“படத்தில் என்னுடைய 100% உழைப்பு இருக்கும்!’: ‘அன்பில் அவன்’ விழாவில் அசோக் செல்வன்!

“படத்தில் என்னுடைய 100% உழைப்பு இருக்கும்!’: ‘அன்பில் அவன்’ விழாவில் அசோக் செல்வன்!

திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான பாதையை அமைத்துக் கொண்டு வெற்றிநடை போடும் அசோக் செல்வன் நடிப்பில், ‘போர் தொழில்’ விக்னேஷ் ராஜா கதையில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை நகரில் கலைகட்டியது. படக்குழுவினருடன் திரையுலக நண்பர்களும் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த சுவாரஸ்யமான விழாவின் தொகுப்பு இதோ!

தயாரிப்பாளர் அபிநயா பேசுகையில், “தரமான கதை பிடித்ததால் மட்டுமே இப்படத்தைத் தொடங்கினோம். அசோக் எனது சகோதரன் மட்டுமல்ல, நல்ல நண்பனும் கூட. அன்புள்ள தம்பதியர் சிக்கலில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இதன் கதை” என்றார்.

ஐங்கரன் கவிதா பாண்டியன் பேசுகையில், “அசோக் செல்வன் என் சகோதரன் போன்றவர். அனைவரும் திரையரங்கு சென்று படம் பாருங்கள்” என அழைப்பு விடுத்தார். நடிகர் கௌதம் ராம் கார்த்திக், “அசோக் என் கனவு நண்பன். படத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது” என நெகிழ்ந்தார்.

திங்க் மியூசிக் சந்தோஷ், பாடல்களின் பிரம்மாண்ட வெற்றியையும் கிளைமாக்ஸ் காட்சியின் திருப்பத்தையும் சுட்டிக்காட்டினார். படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா மற்றும் ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன் ஆகிய இருவரும் அசோக் செல்வன் கொடுத்த நம்பிக்கையையும் தங்களுக்கு அளித்த சுதந்திரத்தையும் நன்றியோடு நினைவுகூர்ந்தனர்.

நடிகர் ஹரிஷ் கல்யாண், “அசோக் அபாரத் துணிச்சல் மிக்கவர். இன்னும் ஐந்து ஆண்டுகளில் பான் இந்தியா நட்சத்திரமாக வருவார்” என வாழ்த்தினார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தான் ரசித்துச் செய்த படம் இதுவெனக் குறிப்பிட்டார்.

கதாசிரியர் விக்னேஷ் ராஜா, வடஇந்தியாவில் காரில் செல்லும்போது மழைக்காகப் பிளக்ஸ் பேனரைக் கட்டியபோது ஏற்பட்ட அனுபவமே இக்கதையின் முதல் விதை என்றார். வில்லன்களாக நடித்த கதிர்பாலு மற்றும் மஹா டெல்லி கணேஷ் ஆகியோர் தங்கள் வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தனர். மற்றொரு வில்லனாக நடித்த மலையாள நடிகர் சபுமோன், குளிரிலும் ஓட ஓட விரட்டி வேலை வாங்கிய அனுபவத்தை நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டார்.

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், இப்படத்தை தன் சொந்தக் கம்பெனி படம் போல உணர்ந்து பணியாற்றியதாக உருக்கமாகப் பேசினார். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “அசோக் சினிமா மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்” எனப் பாராட்டினார். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, தன் வாழ்த்துகளைப் பதிவு செய்தார்.

இயக்குநர் ஆர். கார்த்திகேயன் பேசுகையில், “2017 முதல் பல தடங்கல்களைத் தாண்டித்தான் இப்படம் உருவானது. அசோக் செல்வனும் அபிநயாவும் சிரமப்பட்டு வீட்டை அடமானம் வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார்கள். கமல் சாரைப் போல சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிலேயே முதலீடு செய்கிறார் அசோக்” எனப் புகழாரம் சூட்டினார். கதாநாயகி ப்ரீத்தி முகுந்தன், அபிநயாவை சக்திமிக்க பெண் என்றும், அசோக் செல்வன் தன்னைத் தத்தெடுத்து வழிநடத்திய நண்பர் என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

விழாவின் நாயகன் அசோக் செல்வன் தனது நிறைவுரையில் பேசும்போது:

“நான் நடித்து படம் வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. சினிமாவில் இரண்டரை ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் போன்றது. சினிமா என்றால் ஏதோ செய்துவிட்டுப் போவதல்ல; அது மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் பார்த்துத் தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறோம். போஸ்டரில் என்னுடைய பெயர் இருந்தால் அதில் 100 சதவீதம் உழைப்பு இருக்க வேண்டும் என நினைப்பேன்.

எனக்கு அக்கா பலமாகவும் அண்ணன் பலமாகவும் இருக்கும் என் அக்காவிற்குத்தான் முதல் நன்றி. பட்ஜெட் தாண்டியபோது தயங்காமல் வீட்டின் பத்திரத்தைக் கொடுத்த என் அம்மா, அப்பாவுக்கு நன்றி. நண்பன் கார்த்திகேயன் இயக்குநராகியிருப்பதும், விக்னேஷ் ராஜா, அஸ்வத் ஆகியோர் பெரிய இடத்திற்குச் சென்றிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இப்படத்தைப் பெரிய படமாக்கியுள்ளார். ப்ரீத்தி முகுந்தன் நான் முதலீடு செய்த பிட்காயின் போன்றவர். நூறு இருநூறு ஆடிஷன் பார்த்துத் தேர்வான மஹா, கதிர் பெரிய இடத்திற்கு வருவார்கள். கதையை மட்டும் கேட்டு ஆதரவு தந்த கருணாமூர்த்தி சாருக்கும் என் மனைவி கீர்த்திக்கும் நன்றி!”

இவ்வாறாகப் படக்குழுவினரின் நெகிழ்ச்சியான கதையாடல்களுடனும், அசோக் செல்வனின் உழைப்பும் நம்பிக்கையும் மிளிரும் வார்த்தைகளுடனும் விழா இனிதே நிறைவுற்றது.

Related Posts