ஆறு கண்களும் ஒரே பார்வை : விமர்சனம்  

ஆறு கண்களும் ஒரே பார்வை : விமர்சனம்  

சுப்ரியா பிலிம்ஸ் தயாரிப்பில்  ஜடையனூர் வி. ஜானகிராமன் இயக்க,  ராஜ்நிதன், கெனி, வாசு விக்ரம், கும்கி ஆனந்தி, அமிர்தலிங்கம், ஆதவன் உள்ளிட்டோர் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் ஆறு கண்களும் ஒரே பார்வை. ஒளிப்பதிவு – சீனிவாசன்.  எடிட்டிங் – T பன்னீர்செல்வம்,  சண்டை பயிற்ச்சி – டைகர் சுகுமார், இசை – பிருத்திவி,  மக்கள் தொடர்பு –  சேலம் சரண்.

எது உண்மையான காதல் என்பதை உருக்கமாகச் சொல்லியிருக்கும் படம், ஆறு கண்களும் ஒரே பார்வை.தந்தை இல்லாத, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண் கெனி.  அவரை மூன்று பேர் காதலிக்கிறார்கள். ஆனால், ஆண்களையே வெறுக்கும் கெனி, அந்த மூவரையும் கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால் திடீரென, அவரது தாய்க்கு மருத்துவ செலவு ஏற்பட, மூவரையும் காதலிப்பது போல் நடித்து, சிகிச்சைக்காக  தலா ஒரு லட்சம் வாங்குகிறார். தாயும் நலமுடன் திரும்புகிறார்.

பிறகு விசயம் தாய்க்கு தெரியவர, “மூவரில் ஒருவரை திருமணம் செய்து கொள்” என்கிறார். ஆனால் கெனி மறுக்கிறார்.  ஆனால், மூவருமே, கெனி தங்களைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு எப்படி தீர்வு கண்டார்கள் என்பதுதான் கதை.நாயகி கெனி, சிறப்பாக நடித்து உள்ளார். எப்போதும் கண்களில் சோகத்தை தேக்கி வைத்து, கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து நடித்து இருக்கிறார்.  ஆண்கள் மீது வெறுப்பாக பேசும் காட்சியில் மிரள வைக்கிறார்.

இளமையான அம்மாவாக வருகிறார் கும்கி ஆனந்தி.  பிளாஷ்பேக் காட்சிகளில் அவர்தான் நாயகி. வேலைக்காரனை நம்பி வந்து ஏமாறுவது, அவனிடமிருந்து தப்பிக்க உதவுவதாகச் சொல்லி இன்னொருவன் ஏமாற்ற.. சோகத்தில் உழலுவது என சிறப்பாக நடித்து உள்ளார்.

“மூவரில் ஒருவரை திருமணம் செய்துகொள்” என்று மகளிடம் உறுதி காட்டுவதிலும், மகள் தற்கொலைக்கு முயலும் காட்சியில் பதறுவதிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகியை உருகி உருகி காதலிக்கும் இளைஞனாக ராஜ்நிதன் வருகிறார். காதலி இறந்த பிறகு, அவரது அம்மா தரும் பணத்தை மறுத்து உருக்கத்துடன் பேசும் காட்சியில் ஸ்கோர் செய்கிறார்.

ஒரு தலைக்காதலர்களாக வரும் மற்ற இருவரும்கூட, இயல்பாக நடித்து உள்ளனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசு விக்ரம், அப்பாவி தந்தையாக வரும் அமிர்தலிங்கம், வில்லன் ஆதவன் என அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

ஆரோன் இசை, பிரித்வியின் பின்னணி இசை, சீனிவாசனின் ஒளிப்பதிவு அனைத்தும் படத்துக்கு பலம்.

காதல் குறித்த பார்வையை வித்தியாசமான முறையில் சுவாரஸ்யமாக அளித்து உள்ளார்  இயக்குநர் ஜடையனூர் வி. ஜானகிராமன்.

 

 

 

 

 

Related Posts