ரஜினியுடன் தர்மன் படத்தில்… சிம்ரன் உற்சாகம்!
நடிக்கத் தெரிந்தவர்கள் பலர் இருக்கலாம், ஆனால் திரையில் வந்து நின்றாலே காந்தமாய் ரசிகர்களை ஈர்ப்பவர்கள் சிலரே! அந்தச் சிலரில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் நம் ‘எவர்கிரீன்’ சிம்ரன். அன்றும் சரி, இன்றும் சரி, அவர் திரையில் தோன்றினால் அந்த இடமே மின்னுகிறது!
மூன்று தசாப்தங்கள்… ஒரு சிறிய கால இடைவெளி அல்ல இது. ஒரு நடிகையாகத் தொடங்கி, இன்று ஒரு முதிர்ச்சியான கலைப் பெட்டகமாக அவர் உயர்ந்து நிற்பதே அவரது அசாத்திய ஒழுக்கத்திற்குச் சான்று. இல்லத்தரசியாக, அன்பான அம்மாவாக, அதிரடித் தொழில்முனைவோராக எல்லா இடங்களிலும் ‘சிக்ஸர்’ அடிக்கிறார். அதே சமயம், கேமராவிற்கு முன்னால் வந்துவிட்டால் போதும், அந்த ‘பழைய சிம்ரன்’ துள்ளிக்குதித்து ரசிகர்களை வசீகரித்துவிடுகிறார்.
இப்போது அவர் கையில் இருக்கும் லேட்டஸ்ட் ‘பம்பரம்’ தான் ‘தர்மன்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மீண்டும் ஒருமுறை இணைவது குறித்து சிம்ரன் சொல்லும் வார்த்தைகளில் ஏகப்பட்ட உற்சாகம்:
“கனவு நனவாக சரியான நேரம் அமைய வேண்டும். ‘பேட்ட’ படத்திலேயே அந்த அனுபவம் கிடைத்தாலும், ‘தர்மன்’ படத்தில் ஒரு அழுத்தமான பாத்திரத்தில் அவருடன் இணைவது என் திரைப்பயணத்தின் உச்சம். ரஜினி சார், கமல் சார், அஸ்வத் மாரிமுத்து என எல்லோருக்கும் என் ஸ்பெஷல் தேங்க்ஸ்!”
என்று நெகிழ்ச்சியுடன் பகிர்கிறார் சிம்ரன். ‘கேளுங்கள்… பிரபஞ்சம் கொடுக்கும்’ என்பதை நம்பும் சிம்ரனுக்கு, காலம் அவருக்கு எப்போதுமே வெற்றிகளைத் தான் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.
‘ஒன்ஸ் மோர்’ படத்தோடு தமிழில் கால்பதித்த அதே துள்ளல், இன்று ‘தர்மன்’ படத்திலும் குறையாமல் தொடர்கிறது. எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் புகுந்து விளையாடும் இந்தத் திரைப்புயல், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவின் முகமாக மின்னப்போவது உறுதி!

