சலின்றி சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் சிம்பு தேவன். யார் தீவிரவாதி என்று நாம் குழம்ப.. இறுதியில் யாரென தெரிந்ததும் ஏற்படும் அதிர்ச்சி… படகில் ஏற்றி காப்பாற்றிய படகோட்டியையும் அவரது பாட்டியையுமே இதரர்கள் கொலை செய்ய திட்டமிடுவது.. இறுதியில் ஏற்படும் ட்விஸ்ட்.. எலியையும் ஒரு கதாபாத்திரமாக ஆக்கி இருப்பது… ‘நக்கி, கொமோட்டோ’ என்று எதிர்கால ஃபுட் டெலிவரி கம்பெனிகளை கிண்டலடித்து இருப்பது.. இப்படி நிறைய சொல்லலாம்.

மக்களை அடிமையாக்க ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி – பிரிவினைவாதம், வட இந்தியர்களின் திணிப்புகள், உள்ளூரிலேயே இருந்தும் ஒதுக்கும் பிராமணர்கள் என பல்வேறு பிரச்சினைகளை மிகச் சிறப்பாக சுட்டிக்காட்டி இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

வந்தேறிகள் கொண்டாட்டமாக வாழ, பிழைப்புக்குத் திண்டாடும் பூர்வீகக் குடிகளின் வலியை, யோகி பாபு கதாபாத்திரம் மூலம் அற்புதமாக சொல்லி இருக்கிறார்.

அதுவும் அந்த கடைசி ( கிளைமாக்ஸ்) வசனம் அற்புதம்!

அதே நேரம், கருத்தை உள்வாங்கி, படத்துடன் பயணிக்க வேண்டும்.

நமக்காக, சிம்புதேவன் ‘வலித்திருக்கும்’ போட் இது!

 

Related Posts