“ரஜினிக்கு வழி விடுவது ஏன்?”: ‘மெய்யழகன்’ விழாவில் சூர்யா விளக்கம்!
சூர்யா – ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, கார்த்தி, அரவிந்த் சுவாமி, ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடிக்கும் படம் மெய்யழகன்.
படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (சனிக்கிழமை) மாலை கோவை கொடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். அப்பாடலை ஒலிப்பதிவு போது எடுக்கப்பட்ட வீடியோ இசை நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
பிறகு, பேசிய நடிகர் சிவக்குமார், ” சூர்யா, கார்த்தி சினிமாவிற்கு வரக்கூடாது என ஒளித்து வைத்து இருந்தேன். ஆனால் கடவுள் அவர்களை சினிமாவிற்கு வர வைத்துவிட்டார். தமிழர்கள் போட்ட பிச்சை தான் இவ்வளவும், எப்போதும் உங்களின் அன்பும், ஆதரவும் வேண்டும்” என்றார். இயக்குனர் பிரேம்குமார், “மெய்யழகனை முதலில் சிறுகதையாக த்தான் உருவானது. பின்னர் படமாக பண்ண சொல்லியவர் விஜய் சேதுபதி தான். இந்தக் கதையை யாரும் பண்ண முன்வருவார்கள் நான் நம்பவில்லை. ஆனால் கார்த்தி சார் படித்து விட்டு ஒகே சொல்லியது மிகவும் மகிழ்ச்சி.
அரவிந்த்சாமி சார் படம் பண்ணலாம் என்று சொல்லிய பின்புதான் படத்திற்கு முழு உருவம் கிடைத்தது. இது குடும்ப உறவுகள் பற்றிய படம்” என்றார்.
நடிகர் கார்த்தி, “பிரேம்குமார், தான் இயக்கிய 96 படத்தில் காதலிப்பவர்களை கதற விட்டார், காதல் பண்ணாதவர்களை ஏங்கவிட்டார். இந்த படத்தில், குடும்பத்தின் உறவுகளும், வேர்களும் குறித்து கொண்டு வந்து இருக்கிறார்.
பிரேம் குமார் என்ற இயக்குநரை வெளியே கொண்டு வந்த நடிகர் விஜய் சேதுபதி நன்றி சொல்ல வேண்டும் ” என்றார்.
நடிகர் சூர்யா, ““நேற்று இரவு இந்த படத்தை நான் பார்த்தேன். அனைவரும் அருமையாக நடித்து உள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதில் அனவருக்கும் நன்றி சொல்லி வருகிறேன். இரத்த சொந்தங்கள் நம்மை சுற்றி நிறைய பேர் இருக்கிறார்கள். எதையும் எதிர்பார்க்காமல் கொடுக்கும் அன்பு மிக பரிசுத்தமானது. பருத்திவீரன் படத்திற்கு பிறகு கார்த்தியை கட்டி பிடித்து பாராட்ட வைத்த படம் இது.
ஒரே இரவில் நடக்கும் படம் தான் மெய்யழகன்” என்றார்.
தொடர்ந்து பேசிய சூர்யா, “கங்குவா படம் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டரை வருடமாக, ஆயிரம் பேருக்கு மேல் உழைக்கும் படம் என்றால், அது கங்குவா தான்.
அக்டோபர் 10 ம் தேதி வேட்டையன் படம் வருகிறது. ரஜினி சாருக்கு வழிவிடுவோம். அவர் மூத்தவர், சினிமாவின் அடையாளம். 50 வருடங்களாக நடித்து வருகிறார். அவர் படம் வருவது தான் சரி. கங்குவா ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்து கொள்வீர்கள். கங்குவா படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். வெறுப்பை காண்பிக்க வேண்டாம். அன்பை மட்டும் பகிர்வோம். கங்குவா படம் வரும்போது நின்று பேசும்” என்று முடித்தார் சூர்யா.