D 56:கருப்பசாமி கோயிலில் கிடா விருந்துடன் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் புதிய படம்!
மாரனாடு கருப்பணசாமி கோயில் வளாகமே திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் உருவெடுக்கும் D-56 திரைப்படத்தின் படப்பிடிப்பு, மண்ணின் மணத்தோடு சிவகங்கை மண்ணில் கோலாகலமாகத் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ தந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படம் என்பதால், ஆரம்பத்திலேயே சினிமா வட்டாரத்தில் எகிறிக் கிடக்கிறது எதிர்பார்ப்பு!
Sithara Entertainments, Primark Productions மற்றும் Srikara Studios இணைந்து தயாரிக்கும் இந்த கிராமத்துப் படைப்பிற்கு, இளமைத் துள்ளல் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மெட்டமைக்கிறார்.
பூஜை விழாவில் பேசிய வைகைப்புயல் வடிவேலு, “மாரனாடு கருப்பசாமி கோயிலில் பிறந்த ஒவ்வொருத்தனுமே சாமிதான். இந்த ஊர் மக்களின் அன்பைப் பார்க்கும்போது மாநாடே நடப்பது போல இருக்கிறது. தனுஷுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்திருக்கிறேன். இது எந்த அரசியல் சாயலும் இல்லாத, அசல் மனிதர்களின் கதை” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அவரைத் தொடர்ந்து பேசிய எஸ்.ஜே.சூர்யா, “வழக்கமாக சென்னையில் நடக்கும் பூஜையைத் தாண்டி, மக்களோடும் கருப்பசாமியின் அருளோடும் இங்கு நடத்துவது பெரு மகிழ்ச்சி. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, அசல் மண்ணின் கதையை எழுத்தால் உயிர்ப்பித்திருக்கிறார்” எனப் படக்குழுவைப் பாராட்டினார்.
நாயகன் தனுஷ் பேசுகையில், “பின்னாடி இருக்கும் இந்த சாமியையும், முன்னாடி இருக்கும் உங்களையும்தான் நான் முழுசா நம்புறேன். வந்திருக்கும் அனைவரும் கடா விருந்தை வயிறார சாப்பிட்டுப் பத்திரமாக வீடு போய் சேருங்க!” எனச் சுருக்கமாகப் பேசி, ரசிகர்களின் கரவொலியைப் பெற்றார்.
வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, ப்ரீத்தி முகுந்தன், விஜய்குமார் எனத் திராணிமிக்க நட்சத்திரப் பட்டாளத்துடன் களம் காணும் D-56, அடுத்தகட்ட அறிவிப்புகளை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது!

