நிஜ ‘வேட்டையன்’ டீச்சர்! ரஜினி அழைத்து பாராட்டுவாரா?

நிஜ ‘வேட்டையன்’ டீச்சர்! ரஜினி அழைத்து பாராட்டுவாரா?

வேட்டையன் படத்தில் துஷாரா விஜயன் நடித்துள்ள சரண்யா கதாபாத்திரம் மக்களை நெகிழ வைத்து உள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியரான சரண்யா, மாணவர்களின் கல்வியில் முழு ஈடுபாடு கொண்டவர். அதனாலேயே அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு சூழல் செல்லும்.

அந்தப் படத்தில் வருவது போலவே மாணவர்களை தனது பிள்ளையாக நினைத்து பள்ளிக்கு உழைத்து – மிரட்டல்களை எதிர்கொண்டவர் நிஜத்திலும் உண்டு.அவர் – அரசுப்பள்ளி ஆசிரியர் திருமதி மாலதி.

அடிப்படையில் இவர் ஆங்கில ஆசிரியை. இவரது வகுப்பு மாணவர்கள், ஆங்கிலத்தில் தொடர்ந்து 17 ஆண்டுகளாக நூறு சதம் தேர்ச்சி பெற்றனர். கற்பிப்பதில் இவருக்கு, அத்தனை அர்ப்பணிப்பு.

2017ல் இவர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருநகர் பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக நியமிக்கப்பட்டார்.

அப்போது அங்கே, பள்ளி என்று ஒன்று கிடந்தது… அவ்வளவுதான்.

திருமதி மாலதி பொறுப்பேற்கும் முன் பெருநகர்  அரசு மேல் நிலைப்பள்ளி

ஆம்…கட்டிடம் பராமரிப்பின்றி கிடந்தது; மைதானம், மாணவர்கள் விளையாட முடியாதபடி, புதர்கள் மண்டிக்கிடந்தது; கிணறு தூர்வாரப்படாமல் பாழடைந்து கிடந்தது; பள்ளி வளாகம் சுற்றுச்சுவர் இன்றி கிடந்தது!

மாணவர்கள் பெரும்பாலோனோர் பள்ளி நேரத்தில் வளாகத்துக்கு வெளியே கிடந்தனர்!

அப்போது மாலதிக்கு முன்னே இரண்டு சவால்கள் இருந்தன.

ஒன்று மாணவர்கள் சரிப்படுத்த வேண்டும்… இரண்டு பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்!

மாணவர் – பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களை தொடர்ந்து நடத்தினார், மாலதி. கல்வி என்பதோடு ஒழுக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.

வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தி வீட்டுப்பாடத்தை அக்குழுவின் மூலமும் அளிக்க ஏற்பாடு செய்தார்.

இதன் மூலம், பள்ளிப்பாடமும் ஆசிரியர்களும் மாணவர்களின் வீடுகளுக்குள் நுழைந்தனர். குறிப்பாக, மாணவர்களின் வருகை, உடனுக்குடன் பெற்றோருக்குத் தெரிய இது நல்ல ஏற்பாடாக இருந்தது. இதனால் மாணவர்கள் கட் அடிப்பது நின்றது.   மாணவர்களிடம் மாற்றம் ஏற்பட்டது.

இன்னொரு புறம் மாலதி செய்தது….

எந்தெந்த துறைகள் மூலம் பள்ளிக்கு நிதி உதவி பெற்று தேவையான வற்றைச் செய்யலாம் என்பது!

திருமதி மாலதி பொறுப்பேற பிறகு பெருநகர்  அரசு மேல் நிலைப்பள்ளி

சிதிலமடைந்து கிடந்த ஆய்க்கூடம் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் ரூ.25 லட்ச ரூபாய் மதிப்பில் சீர் செய்யப்பட்டது… காஞ்சிபுரம் எம்.பி. நிதி மூலம், சுத்திகரிப்பு இயந்திரம் வந்து சேர்ந்தது…

அதே போல தனியார் அமைப்புகளையும் – என்.ஜி.ஓ.க்களையும் – நாடினார் மாலதி…
இதன் பலனாக பள்ளிக்கு 32 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட வசதிகள் பள்ளிக்குவந்து சேர்ந்தன..

புதிய கட்டிடங்கள் எழுந்தன… ஏற்கெனவே உள்ள கட்டிடங்களும் புது வண்ணம் பெற்றன…

தனது சம்பளத்தில் இருந்தும் பெருந்தொகையை பள்ளிக்காக செலவிட்டார் மாலதி.

இதையடுத்து, பள்ளி சிறந்து விளங்க.. மாதிரிப் பள்ளியாக, தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது! இதன் மூலம் பள்ளிக்கு ரூ.50 லட்சம் நிதி கிடைத்து, பள்ளி மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு வகுப்பிற்கும், ‘டிஜிட்டல்’வழி கல்வி, வசதியான. காற்றோட்டமான வகுப்பறை, அருமையான ஆய்வுக்கூடங்கள், தரமான விளையாட்டு மைதானம்..

அதே போல… பாட புத்தகங்களை மட்டுமே கற்று தராமல், ‘ஸ்போக்கன் இங்கிலீஷ், நீட்’ தேர்வுக்கான சிறப்பு பயிற்சி, வாழ்வியல் கல்வி,…

மாலதி தலைமையிலான ஆசிரியர்கள் சுற்றிச் சுழன்றனர்….

இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது.

இன்னொன்றும் செய்தார் மாலதி…

அரசுப் பள்ளியில் கட்டணம் மிகக் குறைவுதான். ஆனால் அதையும் அவர்களிடம் பெறக்கூடாது என்பது எண்ணினார். நிதி உதவி பெற்று கட்டணத்தை ஈடு செய்வது அவரது வழக்கம். வாய்ப்பில்லாத போது தனது சொந்தப் பணத்தை செலுத்துவார்.

அந்தப் பள்ளியில் மாலதி தலைமை ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தபோது சுமார் 900 மாணவர்கள் படித்தனர்.. அவர், அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்ட இந்த வருடம் மாணவர்களின் எண்ணிக்கை 2000க்கும் மேல்!

தனியார் பள்ளிகளில் இருந்துகூட மாணவர்கள் இந்த அரசுப் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர்.

வேட்டையன் படத்தில் வருவது போலவே இவரது உயிருக்கும் அச்சுறுத்தல் வந்தது.

தனியார் பள்ளி தாளாளர் ஒருவர், “நீங்க அரசுப்பள்ளியை இப்படி தரமா நடத்தினா நாங்க என்ன செய்யறது” என்று ஆரம்பித்து, தொடர்ந்து மிரட்டிய சம்பவமும் நடந்தது.
அந்த அளவுக்கு பெருநகர் அரசுப் பள்ளியை மேம்படுத்தினார் மாலதி.

கடந்த ஜூன் மாதம் அவர்,  அந்த பள்ளியில் இருந்து மாற்றலானார்.

அழாத மாணவர்கள் – பெற்றோர்கள் இல்லை!

தற்போது கோடம்பாக்கம் அரசு பள்ளி..
தற்போது சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறார்.

இங்கும் பல நல்ல மாறுதல்களைச் செய்ய ஆரம்பித்து உள்ளார்.

முதல் கட்டமாக, புதிய செல்போன் செயலியை ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம், மாணவர்களின் வருகைப் பதிவேடு உடனுக்குடன் பெற்றோருக்குத் தெரியவரும்.கட் அடிக்க முடியாது.

அதோடு – முக்கியமாக – மாணவர்களுக்கு ஒழுங்கு முறையை கடைபிடிக்க வலியுறுத்துவது.

இது குறித்து மாலதி அவர்களுடன் பேசினேன்.

அவர், “மாணவர்களை என் பிள்ளைகளாகவே நினைக்கிறேன். அவர்களிடம்ம் கனிவும், கண்டிப்பும் ஒரு சேர  வெளிப்படுத்த வேண்டும்.  புதிதாய் நான் மாற்றலாகி வந்திருக்கும் கோடம்பாக்கம் அரசுப் பள்ளிக்கு  நிறைய செய்ய வேண்டி இருக்கிறது…  இணைந்து செயலாற்ற நல்ல ஆசிரியர்கள் இருக்கிறார்கள்” என்றார் நம்பிக்கையுடன்.

கோடம்பாக்கம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஹரிஹர மகாலட்சுமி, ராதா, சரஸ்வதி ஆகியோருடன் மாலதி

இந்நிலையில் எனக்கு சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்த மாணவன் முகமது யாசின். சாலையில் கிடந்த பணக்கட்டு ஒன்று கிடக்க.. அதை எடுத்து பொறுப்பாக ஆசிரியரிடம் அளித்தான்.

அவர் மூலம் பணம், காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, உரியவருக்கு போய்ச் சேர்ந்தது.அந்த சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்து நெகிழ்ந்து பாராட்டினார் ரஜினி.

நேர்மையான அரசுப்பள்ளி மாணவனை அழைத்துப் பாராட்டியது போலவே, அர்ப்பணிப்பான அரசுப்பள்ளி ஆசிரியர்களை – எல்லோரையும் அழைக்க வாய்ப்பு இருக்காது – ஒரு சிலரை அழைத்து ரஜினி தனது பாராட்டுதல்களை தெரிவிக்கலாமே.

இது அவர்களுக்கு மேலும் ஊக்கம் தருவதோடு, இதர ஆசிரியர்களுக்கும் உற்சாகத்தை அளிக்குமே!

– டி.வி.சோமு

Related Posts