“ஹீரோக்கள் ஒத்துழைப்பு கொடுக்கா விட்டால்…”: ‘தி டார்க் ஹெவன்’ பட விழாவில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் எச்சரிக்கை!
பாலாஜி இயக்கத்தில், கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் வெளியான ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
ஜி. தனஞ்ஜெயன்
“முதலில் இந்தப் படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். படம் வெளியாவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே பார்த்தேன், நல்ல த்ரில்லராக வந்துள்ளது. பல படங்களின் போட்டிக்கு நடுவே ஊடகங்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆதரவால் படம் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு திரைப்படம் எடுக்கும்போது ஒரு நடிகர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் எவ்வளவு பிரச்சினைகளை அந்தப் படம் சந்திக்குமோ அத்தனையையும் இந்தப் படம் சந்தித்திருக்கிறது.அதுவும் அறுபது ,எழுபது சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த நடிகருடன் தொடர்ந்து போக முடியவில்லை என்று தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்து நிறுத்தி விடுவோம் என்று முடிவு எடுப்பது யாரும் சுலபமாக எடுக்க முடியாது.
சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் அப்படித்தான் நடந்தது. ஒரு பெரிய நடிகருடன் பிரச்சினைகளால் அந்தப் படத்தை முடிக்க முடியாமல் திணறினேன்.படங்கள் வளர்ந்த பிறகு, செலவு செய்த பிறகு எங்களால் அப்படி ஒரு முடிவு ஒன்று எடுக்க முடியவில்லை.படத்துக்காக நீண்ட தூரம் வந்து விட்டோம் ,நிறைய செலவாகிவிட்டது என்று தயங்கினோம்.
அப்படிப்பட்ட நிலையில் படத்தை நிறுத்திவிட்டு வேறு படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல .அது தெரிந்து சித்து ஈடுபாட்டுடன் நடிக்க வந்தது பாராட்டுக்குரியது.அவரது நடிப்பு பிரமிப்பாக இருக்கிறது.இன்று திரையரங்குகளில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. நடிகர்கள் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது எல்லாவற்றையும் சரியாகப் பேசிக் கொண்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும். பிறகு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டியதுதான்.”
இயக்குநர் பாலாஜி
“இது உணர்ச்சிகரமான தருணம். எழுபது சதவீதப் படத்தை எடுத்து விட்டுத் தூக்கிப்போட்ட நிகழ்வு இன்னும் நினைவில் உள்ளது. தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால் மற்றும் என் குடும்பத்தினர், நண்பர்கள் பெரிய பக்கபலமாக இருந்தனர். பதினெட்டு மணி நேரம் வரை உழைத்த நடிகர்களுக்கும், கருத்து வேறுபாடுகளைத் தாண்டி இணைந்து பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மணிகண்டன், எடிட்டர் ராஜா ஆறுமுகம் ஆகியோருக்கு நன்றி. இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பெரிய உயரத்திற்கு வருவார். பழைய சர்ச்சைகளுக்குள் செல்ல விரும்பவில்லை; பத்திரிகையாளர் காட்சியில் கிடைத்த கைதட்டலே இந்த வெற்றிக்குக் காரணம்.”
நடிகை தர்ஷிகா
“சொல்லுக்குச் சக்தி அதிகம். நேர்மறையான விமர்சனங்கள் மக்களைச் சென்றடைந்து கூட்டத்தைக் கூட்டியுள்ளது. எனது முதல் படமாக ‘தி டார்க் ஹெவன்’ அமைந்தது பெருமையளிக்கிறது.”
நடிகை ரித்விகா
“ஊடக விமர்சனங்கள் மக்களிடம் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி. இருப்பினும் மக்கள் ஓடிடி வரை காத்திருக்காமல் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்க்க வேண்டும். அப்போதுதான் சினிமா வளர்ச்சி பெறும்.”
நாயகன் சித்து
“இந்தத் தருணத்திற்காக பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தேன். வாய்ப்பு தேடிய நாட்களில் பசியையும் அவமானத்தையும் சந்தித்திருக்கிறேன். இன்று திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமைவை நேசித்தால் அது நம்மைக் கைவிடாது. இயக்குநருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.”
நிகழ்வில் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படத்தில் நடித்த பல நடிகர்களும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

