பிராமண கூட்டமைப்பு ஊர்வலத்துக்கு பதில் ஊர்வலம்!: தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு!
பிராமணர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் மீது, சிறப்பு பி.சி.ஆர்., சட்டம் இயற்றி நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து பிராமணர் சங்க கூட்டமைப்பு சார்பில், கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, தங்களுக்கு உரிய வேலை வாய்ப்பு, உரிமை கிடைக்க நவம்பர் 4ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
“அப்படி பிராமணர்கள் பேரணி நடத்தினால், பதிலுக்கு திராவிடர்களை இணைத்து நாங்களும் பேரணி நடத்துவோம்” என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
“ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரும்பான்மை மக்களை பஞ்சமர் – சூத்திரர் எனவும், சரி பகுதியாக உள்ள பெண்களையும் இழிவுபடுத்தி, அவர்களது கல்வி, வேவை, வாழ்வுரிமைகளைப் பறித்ததனர் பார்ப்பனர்கள். அதோடு, பெரும்பாலான மக்களை பிறப்பிலேயே இழிவானவர்கள் என்று சாஸ்திரத்திலும், சட்டத்திலும், சடங்கு சம்பிரதாய ஸநாதன முறைகளிலும் அடிமைகளாக்கி வைத்திருப்பது ஆரிய பார்ப்பனியமே. (வேதம், மனுதர்மம் போன்றவை ஆதாரங்கள்).
பார்ப்பனர் அல்லாதாரை வேசி மக்கள் என்றும், பாவயோனியில் பிறந்தவர்கள் என்றும்
எழுதி வைத்திருப்போர் யார்?
‘கீழ்ஜாதி’ மக்கள் என்று சொல்லி, அவர்கள் கட்டிய கோவிலில், பார்ப்பன அர்ச்சகர்களுக்கே கருவறை உரிமை என்றதும், கோபுரங்கள் என்பவை, தூரத்தில்இருந்து கடவுளை வணங்கவே என்றதும் பார்ப்பனர்கள். ‘‘சூத்திர, பஞ்சம’’ என்பதோடு ‘சண்டாளர்கள்’ என்று கூறியும், சுடுகாட்டில் கூட ஒதுக்கி வைத்து, அந்த உழைக்கும் மக்களை ஒடுக்கி வைப்பவர்கள் பார்ப்பனர்கள்; இதெல்லாம் நியாயம்தான் என ஆரிய, வேத, இதிகாச, புராண, கீதை போன்றவற்றின்படி கடவுளால் சொல்லப்பட்டவையே என்று புளுகி, நம்ப வைப்பவர்கள் பார்ப்பனர்கள்.
மக்களை ஏற்றத்தாழ்வுக்கு உள்ளாக்கும் நூலை (கீதை போன்ற)சில நீதிமன்றங்களில்கூட பிரமாணம் எடுக்க பயன்படுத்தவேண்டுமென்று சொல்லி, பிரச்சாரம் செய்வது யார்? கீதையைத் தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்போர் யார்? ‘‘பெண்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்‘‘ என்று கூறும் கீதையைப் பரப்புபவர்கள் யார்?
மனுதர்மத்தின் எட்டாம் அத்தியாயம் 415 ஆவது சுலோகத்தில் ‘சூத்திரன்’ என்ற சொல்லிற்குப் பொருள் வேசி மக்கள் என்று மிகமிகக் கேவலமாக சொல்லியுள்ளது அவமானம் அல்லவா? ‘சூத்திரன்’ என்ற பிரிவு சட்ட அங்கீகாரமும் பெற்றுள்ளதே! இது பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் கொடுமைதானே!
பார்ப்பனப் பெண்களையும் சேர்த்து, அனைத்துப் பெண்களையும் ‘நமோ சூத்திரர்‘ என்போர் யார்?
இப்படிப்பட்டவர்கள், பிறர் தங்களை இழிவுபடுத்துகிறார்கள் என்று கூறி – அதற்காக அவர்களைப் பாதுகாக்க (பட்டியலின மக்களுக்கு உள்ளைதைப் போல) தனிச் சட்டம் வேண்டும் என்கிறார்கள்.
அதற்காக கோவையில் ஊர்வலம் நடத்தினார்கள்! சென்னையில் நவம்பர் 4 இல் பேரணி நடத்தப்போகிறார்களாம்!
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் விகிதாச்சாரப்படி 3 சதவிகிதத்தினர் தானே 90 விழுக்காட்டிற்குமேல் அனுபவித்து ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., பதவிகளில் யார் ஆக்கிரமித்துள்ளனர்?
பேரணி நடத்துகிறார்களாம் – நவம்பர் 4 இல்! அவர்கள் நடத்தும், அடுத்த நாள் நவம்பர் 5 இல் திராவிடர் எழுச்சிப் பேரணியை, அதே சென்னையில் மிகப்பெரிய அளவில் திராவிடர்கள் ஒருங்கிணைந்து நடத்திக் காட்டுவார்கள்!
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள், உரிமையைப் பறிகொடுத்தவர்கள் நாங்கள்,
உண்மையில் ஊர்வலம் நடத்தி உரிமை கோர வேண்டியவர்கள் நாங்கள், நாங்களேதான்” என்று கி.வீரமணி தெரிவித்து உள்ளார்.