‘டார்க்’: விமர்சனம்: நடுங்க வைக்கும் பேய் வீடு!
சமீபகாலமாகத் திகில் படங்களை காமெடி கலாட்டாக்களாக மாற்றும் போக்கிலிருந்து விலகி, அச்சு அசலான நடுக்கத்தைத் தரும் படமாக வந்திருக்கிறது ‘டார்க்’.
கே.பாக்யராஜின் வீட்டில் தங்கியிருந்த மூன்று இளைஞர்களின் மர்ம மரணம், அந்த வீட்டை ஒரு ‘சாபக்கேடு’ பிடித்த இடமாக மாற்றுகிறது. வாடகை மலிவு என்பதால், விபரீதங்களை அறிந்தும் அங்கு குடிபுகுகிறான் நாயகன் அஜய் கார்த்திக். ஆரம்பத்தில் துணிச்சலாக இருக்கும் அவன், நாட்கள் செல்லச் செல்ல அந்த வீட்டின் அமானுஷ்ய பிடியில் சிக்கிச் சின்னாபின்னமாகிறான். ஒருகட்டத்தில் அவன் மர்மமான முறையில் இறக்க, அதே நேரத்தில் உரிமையாளரான பாக்யராஜும் உயிரிழக்கிறார்.
விசாரணையில் இறங்கும் இன்ஸ்பெக்டர் நட்டிக்கு, பிணவறையில் அஜய் கார்த்திக் திடீரென உயிர் பெற்று எழுந்து கொடுக்கும் ‘வார்னிங்’ கதையைத் தலைகீழாக மாற்றுகிறது. அஜய் ஏன் அப்படிச் செய்தான்? அந்த வீட்டில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? என்பதே ‘டார்க்’ படத்தின் திகில் பயணம்.
நாயகன் அஜய் கார்த்திக், ஆரம்பத்தில் துடிப்பான இளைஞராக வந்து, பிறகு பயத்தால் சிதைந்து போகும் ஒவ்வொரு முகபாவனையிலும் பார்வையாளர்களை நிலைகுலைய வைக்கிறார். மன ரீதியான பாதிப்புகளை உடல் மொழியில் வெளிப்படுத்தியதில் அவர் கச்சிதம். காவல்துறை அதிகாரியாக வரும் நட்டி, வழக்கமான துப்பறியும் பாணியிலிருந்து மாறி, படத்தின் மர்மத்தை அழுத்தமாக உள்வாங்கி நடித்திருக்கிறார்.
மூத்த கலைஞர் கே.பாக்யராஜ், தனது அனுபவ நடிப்பால் படத்திற்கு ஒரு கௌரவத்தையும், மர்மத்தையும் சேர்த்திருக்கிறார். அஞ்சனா நேத்ரன், விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகத் தந்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரவி சக்தி, இருட்டை வெறும் நிறமாக மட்டும் காட்டாமல், அந்த இருளுக்குள் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதை உணர்த்திய விதம் மிரட்டல். குறைந்த வெளிச்சத்திலேயே பார்வையாளர்களைத் தவிப்புக்குள்ளாக்கும் கேமரா கோணங்கள் படத்தின் மிகப்பெரிய பலம். இசையமைப்பாளர் மனு ரமேஷ், அலறல் சத்தங்களை நம்பிப் பயமுறுத்தாமல், மெளனத்தின் வழியே இதயத்துடிப்பை எகிற வைக்கிறார். கதிரேஷ் அலகேஷனின் எடிட்டிங், அடுத்து என்ன நடக்கும் என்ற யூகத்தையே தகர்த்து, பதற்றத்தைக் கூட்டியிருக்கிறது.
கலை இயக்குநர் சண்முகராஜா, அந்த வீட்டைப் பார்த்தாலே ஒருவித அமானுஷ்யம் தொற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைத்திருக்கிறார்.
இயக்குநர் கல்யாண் கே.ஜெகன், கதையை வெறும் பேய் கதையாகச் சுருக்கிவிடாமல், உளவியல் ரீதியான சிக்கல்களைத் தந்து திகிலைக் கூட்டியிருக்கிறார். கதை பெரும்பாலும் வீட்டைச் சுற்றியே நகர்வது மற்றும் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், பேயைக் காட்டாமல் பயத்தைக் கடத்தும் அவரது மேக்கிங் ஸ்டைல் அப்ளாஸ் அள்ளுகிறது.
படம் பார்த்த பிறகும் அந்தத் திகில் உணர்வு மனதிற்குள் தங்கிவிடுகிறது. மிரட்டலான அனுபவத்தைத் தரும் ‘டார்க்’, தாராளமாக ஒருமுறை தியேட்டரில் பார்க்கலாம்!
3.5/5

