டோரத்தி: விமர்சனம்: இயற்கைப் பிழை அல்ல… பாலினப் பௌர்ணமி!

டோரத்தி: விமர்சனம்: இயற்கைப் பிழை அல்ல… பாலினப் பௌர்ணமி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியாகியிருக்கும் ‘டோரதி’ திரைப்படம், தமிழ் சினிமாவில் இதுவரை தொடப்படாத ஒரு புதுமையான கதைக்களத்தில் நட்பையும் அன்பையும் பேசும் வித்தியாசமான படைப்பு.

கதைக்களம்:

1990-களின் பின்னணியில் மதுரை கிராமம் ஒன்றில் தொடங்குகிறது கதை. சிறுவயதிலிருந்தே உயிர் நண்பர்களாக வலம் வரும் கார்த்தியும் (ரிஷிகாந்த்) சுப்புவும் (சனந்த்) அடிதடி, ரவுசு என வலம் வருகிறார்கள். ஆணவ வெறி பிடித்த குடும்ப பின்னணியைக் கொண்ட சுப்புவின் வாழ்க்கையில் டோரதி (கீர்த்தி சுரேஷ்) வருகைக்குப் பிறகு பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. எதிர்பாராத ஒரு சம்பவத்தால் டோரதியின் வாழ்க்கை சட்டென முடிய, அதைத் தொடர்ந்து சுப்புவின் வாழ்க்கையும் புயலாக மாறுகிறது. சுப்பு திருநங்கையாக மாறும் சூழல் உருவாக, குடும்பத்திலும் ஊரிலும் பெரும் புயல் வீசுகிறது. தன் சொந்த மகனையே கொல்லத் துடிக்கும் குடும்பத்தின் அழுத்தத்திற்கு இடையே, கார்த்தி – சுப்புவின் நட்பு என்னவாகிறது என்பதே படத்தின் மையக்கரு.நடிப்பு:

சனந்த்: இப்படத்திற்காகத் தேசிய விருதே எதிர்பார்க்கப்படும் அளவுக்கு சனந்த் தன் வாழ்நாள் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாதியில் துடுக்கான மதுரை இளைஞனாகவும், இரண்டாம் பாதியில் திருநங்கையாக மாறி அன்பிற்காகத் தவிக்கும் காட்சிகளிலும் மெய்சிலிர்க்க வைக்கிறார்.

  • ரிஷிகாந்த்: கோபக்கார இளைஞனின் சீற்றம், நண்பன் மீதான பாசம், அவனை வேறு ஒரு கோணத்தில் பார்க்கும்போது ஏற்படும் அகப்போராட்டம் எனச் சவாலான கதாபாத்திரத்தில் கச்சிதமாக ஸ்கோர் செய்கிறார்.

  • கீர்த்தி சுரேஷ்: குறைவான திரைநேரமே வந்தாலும், ஈகோ பார்க்காமல் நடித்துக் கதையின் ஆன்மாவிற்குத் தேவையான வலுவைக் கூட்டியிருக்கிறார்.

  • முத்துகுமார்: சுப்புவின் அப்பாவாக வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். விசில் ஊதிக்கொண்டே அவர் செய்யும் ஆணாதிக்க கோரங்கள் மனதை உலுக்குகின்றன.

  • பிற நடிகர்கள்: சௌந்தரராஜா, ராம், திருநங்கை ஜீவா மற்றும் சிறு வயது கதாபாத்திரங்களில் நடித்த சிறுவர்கள் என அனைவரும் கதையின் வலுவான தூண்களாக நின்று படத்தைத் தாங்குகிறார்கள்.

இசை: 

இப்படத்திற்குப் மிகப்பெரிய பலம் மற்றும் உயிர் என்றால் அது இளையராஜாவின் இசைதான். ‘கல்யாண விருந்து’, ‘முத்துமணி’ போன்ற பாடல்களும், ‘வண்ணக்கிளி’ பாடலும் உணர்வுகளை உச்சத்திற்குக் கொண்டு செல்கின்றன. பழைய பாடல்களின் ரிதம், ஆடு/சேவல் சண்டை காட்சிகள், கிளைமாக்ஸ் என ஒவ்வொரு இடத்திலும் பின்னணி இசையால் காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார். உணர்ச்சிப்பூர்வமான கிளைமாக்ஸ் காட்சியில் அவரின் குரலும் இசையும் நம்மை உரைய வைக்கின்றன.

ஒளிப்பதிவு: 

ஒளிப்பதிவாளர் எஸ். திரு, 90-களின் மழையில் தோய்ந்த மதுரை கிராமத்தையும், இரண்டாம் பாதியில் வரும் வடஇந்திய லாரி பயணத்தின் அத்துவான நிலப்பரப்பையும் மிக அழகாகப் படம்பிடித்துள்ளார். கிணற்றுக்குள்ளான காட்சிகள், வெளிச்சமும் நிழலும் கலந்த பின்னணி எனத் திரையில் ஒரு மாயாஜாலத்தையே உருவாக்கியிருக்கிறார்.இயக்கம்:  

ஆணாதிக்கம், சாதிய வெறி மற்றும் திருநங்கைகளின் அகநிலையைப் பற்றிப் பேசும் ஒரு மிகச் சவாலான, கத்தி மேல் நடக்கும் கருவை கையில் எடுத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

  • முதல் பாதியில் காமெடி, நட்பு, ஆக்சன் என நகர்த்தி, இரண்டாம் பாதியை ஒரு ரோட் டிராவல் த்ரில்லராக மாற்றி எதிர்பாராத திருப்பங்களைக் கொடுத்துள்ளார்.

  • திருநங்கைகளுக்கும் பெண்களுக்கும் ஆதரவான நச் வசனங்கள் கைதட்டல் பெறுகின்றன.

  • விரசமோ ஆபாசமோ இன்றி, ஒரு நுட்பமான விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலையும் மனித மனங்களின் கொடூரத்தையும் மிகச் சிறந்த சினிமாக் கிராஃப்ட்டாக செதுக்கியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக படம் எப்படி?

வழக்கமான ஃபார்முலா படங்களைத் தாண்டி, மாற்று சினிமா மற்றும் பாலின சமத்துவத்தைப் பேசும் ஒரு தைரியமான முயற்சி ‘டோரதி’. ஒரு உணர்வுபூர்வமான நட்பின் வழியே சமூகத்தின் பிற்போக்குத்தனங்களுக்குச் சாட்டையடி கொடுத்துள்ள இந்தத் திரைப்படம், ‘இறைவி’ படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜின் கலைப் பயணத்தில் ஒரு மாஸ்டர்பீஸ் படைப்பாக நிலைத்து நிற்கும்.