‘தி பிரைடு ஆஃப் பாரத்’: ‘காந்தாரா’ நாயகனுடன் மோதும் ‘வீர ராணி’!
அதிரடி அறிவிப்போடு திரையுலகை அதிர வைக்கிறது ஒரு மாபெரும் வரலாற்றுத் திரைப்படம்! இந்திய சினிமாவின் மிகப்பிரமாண்டமான படைப்பாக உருவாகிவரும் ‘தி பிரைடு ஆஃப் பாரத்: சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ திரைப்படத்தின் நட்சத்திரப் பட்டாளத்தில், தற்போது நடிகை பூமி பெட்னேக்கரும் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
புகழ்பெற்ற வீர மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாகக் காந்தாரா புகழ் ரிஷப் ஷெட்டி கம்பீரமாக உருவெடுக்கும் இந்தப் படத்தில், அச்சமற்ற வீர ராணியான பெலவாடி மல்லம்மா கதாபாத்திரத்தில் பூமி பெட்னேக்கர் நடிக்கிறார். அர்ஜுன் ராம்பால், விவேக் ஓபராய் எனத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இந்த பிரம்மாண்ட அணியில் கைகோர்த்துள்ளனர்.
இந்தப் படத்தில் இணைந்தது குறித்துப் பூமி பெட்னேக்கர் மிகுந்த உற்சாகத்தோடு பேசுகையில், மராத்திய மாவீரர் சத்ரபதி சிவாஜி மகாராஜின் வீர வரலாற்றைப் பேசும் இந்த பிரம்மாண்டப் படைப்பின் ஒரு பகுதியாக இருப்பது தனக்குப் பெருமை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகத்தின் வீர ராணி பெலவாடி மல்லம்மாவைத் திரையில் உயிர்ப்பிப்பது ஒரு வரம் எனக் கூறிய அவர், காந்தாரா படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பார்த்து வியந்த தாம், இயக்குனர் சந்தீப் சிங் கதையைக் கூறிய உடனேயே நடிக்கச் சம்மதித்துவிட்டதாக மகிழ்ச்சி பொங்கப் பகிர்ந்துள்ளார்.
இயக்குனர் சந்தீப் சிங் இயக்கித் தயாரிக்கும் இந்தப் பிரம்மாண்டத் திரைப்படம் இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது. ரிஷி விர்மானி திரைக்கதை எழுத, அமித் திரிவேதியின் இசையில் பிரசூன் ஜோஷி பாடல்களை எழுதுகிறார். உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களுடன் தீவிரமான முன்தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
