“70 எலிகளோட ஷூட்டிங்… ராம் அண்ணன் ஏரியாவே தனி!”: ‘ஏழு கடல் ஏழு மலை’ பட விழாவில் சூரி கல கல!
திரையரங்குகளில் அக்டோபர் முதலாம் தேதி வெளியாகக் காத்திருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா, சென்னை தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி வளாகத்தில் மிகக் கோலாகலமாகக் கொண்டாட்டத்துடன் நடந்து முடிந்தது. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் ராமின் இயக்கத்தில் உருவான இந்த விழாவில் திரண்ட பட்டாளமும், மேடையில் எகிறிய உற்சாகப் பேச்சுகளும் விழா அரங்கை அப்படியே அதிர வைத்தன.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “தரமணி சமயத்தில் ராம் அண்ணனைச் சந்திச்சப்போ, இவரை வச்சு படம் பண்ண நமக்கெல்லாம் தகுதி இருக்கான்னு ஒரு தயக்கம் இருந்துச்சு. அப்புறம் சிம்பு, வெங்கட் பிரபு கூட படம் பண்ணி ஜெயிச்சு வந்து நின்னப்போ, ராம் அண்ணன் கிட்ட இருந்து இந்தக் கதை வந்துச்சு. கதையைக் கேட்டதும் எனக்கு ஒரே ஆசைதான், ராம் அண்ணன் கூட கண்டிப்பா வேலை செய்யணும்! நிவின் பாலி, சூரி, அஞ்சலி, யுவன் சங்கர் ராஜான்னு எல்லாம் அமைஞ்சு சூப்பரா வந்துருக்கு. அவர் கூட இன்னும் எத்தனை படம் வேணும்னாலும் சந்தோஷமா வேலை செய்வேன்!”
இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி “நான் யுவன் சாரோட வெறித்தனமான ரசிகன். கீபோர்டு கத்துக்கிட்டதுல இருந்து மியூசிக் புரொடக்ஷன் வரைக்கும் எல்லாமே அவரோட பாட்டை வச்சுதான் கத்துக்கிட்டேன். மரியான் டைம்ல ஏ.ஆர்.ரஹ்மான் சார்கிட்ட ‘யுவன் பாடுறதைப் பாக்கணும்’னு அனுமதி கேட்டப்போ உள்ள போக முடியல. ஆனா இன்னைக்கு அதே யுவன் சார் கூட இந்த மேடையில் ஒன்னா உட்கார்ந்திருக்கிறதை நினைச்சா வார்த்தைகளே வரல!”
இயக்குநர் பார்த்திபன் “சூரியோட வளர்ச்சி சாதாரணமானதில்ல, அது மிகப்பெரிய உழைப்பு. ராம் சினிமாவுல ஒரு பெரிய மந்திரவாதி! அவரோட கோபமும் ஸ்டைலும்தான் படத்தோட முதல் ஹீரோவா நிக்கும். நிவின் பாலி கிட்ட ஒரு ‘நடிக்காதத் தன்மை’ இருக்கு, அதுதான் அவரோட பிளஸ். யுவன் குரல் காதல் தோத்தா கேக்கத் தோண்ற அளவுக்கு காந்தக் குரல். டிரெய்லர் பார்க்கும்போது கதை என்னன்னு தெரியாத மர்மம் இருக்கு, அதுதான் இயக்குநரோட கெத்து!”
இயக்குநர் வெற்றிமாறன் “பாலுமகேந்திரா சார் ஒருநாள் உணர்ச்சிவசப்பட்டு ‘ஒருத்தன் நல்லா கதை சொல்றான்டா’ன்னு ராமைப் பத்தி சொன்னாரு. ‘கற்றது தமிழ்’ல இருந்து இப்போ ‘ஏழு கடல் ஏழு மலை’ வரைக்கும் மனுஷன் தன்னை அப்படியே விரிவுபடுத்திக்கிட்டே போறாரு. மனுஷங்களோட ஒலியும் மத்த உயிரினங்களோட ஒலியும் ஒன்னா கேக்குறதுதான் இந்த படத்தோட ஆகப்பெரிய சிறப்பம்சம்!”
கதாநாயகி அஞ்சலி “இந்தப் படம் எனக்கு ஒரு ‘Larger than life’ அனுபவம். நிவின் பாலி கூட வேலை செய்றது செம சேலஞ்ச், குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்ல கலக்கிடுவாரு. சூரியை எனக்கு ரொம்ப நாளா தெரியும். குற்றாலத்துல ஒரே டிரெட்மில்ல ரெண்டு பேரும் மாற்றி மாற்றி ஓடி ஒர்க்அவுட் பண்ணதெல்லாம் இப்போ ஞாபகம் வருது. ராம் சார் – யுவன் காம்பினேஷன் எப்போதுமே மேஜிக்கல் மேஜிக்தான்!”
நடிகர் சூரி “மண்டாடி பட வெற்றியோட கொண்டாட்டத்துல இருக்குற எனக்கு ராம் அண்ணன் பட வாய்ப்பு கிடைச்சது செம ஹேப்பி! ஆனா ‘ராம் அண்ணன் ஏரியா கொஞ்சம் ரிஸ்க்கான ஏரியா’ன்னு பயமுறுத்துனாங்க. ஆனா அங்க போனப்புறம்தான் தெரிஞ்சுது, அதைவிட சிறந்த இடம் எதுவுமே இல்லன்னு! ஷூட்டிங் ஸ்பாட்ல மழைக்கு ஒரு ஆக்சன், டிரெயினுக்கு ஒரு ஆக்சன், காத்துக்கு ஒன்னுன்னு போய்க்கிட்டே இருக்கு… கடைசியா 9-வது ஆக்சன் 9 எலிகளுக்கு, 10-வது ஆக்சன் தான் எங்களுக்கு! செம ஜாலியான எக்ஸ்பீரியன்ஸ்!”
நடிகர் நிவின் பாலி “ரொம்பவே ஹேப்பியா இருக்கு! ரொம்ப நாளுக்கு அப்புறம் ‘கம்பேக்’ங்கிற வார்த்தையை என் பேரப்போட்டு கேக்குறேன். பர்சனலா சொன்னா எனக்கு ஒவ்வொரு படமுமே கம்பேக் முயற்சிதான். தமிழ் சினிமாவுக்கு இந்த ‘ஏழு கடல் ஏழு மலை’ கண்டிப்பா ஒரு தரமான கம்பேக்கா இருக்கும்!”
இயக்குநர் ராம் “ஒரே வரியில சொல்லணும்னா எலியோ, யானையோ, மரமோ, புல்லோ எல்லாமே உயிர் தான்… அதுதான் இந்த படத்தோட கதை. ‘கற்றது தமிழ்’ பண்ணப்போ நா.முத்துக்குமார்தான் என்னை யுவன் கிட்ட கூட்டிட்டு போனாரு. அன்னைக்குத் தொடங்குன நட்பு இன்னைக்கு வரைக்கும் கெத்தா தொடருது. யுவன் என்மேல வச்சிருக்க அன்பும் தன்னம்பிக்கையும்தான் இந்த படத்தோட பலம்!”

