“நான் காப்பி அடிச்சா தப்பில்லை..!”: வைரமுத்து அளித்த பேட்டி!
டி.வி.சோமு, பத்திரிகையாளர்
திரைப்பாடலாசிரியர் வைரமுத்து தனது சமூகவலைதள பக்கத்தில், “என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும்என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை.. ஒன்றா இரண்டா..
இப்படி, சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன் ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது ஆனால் என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதோடு, அந்த பாடல் (தலைப்பு) சிலவற்றை பட்டியலிட்டு உள்ளார். அவை…
பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா, ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன்
இந்த நிலையில், “வைரமுத்து போட்டிருக்கும் ட்வீட்டில் மணிரத்னம் இயக்கிய மௌன ராகம், உயிரே படங்களும் இருக்கின்றன. தன்னை ஒதுக்கிய மணிரத்ன் இயக்கிய தக்லைஃப் வெளியாகி உள்ள நேரத்தில் இப்படி வெளியிட்டுள்ளார்” என்று சமூகவலைதளங்களில் பலரும் குறிப்பிடுகின்றனர்.
இந்த கருத்து ஏற்புடையதாகவே இருக்கிறது.
ரஜினியின் ‘வேட்டையன்’ பட இசை வெளியீட்டு விழா நடைபெற்ற மறுநாள் இதே போல ஒரு தகவலை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டார் வைரமுத்து. அதில், ரஜினி நடித்த பாட்சா படத்துக்கு தான் எழுதிய பாடல் சிறப்பாக வந்ததாகவும், தயாரிப்பாளர் வீரப்பன் அதிக பணம் கொடுத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து அப்போதே தமிழன் குரல் இதழில் செய்தி வெளியிட்டோம்.
https://tamilankural.com/producer-cut-salary-for-rajinis-film/
இந்த நிலையில்தான் மணிரத்னம் உள்ளிட்டோர், தனது பாடல் பல்லவியைத் திருடி தலைப்பு வைத்துவிடுகிறார்கள் என்று குற்றம் சாட்டி இருக்கின்றார் வைரமுத்து.
ஆனால் இது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும் என்பது கேள்விதான்.
காரணம், உயிரே படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் வைரமுத்துதான். அதே போல தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அனைத்து பாடல்களை எழுதியவர் அவரே.
இன்னொரு விசயம் இவர், பிறரது பாடல்களை திருடிவிட்டார் என பல காலமாகவே விமர்சனம் உண்டு.
அலைகள் ஓய்வதில்லை படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்களில் ஒன்று, “விழியில் விழுந்து.. உறவில் கலந்து உயிரில் கலந்த உறவே” என்று துவங்கும் பாடல்.
வள்ளலார், “கருவில் கலந்த துணையே என் கனிவில் கலந்த அமுதே என் கண்ணில் கலந்த ஒளியே என் கருத்தில் கலந்த களிப்பே என் உருவில் கலந்த அழகே என் உயிரில் கலந்த உறவே என் உணர்வில் கலந்த சுகமே” என்று எழுதிய பாடலில் இருந்துதான் வைரமுத்து எடுத்து கையாண்டு உள்ளார்.
அஜித் நடித்த அமர்க்களம் படத்தில், “சத்தம் இல்லா தனிமை கேட்டேன்” எனத் துவங்கும் பாடலொன்றை வைரமுத்து எழுதி இருப்பார். அதில், “ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்” என்கிற வியப்பூட்டும் வரி வரும். இது அப்துல் ரகுமான் எழுதியது.
இப்படி இவர் பிறரது கவிதைகளில் இருந்து எடுத்தாண்ட(!) வரிகளைத் தொகுத்து, அவரது நண்பரான கவி்ஞர் அறிவுமதியே, “பாநிரை கவர்தல்” என்கிற தலைப்பில் புத்தகமே வெளியிட்டார்.
சமீபத்தில்கூட, வாகை சூடவா படத்துக்கு தான் எழுதிய பாடல், வைரமுத்து பெயரில் வெளியானதாக பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா புகார் தெரிவித்தார். இந்த பாடலுக்காக வைரமுத்து தேசிய விருது வாங்கினார்.
இதற்கு முன்பாக, பாடலாசிரியர் யுகபாரதி, “தென்றல் படத்துக்கு நான் எழுதிய தந்தனானே பாடல், வைரமுத்துவின் பெயரில் வெளியானது” என்று புகார் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடைசி இரு சம்பவங்களுக்கு முன்னதாக… 2000ம் வருடம், விண் நாயகன் இதழுக்காக வைரமுத்துவை தனி பேட்டி (ஒன் டு ஒன்) கண்டேன். “பிறரது வார்த்தைகளை நீங்கள் எடுத்தாண்டு விடுகிறீர்கள் என்கிற விமர்சனம் இருக்கிறதே” என்று கேட்டேன்.
இதற்கு அவர், “வார்த்தைகள் எல்லாம் சங்க காலத்திலேயே இருக்கின்றனவே.. சொந்தம் கொண்டாட முடியுமா” என்று சொல்லி சிரித்தார்.
– டி.வி.சோமு, பத்திரிகையாளர்
பின்குறிப்பு: அந்த பேட்டியில் வைரமுத்துவிடம், “தமிழ், தமிழ் என்கிறீர்கள் பிள்ளைகளை ஆங்கிலவழியில்தானே படிக்க வைக்கிறீர்கள்?”, ”சாதியை எதிர்த்து கவிதை எழுதுகிறீர்கள்.. சாதிக் கூட்டங்களில் கலந்துகொள்கிறீர்களே4?” என்பது போன்ற கேள்விகளையும் வைத்தேன். அந்தப் பேட்டியை வைரமுத்து மறந்திருக்க மாட்டார்.
