காட்மேன், எம்புரான்… இன்னொரு பக்கம் சாவா, சபர்மதி ரிப்போர்ட்!

காட்மேன், எம்புரான்… இன்னொரு பக்கம் சாவா, சபர்மதி ரிப்போர்ட்!

டி.வி.சோமு சிறப்புப் பக்கம்:

பிருத்வி இயக்கத்தில் மோகன்லால் நாயகனாக நடித்த லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக வந்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது எம்புரான். பான் இண்டியா படமாக பல மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

அதே நேரம், “குஜராத்தில் இஸ்லாமியருக்கு எதிராக இந்துத்துவ ஆட்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை அப்பட்டமாக காண்பித்து இருக்கிறது.. அதற்கு தலைமை தாங்குபவரின் பெயரை பஜ்ரங் என்று வைத்து இருப்பது மனதைப் புண்படுத்துகிறது” என்று இந்துத்து இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதையடுத்து வில்லன் பெயரை மாற்றுவதுடன் 17 இடங்களில் கட் அல்லது ஒலியை மியூட் செய்வது என படக்குழு தீர்மானித்து உள்ளது. பட நாயகன் மோகன்லால், “குறிப்பிட்ட காட்சிகளால் ஏற்பட்ட மனவருத்தங்களுக்காக மன்னிப்பு கோருகிறேன்” என தெரிவித்து உள்ளார்.இதே நிலை, 2020ல் ‘காட்மேன்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இணையத் தொடருக்கு ஏற்பட்டது. இந்த இணையத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்க, இளங்கோ தயாரித்தார். அது ஜீ நிறுவனத்தின் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் வெளியிட இருந்த நிலையில், இந்துத்துவவாதிகளால் எதிர்ப்பு கிளம்பியது.

சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்டோர், “இந்தத் தொடரின் விளம்பரத்தில் சங்கராச்சாரி போன்ற தோற்றத்தில் கதாபாத்திரங்கள் உள்ளன. இந்தத் தொடரை வெளியிடக்கூடாது” என்றனர்.

இதையடுத்து தொடர் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இன்றளவும வெளியாகவில்லை.அவ்வளவு ஏன், சமீபத்தில், பிரிட்டன் நாட்டின் சார்பாக, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட சந்தோஷ் என்கிற திரைப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது.

இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியரான சந்தியா சூரி என்பவர் இயக்கிய படம் இது. பல நாட்டில் நடந்த சர்வதேச திரைவிழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்றது.

கணவன் இறந்த பிறகு காவல் பணியில் சேரும் வட இந்திய பெண்ணின் கதையைக் கொண்டது இந்தப் படம். இதில்ல், அங்கு நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் பேசப்படுகின்றன. இதனாலேயே இங்கே தடை.இதற்கே நேர் மாறான சம்பவம், ‘சாவா’ என்கிற திரைப்படத்தால் நடந்திருக்கிறது.
சத்ரபதி சிவாஜியின் மகன், சம்பாஜி மகாராஜா பற்றிய படம் என வெளியாகி உள்ளது.

சம்பாஜியை அவுரங்கசீப் கொடூரமாக கொல்வதுதான் கதை. இதை இந்து -இஸ்லாமிய விரோதமாக காண்பிக்கிறது படம்.

ஏற்கெனவே மகராட்டிர மாநிலத்தில் இருக்கும் அவுரங்கசீப் சமாதியை சிதைக்க – அகற்ற வேண்டும் என இந்துத்து அமைப்புகள் அவ்வப்போது கலவரம் செய்து வருகின்றன. இந்த நிலையில், சாவா படம் வெளியாக, மீண்டும் கலவரம் வெடித்தது.

இது குறித்து மகராட்சிர முதலமைச்சர் பட்னாவிஸ் அம்மாநில சட்டப் பேரவையில்ல், ” ‘சாவா’ திரைப்படம் உணர்ச்சிகளைத் தூண்டி பிரச்சினைக்கு காரணமாகிவிட்டது” என்றார்.

இப்படிப்பட்ட படத்துக்கு உ.பி. உள்ளிட்ட பாஜக ஆளும் சில மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளன. ஒன்றிய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இப்படத்தைப் பாராட்டுகிறார். நாடாளுமன்றத்தில் தனது சகாக்களுடன் படத்தைப் பார்க்கிறார்.

இதே போலத்தான் தி காஷ்மீர் பைல்ஸ்,  தி கேரளா ஸ்டோரி ஆகிய படங்களை இந்துத்துவாதிகள் கொண்டாடினர்.

இதே போல தனது சகாக்களுடன் மோடி பார்த்த படம், சபர்மதி ரிப்போர்ட்.

குஜராத் முதலமைச்சராக இவர் பதவி வகித்தபோது – 2002 ல் – கோத்ரா ரயில் விபத்து சம்பவத்தை வைத்து இஸ்லாமியருக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது. இதில் மோடி மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

ரயிலில் தீ பற்றியது விபத்து என ரயில்வே ஆய்வுக்குழு அறிக்கை அளித்தது. ஆனால் “அது சதி” என்றனர் இந்துத்துவாதிகள். இந்துத்துவவாதிகளின் குரலை பிரதிபலிக்கும் படம்தான், சபர்மதி ரிப்போர்ட். அதைத்தான் பாராட்டி, தன் சகாக்களுடன் பார்த்து மகிழ்ந்தார் நரேந்திரர்.

அதே நேரம், கோத்ரா சம்பவம் குறித்த பி.பி.சி. ஆவணப்படத்தை இங்கே தடை செய்தார்.

இப்படி பார்த்து உணர வேண்டிய படங்கள் தடை செய்யப்படுவதும் தடை செய்ய வேண்டிய படங்கள் கொண்டாடப்படுவதும்தான் பாஜக ஆட்சியில் நடக்கிறது.

– டி.வி.சோமு

Related Posts