வேட்டையன் : விமர்சனம் : குறி தப்பவில்லை!

த.செ.ஞானவேல்ராஜா இயக்கத்தில் ரஜினி நாயகனாக தோன்றும் வேட்டையன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இன்று படம் வெளியான நிலையில் படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.பியாக இருக்கும் அதியன் நேரமையான மனிதர். அதே நேரம், பணியில் அதிவேகம் காட்டுபவர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடி தண்டனை வழங்க என்கவுன்ட்டர் செய்வதில் கில்லாடி.அதே மாவட்டத்திலிருக்கும் சாரல் மேடு பகுதியில் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றுகிறார் சரண்யா. அந்த பள்ளியை போதைப் பொருள் கடத்தும் கும்பல், கிடங்காக பயன்படுத்துகிறது. இதைத் தடுக்க எஸ்.பிக்கு அவர் கடிதம் எழுதுகிறார்.திருட்டு குற்றவாளியாக இருந்த – தற்போது போலீஸ் இன்பார்மராக இருக்கும் – பேட்டரி என்பவரின் உதவியோடு துப்பு துலக்குகிறார் எஸ்.பி. அதியன். அதோடு, போதை குற்றவாளியை சுட்டுத் தள்ளுகிறார்.
இன்னொரு பக்கம், என்கவுன்ட்டர்களுக்கு எதிரான பாடம் எடுக்கிறார் மனித உரிமை அதிகாரி சத்யதேவ்.
இந்நிலையில் சென்னைக்கு இடமாற்றம் வாங்கி சென்ற ஆசிரியை சரண்யா வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்.
யார் அந்த கொலையாளி என்பதில் ஆரம்பிக்கிறது அதிரடியான சம்பவங்கள். அதைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே கதை.
கூலிங் கிளாஸை தூக்கிப் போட்டு ‘பன்ச்’ பேசுவது, கால் மேல் கால் போட்டு அதிரடி காட்டுவது என ரஜினி ஸ்டைல் வழக்கம்போல் அபாரம்.
அதே நேரம் போலீஸ் எஸ்.பி. என்றால் அதற்கேற்ற போலீஸ் கட்டிங் வேண்டாமா.. வழக்கம்போல அதிக முடி வைத்த விக் வைத்து இருக்கிறார்கள்.
நடிப்பிலும் வழக்கம்போல் அசத்துகிறார் ரஜினி. குற்ற வழக்கில் தடுமாற்றம் ஏற்படும்போது மனம் குமையும் காட்சிகளில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதே நேரம் டப்பிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம். தவிர ரஜினியின் பேச்சு ஸ்டைலும் நமக்குத் தெரியும். ஆனாலும் ஒரு இடத்தில், மக்கள் என்பதற்கு மாக்கள் என்கிறார். அப்படியானால் முட்டாள்கள் என்று அர்த்தம். இதையெல்லாம் இயக்குநர் கவனிக்கக்கூடாதா?மனித உரிமைகளுக்கு ஆதரவாளர் சத்யதேவ் என்பவராக வருகிறார் அமிதாப். நிதானமானநடிப்பு, அளவான வார்த்தை பிரயோகம் என அசத்துகிறார்.
முன்னாள் திருடன்.. இன்னாள் போலீஸ் உளவாளியாக பேட்டரி என்ற கதாபாத்திரத்தில் அசத்துகிறார் பகத் பாசில். சுறுசுறுப்பான நடவடிக்கை, கிண்டல் கேலியான பேச்சு என ரசிக்கவைக்கிறார். நவீன காலத்து பொன்னியன் செல்வன்.
ரஜினியின் மனைவியாக, சேச்சி மஞ்சுவாரியர் அத்தனை அழகு, அத்தனை அற்புத நடிப்பு.
மாணவர்கள் மீது அக்கறை கொண்ட ஆசிரியை சரண்யாவாக துஷாரா விஜயன். சிறப்பாக நடித்து உள்ளார். உயிர் விடும் காட்சியில் நம்மை பதைபதைக்க, உருக வைத்து விடுகிறார்.
விசாரணை அதிகாரியாக வரும் ரித்திகா சிங் நிஜ அதிகாரியாகவே தோன்றுகிறார். சண்டைக் காட்சியிலும் தூள் பறத்துகிறார்.வில்லன் ராணா டகுபதியும் அசத்தல். ஆத்திரத்தில் சட்டையைக் கிழித்து வீசுவது, தெனாவெட்டாக லிப்டில் ஏறுவது என ரசிக்க வைக்கிறார்.
கிஷோர், அபிராமி உள்ளிட்டோரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு அபாரம். குமரி மற்றும் சென்னை நகர காட்சிகள், சண்டை காட்சிகள் என அனைத்திலும் முத்திரை பதித்து இருக்கிறார்.
பிலோமின் ராஜின் படத்தொகுப்பு கச்சிதம்.அனிருத் இசையில் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற ‘மனசிலயோ’ பாடல் மாஸ். மற்ற பாடல்கள் நினைவில் இல்லை. தவிர பின்னணி இசை என்ற பெயரில் ஒலிக்கும் அதீத சத்தம் மைனஸ்.
இயக்குநர் த.செ.ஞானவேல் தனது முத்திரையை பதித்து இருக்கிறார். வழக்கமான ரஜினி ரசிகள்களுக்கு தேவையான ஸ்டைல், சண்டை, பாடல்கள் உண்டு. அதே நேரம், சமூகத்துக்குத் தேவதையான கருத்துக்களை விதைத்து இருக்கிறார். அனைவருக்கும் கல்வி, எண்கவுண்ட்டர் கொடுமை, நீட் அநீதி என பல வற்றை நயம்பட சுட்டிக்காட்டி இருக்கிறார்.மொத்தத்தில் வேட்டையன் படக்குழு வைத்த குறி தப்பவில்லை! படம் வெற்றி!