லெனின் பாண்டியன்: விமர்சனம்
புதுகை ஜெகபர் அலி, முகவை மோகன், நெலலை ஜெகதீசன்…
சட்டவிரோதக் கல் குவாரிகள் மற்றும் மணல் கொள்ளைக்கு எதிராகக் களமாடி, கனிமக் கொள்ளை மாபியாக்களால் கொல்லப்பட்ட நீண்ட பட்டியலில் உள்ள சில பெயர்கள் இவை.
தூத்துக்குடி மாவட்டம் அகரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற ஏழை விவசாயி, மணல் கடத்தல் கும்பலுக்கு எதிராகப் போராடியதால் கொலைத் தாக்குதலுக்கு ஆளானார். நீதிமன்ற உத்தரவுப்படி, அவருக்கு 24 மணி நேரமும் ஒரு காவலர் பாதுகாப்புக்கு இருக்கிறார்.
இப்படியான உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, சமூகத்துக்கான செய்தியையும் அதனூடே நுண்ணிய மனித உணர்வுகளையும் சொல்கிறது ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம்.
கிராமத்தின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மணல் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு முதியவர்… அவருக்காகத் தண்டனைப் பணியாக நியமிக்கப்படும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி — இருவருக்கும் இடையிலான உறவையும் போராட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டது இதன் கதையோட்டம். மணல் மாபியா, அதிகாரிகள்-அரசியல்வாதிகள் கூட்டணி, காவல் துறையின் சித்ரவதைகள் ஆகியவற்றையும் தோலுரித்துக் காட்டுகிறது.
நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் பேரனான தர்ஷன் கணேசன், நேர்மையான காவல் அதிகாரியாக நாயகனாக அறிமுகமாகியுள்ளார். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு, கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். நேர்மையாக வாழ ஆசைப்படும் காவலர், அதிகாரிகளின் தவறான கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய தயங்கும் மனநிலை, வேறு வழியில்லாமல் தவறு செய்ய வேண்டிய சூழல்… ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக நடித்துள்ளார்.
மணல் கொள்ளையால் பாதிக்கப்படும் முதியவர் கதாபாத்திரத்தில் கங்கை அமரன் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். இவருடைய கூர்மையான வசன உச்சரிப்பும், எதார்த்தமான பாவங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பின் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரோஜா, தனது அனுபவமிக்க நடிப்பால் கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்த்துள்ளார். இறுதிக் காட்சியில், கணவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் கண்ணீர் வரவைத்துவிடுகிறார்.
ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியன், யுகேந்திரன், அர்ச்சனா, ஜெயப்பிரகாஷ், போஸ் வெங்கட் மற்றும் இளவரசு ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இசை – இளையராஜா. திரைக்கதை, நடிப்பு, ஒளிப்பதிவு என அனைத்துமே ஒரு இசையைப் போல ஈர்ப்பதாலோ என்னவோ, இளையராஜாவின் இசை தனித்துத் தெரியவில்லை.
ஏ.எம். எட்வின் சகாயின் ஒளிப்பதிவு அதிஅற்புதம். கிராமத்து நிலப்பரப்பையும், மணல் மேடுகளையும் கண் முன் நிறுத்தியிருக்கிறது. சிறிய வீடு, நீதிமன்றம் என உட்புறக் காட்சிகளையும் சிறப்பாகப் படம்பிடித்திருக்கிறது.
நாகூரான் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு கச்சிதம். கதையின் வேகத்தையும், ஆக்ஷன் காட்சிகளின் விறுவிறுப்பையும் சரியாக அளித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன், முதல் படத்திலேயே சமூகப் பொறுப்புள்ள ஒரு கருப்பொருளைக் கையில் எடுத்திருக்கிறார். அதோடு, தான் சொல்ல நினைத்ததைச் சுவாரஸ்யமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் சொல்லியிருக்கிறார். இரட்டைப் பாராட்டுகள்!
அனைவரும் பார்க்க வேண்டிய படம் என சாதாரணமாகச் சொல்லிவிட்டு கடக்க முடியாது; பார்த்தே ஆக வேண்டிய படம்.
ரேட்டிங்: 3.9/5

