ஆணவக் கொலைக்கு எதிராக களமாடும் ‘நெல்லை பாய்ஸ்’: நவம்பர் 27 ரிலீஸ்!
தென் தமிழகத்தின் மண்ணும் மனசும் எப்போதுமே தனி ரகம்தான். பாசத்திற்கும், வீரத்திற்கும், உயிரைக் கொடுக்கும் நட்பிற்கும் பெயர்போன நெல்லை சீமையின் பின்னணியில், இன்று சமூகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கியமான வாழ்வியல் பிரச்சனையைப் பேச வருகிறது “நெல்லை பாய்ஸ்”.
நவீன நாகரீக உலகில் மனிதன் எத்தனையோ பரிணாமங்களைக் கடந்து வளர்ந்து கொண்டிருந்தாலும், இன்றும் சாதிய வெறியும், சாதி மறுப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளாத ஆணவப் படுகொலைகளும் சமூகத்தின் ஆறாத வடுவாகத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாகத் தென் தமிழகத்தில் நிகழும் இத்தகைய ஆணவக் கொலைகளின் கோர முகத்தைத் தோலுரித்துக் காட்டும் வகையில், ஈவு இரக்கமற்ற கல் நெஞ்சங்களையும் கலங்க வைக்கும் அழுத்தமான படைப்பாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
ஏற்கனவே “அருவா சண்ட” திரைப்படத்தைத் தயாரித்து கவனம் ஈர்த்த தயாரிப்பாளர் வி. ராஜா, தனது அடுத்த படைப்பாக முற்றிலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். காதலுக்கு மட்டுமல்ல, உயிரையும் கொடுக்கும் உன்னதமான நட்புக்கும் இலக்கணமாகத் திகழ்வது நெல்லை மண் என்பதை இந்த ‘நெல்லை பாய்ஸ்’ நண்பர்கள் பட்டாளம் திரையில் வெட்ட வெளிச்சமாக்க உள்ளது.
படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே, அதன் பெயருக்காகப் பல்வேறு விமர்சனங்களையும் விவாதங்களையும் சந்தித்த இப்படம், தற்போது ரிலீஸுக்குத் தயாராகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அறிவழகன் கதையின் நாயகனாகத் துடிப்புடன் வலம் வர, அவருக்கு ஜோடியாக ஹேமா ராஜ்குமார் நாயகியாக நடித்துள்ளார். மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் வேலராமமூர்த்தி தனது வழக்கமான ஆளுமையால் அசத்தியிருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, படத்தொகுப்புப் பணிகளையும் கவனித்து இத்திரைப்படத்தை விறுவிறுப்பாக இயக்கியுள்ளார் கமல் ஜி.
ரவீந்திரனின் ஒளிப்பதிவு நெல்லை மண்ணின் அழகையும், கதையின் தீவிரத்தையும் கண்முன் நிறுத்த, ரஷாந்த் அர்வினின் இசை படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. சமூகத்திற்குத் தேவையான ஒரு அழுத்தமான கருத்தை, நட்பும் காதலும் கலந்த விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்ல வரும் ‘நெல்லை பாய்ஸ்’ திரைப்படத்தை, தயாரிப்பு நிறுவனமான ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் நேரடியாக உலகம் முழுவதும் வெளியிடுகிறது. வருகிற நவம்பர் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் இப்படத்தைக் கண்டு ரசிக்கலாம்!

