‘EMI (மாத்தவணை)’ : திரைப்பட விமர்சனம்

‘EMI (மாத்தவணை)’ : திரைப்பட விமர்சனம்

வழக்கமான காதல், மோதல் என்று இல்லாமல், நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையை பாதிக்கும், தவணை முறை திட்டம் குறித்து அழுத்தமாகச் சொல்லி இருக்கிறது படம்.

நாயகன் சிவாவும் நாயகி ரோஸியும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கிறார்கள். நாயகனுக்கு, தன் காதல் மனைவியை வசதியாக வைத்து வாழவேண்டும் என்று ஆசை. ஆகவே தவணை முறையில் செல்போன், டூ வீலர், கார் எல்லாம் வாங்குகிறார். திடுமென வேலை போய்விடுகிறது. தவணை கட்ட முடியவில்லை.

அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

நாயகன் சதாசிவம் சின்னராஜ், தனது கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை அளித்து இருக்கிறார்.  காதலியிடம் காட்டும் நேசம்,   ஆசை ஆசையாய் பொருட்களை தவணை முறையில் வாங்குவது, பிறகு தவணை கட்ட முடியாமல் தவிப்பது என்று சராசரி குடும்ப இளைஞனை கண்முன் நிறுத்துகிறார்.

நாயகி சாய் தன்யாவும் சிறப்பாக நடித்து உள்ளார்.  தவணை முறையில் பொருட்களை வாங்குவதை எதிர்ப்பது, வீட்டை விட்டு வெளியேறுவது, பிறகு மனது கேட்காமல் தன் தந்தையிடம் உதவி கேட்பது என்று ஒரு குடும்பத் தலைவியை கண்முன் நிறுத்துகிறார்.நாயகனின் நண்பராக வருகிறார், பிளாக் பாண்டி. நண்பர்களுடன் ஜாலியாக ரகளை செய்யும்போதும், பைக்கில் காதலியுடன் செல்கையில்  ஏஜெண்ட்டிடம் வண்டியை பறிகொடுத்து தவிக்கும்போதும் சிரிக்க வைக்கிறார். நண்பனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு நொந்து நூலாகி ஆவேசப்படும் காட்சியில் கலங்க வைக்கிறார்.

மொத்தத்தில் சிறப்பான நடிப்பு.

நாயகனின் இன்னொரு நண்பராக வருபவர் செயற்கையான நடிப்பால் எரிச்சலூட்டுகிறார்.

சன் டிவி ஆதவன் கலெக்சன் ஏஜண்ட்டாக வந்து மிரட்டுகிறார்.

நாயகியின் தந்தையாக வரும் இயக்குநர் பேரரசு, இயல்பாக நடித்து கவர்கிறார்.

லொள்ளு சபா மனோகர், டிகேஎஸ், செந்தி குமாரி, ஓஏகே சுந்தர் உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரம் அறிந்து நடிப்பை அளித்து உள்ளனர்.

சிம்பு குரலில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ” என் நண்பனே ” என்ற இசை ஆல்பதிற்கு இசையமைத்த ஸ்ரீநாத் பிச்சை இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ‘அடி சூர அழகே ‘  என்ற பாடலில் காதல் ரசம் வழிகிறது. அதே போல, ‘ஐயோ சாமி ஈ.எம்.ஐ’ பாடல், நமக்கு ஒரு பாடம்.  ஆனால் பின்னணி இசை சுமார்.

ஒளிப்பதிவு : பிரான்சிஸ். சின்ன ஊர், இரு வீடுகள், ஒரு கம்பெனி என சில லொகேசன்கள்தான். ஆனால் அலுப்பைத் தராத அளவுக்கு பலவித கோணங்களில் காட்சிப் படுத்தி உள்ளார்.ஆர். ராமரின் எடிட்டிங் கச்சிதம்.

நாயகன் சதாசிவம் சின்னராஜ்தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கி உள்ளார்.

வழக்கமான காதல் படமாகவோ, மசாலா படமாகவோ, த்ரில்லராகவோ இல்லாமல்… வாழ்க்கைக்குத் தேவையான ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு அதை சுவாரஸ்யமாக கொடுக்கவும் முயற்சித்து இருக்கிறார். பாராட்டுக்கள்.

மொத்தத்தில் வரவுக்கு மீறிய வசதிகளோடு வாழ ஆசைப்பட்டு தவணை முறையை நாடுவோர் அவசியம் பார்க்க வேண்டிய படம்.

ரேட்டிங்: 3.1/5

Related Posts