ரயிலில் பெண் வன்கொடுமை! கொலை முயற்சி! அதிர்ச்சி பின்னணி!

டி.வி.சோமு சிறப்புப் பக்கம்:
கோவை – திருப்பதி பயணிகள் விரைவு ரயிலி்ல், பெண்கள் பெட்டியில் பயணித்த பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறான், ஒருவன். அந்தப் பெண்மணி எதிர்த்துப் போராட, அவரது கையை உடைத்திருக்கிறான். ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு இருக்கிறான்.
மயங்கிக் கிடந்த அந்தப் பெண்மணி, மருத்துமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவர் பிழைத்துவிட்டார். ஆனால் அவரது கருவில் இருந்த குழந்தை மரணித்துவிட்டது.
என்னவொரு கொடுமை!
அந்த கொடூரன் – கேவி குப்பம் அருகில் உள்ள பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் – கைது செய்யப்பட்டு இருக்கிறான்.
அந்தப் பெண்மணிக்கு, ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்து இருக்கிறது ரயில்வே.
அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பெண்கள் பெட்டியில் கூடுதல் கவனம் செலுத்த உத்திரவிட்டிருக்கிறது ரயில்வே பாதுகாப்பு தலைமை.
இதெல்லாம், சம்பவம் நடந்த பிறகு செய்யப்படும் சடங்குகள்தான்.கடந்த பல ஆண்டுகளாக, ரயில் குற்றங்கள் அதிகரிக்கின்றனவே… ஏன்?
ரயில் பயணங்களை மேற்கொள்ளும் நமக்கே தெரியும். முன்பு போல் இப்போதெல்லாம் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் வருவதில்லை.
காரணம், ரயில்வே பாதுகப்பு படையில் ஏராளமான காலி பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை.
சமீபத்தில், ரயில்வே பாதுகாப்பு படை, ” ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக செய்ய முடியவில்லை. ஆகவே சென்னை உள்ளூர் ரயில்களில் முன்னும் பின்னும் இருக்கும் மகளிர் பெட்டிகளை நடுவில் இணைத்துவிடுங்கள்” என்று சொல்லவிட்டது.
இந்த லட்சணத்தில்தான், “மகளிர் பெட்டிகளுக்கு இனி கூடுதல் பாதுகாப்பு” என்கிறார்கள்.
ஆட்களே இ்ல்லை என்கிற போது, எப்படி கூடுதல் பாதுகாப்பு? ஏமாற்றுத்தனம்தானே இது!
2023ம் ஆண்டு, மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் நினைவிருக்கும். ரயில் பெட்டியில் கேஸ் ஸ்டவ் வைத்து ஏதோ சமைக்க, அது அப்படியே பற்றி, அத்தனை பேரை பலிவாங்கிவிட்டது.
அப்போது,’தக்சன் ரயில்வே பென்சனர் யூனியன்’ தலைவர் ஆர்.இளங்கோ அவர்களை பேட்டி கண்டேன். நீண்ட காலம் ரயில்வே துறையில் பணியாற்றிய அவர், “பாதுகாப்பு படை காலி இடங்களை நிரப்பாததே இந்த விபத்துக்குக் காரணம்” என்றார்.அதாவது, உரிய காவலர்கள் இருந்தால், சுற்றுலா ரயில்களையும் சோதனை செய்வார்கள். சட்டத்துக்குப் புறம்பாக கேஸ் ஸ்டைவ்் வைத்திருந்ததை கண்டுபிடித்து அகற்றி இருப்பார்கள். போதிய அளவு காவலர்கள் இல்லாததால் ஆய்வுகள் நடத்த முடிவதில்லை. அதுவே விபத்துக்குக் காரணம் என்றார்.
ஐந்து மாதங்களுக்கு முன் நடந்த சம்பவத்தைச் சொன்னால் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடியும்.
டில்லி செல்லும் ரயிலில் தனது குடும்பத்துடன் பயணித்தார் ஒரு சிறுமி. இரவு வேளையில் அவரிடம் சக பயணி பாலியல் சீண்டலில் ஈடுபட்டு இருக்கிறார். சிறுமி, தனது தாயாரிடம் சொல்லி இருக்கிறார்.
குறிப்பிட்ட நபரை சக பயணிகள் சேர்ந்து அடித்து இருக்கிறார்கள். அடி தாங்காமல் அந்த கயவன் இறந்துவிட்டான்.
ரயில் பயணத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் அவனை அடித்துத் துவைத்து இருக்கிறார்கள்.
அதாவது அப்போது டிக்கெட் பரிசோதகரும் வரவில்லை ரயில்வே பாதுகாப்பு படையினரும் வரவில்லை. காரணம் ஆள் பற்றக்குறை.
ஒரு டிக்கெட் பரிசோதகர் உயர் வகுப்பு பெட்டிகள் மூன்றுக்கு பொறுப்பு. இந்த எண்ணிக்கையை ஐந்தாக ஆக்கியது ரயில்வே நிர்வாகம்.
அதே போல ஒரு டிக்கெட் பரிசோதகர், படுக்கை வசதி பெட்டிகள் இரண்டை நிர்வகிக்க வேண்டும். இதை மூன்றாக ஆக்கியது.
டிக்கெட் பரிசோதகர்கள், “இது அதிகாரப்பூர்வ உத்தரவு. ஆனால் வாய்வழி உத்தரவாக, உயரதிகாரிகள் இன்னும் கூடுதலான பெட்டிகளை டிக்கெட் பரிசோதகர்கள் நிர்வகிக்க சொல்கிறார்கள்” என்று போராட்டமே நடத்தினர்.
அதே போல ” ரயில் ஓட்டுநர்களுக்கு 10 மணி நேரத்துக்குமேல் பணி இருக்காது என ஒன்றிய அரசுதரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நடைமுறையில் 14,15 மணி நேரமாக இருக்கிறது. இதனால், பணிச்சுமை அதிகரித்து ரயில் ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். இது பாதுகாப்புக்கும் நல்லதல்ல” என்று சொல்லி ஓட்டுநர்களும் போராட்டம் நடத்தினர் பலனில்லை.
நான் எடுத்த ஒரு பேட்டியில் தொழிற்சங்கவாதி இளங்கோவன், “எல்லா பொறுப்புகளிலும் தனியார் மயத்தை நுழைத்து, தற்காலிக ஊழியர்களை நியமிக்கிறார்கள். குறைந்த சம்பளம் என்பதால் தகுதியான ஊழியர்கள் கிடைப்பதில்லை. விபத்துகள் அதிகரிக்க இதுவும் காரணம்
ஒன்றிய அரசின் அலட்சியமே, ரயில் விபத்துகளுக்கும், ரயிலில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் முக்கிய காரணம்” ” என்றதும் குறிப்பிடத்தக்கது.
– டி.வி.சோமு
ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் சங்க தலைவர் ஆர்.இளங்கோவன் ஓராண்டுக்கு முன் பத்திரிகை டாட் காம் யூ டியுப் சேனலுக்காக எனக்கு அளித்த பேட்டி கீழே…..