பெஞ்சல் புயலை கணிக்க முடியாததற்கு காரணம் என்ன?
‘இந்த திசையில் வருகிறது… அந்த வேகத்தில் வருகிறது.. கடந்துவிட்டது.. கடக்கவில்லை..’ சின்னக்குழந்தை போல ஒளிந்துபிடித்து விளையாடிக்கொண்டு இருக்கிறது பெஞ்சல் புயல்.
புயல் குறித்து ஏன் நம்மால் சரியாக கணிக்கமுடியவில்லை” என்ற முக்கிய கேள்விக்கு விடை அளித்து உள்ளார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜன்.
அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
“பொதுவாகவே வெப்பமண்டல பகுதியில் வானிலையை கணிப்பது கடினம், தவிர, நமக்கான ‘காலநிலை மாதிரிகள்’ இருந்தால் பெரும்பாலும் சரியாக, காலநிலையை கணிக்கலாம்.
‘காலநிலை மாதிரி’ என்றால், கடல் – நிலம் – பனி உள்ளிட்ட பூமியின் காலநிலைகளை, கணினி மூலம் பதிவு செய்து வைப்பது. இதன் மூலம், கடந்த காலநிலையை மீண்டும் தெரிந்துகொள்ளவும், எதிர்கால காலநிலையை கணிக்கவும் முடியும்.
இதற்காக, காங்கிரஸ் ஆட்சியில் சுற்றுச்சூழல் அமைச்சாாக ஜெயராம் ரமேஷ் இருந்த சமயத்தில் 100 கோடியை ஒதுக்கி indiyan institute of tropical meterology என்கிற நிறுவனத்தை அமைத்தார். ஆகவே நாமும் கால நிலை குறித்த ஆய்வுகளை செய்ய ஆரம்பித்தோம். நமக்கான காலநிலை மாதிரிகள் உருவாக்கும் முயற்சிகள் நடக்க ஆரம்பித்தன.
ஆனால் கடந்த 11வருடங்களாக ஒன்றியத்தில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவிற்கான காலநிலை மாதிரிகளை உருவாக்க எந்தவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை.
ஆகவே நாம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்தும் காலநிலை மாதிரிகளை சார்ந்து இருக்க வேண்டி உள்ளது. அவற்றை வைத்தே நமது காலநிலைகளை கணிக்கிறோம். ஆகவேதான் நம்மால் காலநிலை கணிப்புகளை துல்லியமாக கணிக்க முடியவில்லை.
தற்போதைய ஒன்றிய அரசு, கியான்வாபி மசூதியின் கீழ் சிவன் அல்லது ராமர் சிலை உள்ளதா என்று பார்ப்பதும், சம்பல் மசூதியை ஆய்வு செய்வதிலும்தானே அக்கறை காட்டுகிறது!” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டு உள்ளார் பொறியாளர் சுந்தர்ராஜன்.