அப்பாவின் பெயரைச் சொல்லத் தடை போட்டாங்க!: கலங்கிய ‘தாய்க்கிழவி’ ராதிகா!
திரைத்துறையில் அரைசதமடிக்கும் ‘கலையரசி’ ராதிகா சரத்குமார், ‘தாய்க் கிழவி’ பட விழாவில் தனது கடந்த கால வலிகளையும், நிகழ்காலப் பெருமிதத்தையும் ஆவேசமாகவும் நெகிழ்ச்சியாகவும் பகிர்ந்து கொண்டார். அந்த விழாவின் ஹைலைட்ஸ்:
“நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என் தந்தை எம்.ஆர். ராதாவின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. என் தந்தையின் பெயரைச் சொல்லக் கூட விடாமல் என்னை அவமானப்படுத்தியவர்கள் பலர் உண்டு. அதனால் தான் இத்தனை காலம் ‘ராதிகா’ என்று மட்டும் போட்டுக்கொண்டேன். ஆனால், இன்று பல தடைகளைத் தாண்டி என் நடிப்பால் எனக்கென ஒரு இடத்தை உருவாக்கிவிட்டேன். இப்போது மிகப்பெருமையாகச் சொல்வேன்… நான் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் மகள்! இந்த ‘தாய்க் கிழவி’ படத்தின் மூலம் என் அப்பாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன்” என்று மேடையில் கணீர் குரலில் முழங்கினார் ராதிகா.
ரஜினி செய்ய வேண்டிய ரோல்!
இந்தப் படத்தின் பின்னணி குறித்துப் பேசிய அவர், “இது உண்மையில் ரஜினிகாந்த் சார் நடிக்க வேண்டிய படம். ஆனால் அவர் இந்த வேடத்தில் நடிக்க மாட்டார் என்பதால், அந்த கேரக்டரை அப்படியே பெண்ணாக மாற்றி என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள்” என ஒரு சீக்ரெட்டை உடைத்தார். மேலும், இந்தப் படத்தில் கிழவி வேடத்திற்காக நான்கரை மணி நேரம் மேக்கப் போட்டபோது தமக்குக் கோபம் வந்ததாகவும், அப்போது ‘அவ்வை சண்முகி’யாக அசத்திய கமல்ஹாசனின் உழைப்பை நினைத்து வியந்ததாகவும் நெகிழ்ந்தார். “ராதிகா… நீ தெரியக்கூடாது, கதாபாத்திரம் தான் தெரிய வேண்டும்” என்று கமல் சொன்ன மந்திரச்சொல்லே தன்னை இந்த வேடத்தில் நடிக்கத் தூண்டியதாகக் குறிப்பிட்டார்.
முக்கியத் தகவல்: சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பிப்ரவரி 27-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
