தி கிராண்ட் மாஸ்டர்: விமர்சனம்
தி கிராண்ட் மாஸ்டர்: விமர்சனம்
சமூகத்தின் அடிமட்டத்தில் முடக்கப்பட்ட மனிதர்கள், முன்னேறி வரும்போதெல்லாம் சாதி என்கிற உத்தியைப் பயன்படுத்தி வெட்டி வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை, சதுரங்கத்தின் அடிப்படையில் சொல்லும் திரைப்படம்.
தூய்மைப் பணியாளர் குடும்பத்தைச் சேரந்தவன் சிறுவன் நந்தன். தந்தை இறந்துவிட, தூய்மைப்பணியாளரான தாயின் வருமனமே ஆதாரம். பள்ளியில் நந்தனுக்கு சாதி ரீதியான பல கொடுமைகள். செஸ் போட்டியில் கலந்துகொண்டு, கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்ல வேண்டும் என்பது அவனது கனவு.
அதை அடைந்தானா என்பதைச் சொல்லி இருக்கிறார்கள்.
கதை நாயகனாக வரும் மாஸ்டர் அஸ்வின், “உங்காளுங்கன்னா என்ன அர்த்தம்?” என்று அப்பாவித்தனமாகக் கேள்வி எழுப்பும் போது, நமக்கு பதறுகிறது. அதே நேரம், தாயின் வழிகாட்டலில், சாதி வெறி ஆசிரியரை எதிர்த்து நிற்கும் காட்சியில் கைதட்டத் தோன்றுகிறது. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அஸ்வின்.
அவரது தாயாராக நடித்துள்ள அபர்ணதி, குப்பத்து மனுசியை ரத்தமும் சதையுமாக கண்முன் நிறுத்துகிறார். சாதி வெறியர்களிடம் இருந்து கணவனைக் காக்க போராடுவது, தாய்க்கோழியாய் தன் மகனை சமூகத்தின் கொடூர தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பது. சீற்றம் கொள்வது, என நடிப்பில் அசத்துகிறார்.
சிறுவனின் தந்தையாக வரும் லிங்கேஷ், சாதிய வெறியாட்டத்திற்குப் பலியாகும் காட்சிகளில் அதிர வைக்கிறார். சிறப்பான நடிப்பு.
படத்துக்கு பெரும் பலம் வசனங்கள்.
“நாங்க அள்ற மலம் வெளியில கிடக்கு; அள்ளவே முடியாத மலம் உங்க மண்டைக்குள்ள இருக்கு” – ஓர் உதாரணம்.
தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. அதே போல பின்னணி இசையும், படத்தின் ஓர் கதாபாத்திரம் போல கூடவே வருகிறது. பாராட்டுக்கள்.
சென்னை நெரிசலான குடிசைப் பகுதிகளை கண்முன் நிறுத்துகிறது அர்ஜுன் ரவியின் கேமரா.
சாதிய ஏற்றத்தாழ்வுகளை மையமாகக் கொண்ட கதைகள் ஏற்கனவே பலமுறை பேசப்பட்டிருந்தாலும், சமுதாயத்தில் அந்த அவலங்கள் முற்றிலும் மறையும் வரை இதுபோன்ற படைப்புகளின் தேவை நீடிக்கவே செய்யும் என்பதை இத்திரைப்படம் மீண்டும் நினைவுபடுத்துகிறது.
அறிமுக இயக்குநர் வெற்றிச்செழியன், முதல் படத்திலேயே சமூகக் கருத்துக்களை சிறப்பான திரை மொழியில் சொல்லி இருக்கிறார். சிறுவனின் சூழலைச் சொல்லி பிறகு அவனது தாயின் கடந்த காலத்தைச் சொல்லும் யுக்தி சிறப்பு.
அனைவரும் பார்க்க வேண்டிய பாடம்.
ரேட்டிங்: 3.5/5

