‘AOT: மிட்டாய் மழை’: துல்கர் பர்த் டேவுக்கு ஜி.வி.பிரகாஷின் இசைப் பரிசு!
துல்கர் சல்மானின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு மேலும் வண்ணம் சேர்க்கும் வகையில், ‘AOT’ திரைப்படக்குழுவிலிருந்து ஒரு இனிப்பான பரிசாக ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியாகி ரசிகர்களை பெரு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது!
ஜி வி பிரகாஷ் குமாரின் மெல்லிசை இசையில் உருவான இந்த ‘மிட்டாய் மழை’, மனதை மயக்கும் ஒரு புதுவிதக் காதல் அனுபவம். கதாநாயகியின் விண்முட்டும் கனவுகளையும், அவளுக்குப் பின்னால் உறுதுணையாக நிற்கும் நாயகனின் அமைதியான ஆதரவையும் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. வழக்கமான காதலைத் தாண்டி, இருவருக்கு இடையேயான உன்னதமான பிணைப்பை இந்தப் பாடல் நெகிழ்ச்சியோடு பேசுகிறது.
பாலாஜி வேணுகோபாலின் கவித்துவமான வரிகளுக்கு, ரம்யா பெஹாராவின் தேன் போன்ற குரல் மேலும் உயிர் கொடுத்துள்ளது. விடாமுயற்சி, நம்பிக்கை, கனவுகளை நோக்கிப் பறக்கும் வேகம் என அனைத்தையும் பாட்டின் ஒவ்வொரு வரியும் மிக இயல்பாகக் கடத்துகிறது.
பவன் சடினேனி இயக்கத்தில், துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதிஹாசன் ஆகியோர் இணைந்து நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரித்துள்ளனர். ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் இந்தப் பாடல் இப்போது இணையத்தில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது!
