“மிசா கேள்விகள் அனைத்துக்கும் பதில்..!”: “தி மிசா மார்க்” இயக்குநர்!
சென்னை சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் பிரசாத் லேபில், இயக்குநர் ஶ்ரீதரன் உருவாக்கத்தில் வெளிவந்துள்ள “மிசா வடுக்கள்” எனும் புத்தகமும், “தி மிசா மார்க்” என்ற ஆவணக் குறும்படமும் அறிமுகம் செய்யப்பட்டன.
இவ்விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி முதன்மைப் பிரதியை வெளியிட, அதனை இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மூத்த தலைவர் கே. பாலகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், சுப. வீரபாண்டியன், தியாகு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் இதில் பங்கேற்றனர்.
திரையிடல் குறித்தும் படைப்பு குறித்தும் இயக்குநர் பேசுகையில்: சென்னைச் சிறையில் நிகழ்ந்த கொடூரங்களை ஆவணப்படுத்த திருச்சி சிவாவின் எழுத்துக்களே தூண்டுகோலாக இருந்தன. தொடக்கத்தில் தேர்தல் சூழல் காரணமாக அமைதி காக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்திய போதிலும், பின்னர் இதற்கான ஒப்புதல் கிடைத்தது. தற்போதைய அரசியல் சூழலில் எழும் பல அய்யங்களுக்கு விடை தருவதோடு, அன்றைய கொடுமைகளை இன்றைய இளம் தலைமுறையினருக்கு உணர்த்துவதே இதன் முதன்மை நோக்கம்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி ஆற்றிய உரை: வரலாற்றைத் திரிப்பவர்களுக்கும் திருடுபவர்களுக்கும் நடுவே, அன்றைய நிகழ்வுகளுக்கு நாங்கள் இன்றைக்கும் நேரடிச் சாட்சிகளாக விளங்குகிறோம். தியாகம் என்பது சந்தைப்படுத்தக் கூடிய ஒன்றல்ல; அது முழுக்க முழுக்க மக்களுக்கானது. சிறைச்சாலைகளில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் திராவிட இயக்கத்தினரும் அடைந்த துன்பங்கள் வெறும் தழும்புகள் மட்டுமல்ல, ஆறாத ரணங்கள்.
அன்றைய தாக்குதலால் ஆற்காடு வீராசாமி இன்றும் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறையில் ஸ்டாலின் தாக்கப்பட்ட போது அவரைத் தாங்கிப்பிடித்த கரங்கள், இன்றைக்கும் அவருக்கு உறுதுணையாகவே இருக்கின்றன.
திமுக மீது வீசப்படும் வீண் பழிகள் அதை மேலும் வலுப்படுத்துமே தவிர வீழ்த்தாது. தற்காலிகமாக உருவாகும் கிரகணத்தால் சூரியனின் ஒளி என்றென்றும் மறைந்துவிடாது; அதுபோலவே உண்மைகள் ஒருநாள் வெல்லும்.
திமுக எம்பி திருச்சி சிவா ஆற்றிய உரை: தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்யும் தேவையற்ற வேலைகளை திமுக அமைதியாகக் கவனித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறது. பொறுமை காப்பது பலவீனம் அல்ல. சரியான தருணத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதை இயக்கம் நிச்சயமாகச் செய்யும். வெறும் அதிகாரத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு திமுக செயல்படவில்லை; ஜனநாயகப் பண்புகளைக் காப்பதற்காகத் தனது ஆட்சியையே இழந்த வரலாறு அதற்கு உண்டு.

