மணல் கொள்ளைக்கு எதிராக சீறும் “லெனின் பாண்டியன்”: பிரமிக்க வைத்த பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா!
மணல் கொள்ளை என்ற கொடூரத்திற்கு எதிராக மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தையும், எளிய மக்களின் சட்டப் போராட்டத்தையும் பேசும் அதிரடிப் படைப்பாக உருவாகியுள்ளது “லெனின் பாண்டியன்”. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில், T.G. தியாகராஜன் வழங்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.
வரும் செப்டம்பர் 25 அன்று உலகமெங்கும் திரையரங்குகளை அதிரவைக்க வரும் இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, திரையுலக நட்சத்திரங்களின் அணிவகுப்போடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள் படக்குழுவினரைப் பாராட்டிப் பேசியதிலிருந்து சில முக்கியத் துளிகள்:
தயாரிப்பாளர் தனஞ்செயன்:
“‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெறவிருக்கும் சத்யஜோதி பிலிம்ஸுக்கு எனது வாழ்த்துகள். சிவாஜி சார் குடும்பத்திலிருந்து விக்ரம் பிரபு ‘சிறை’ படத்தில் கலக்கியது போல, தர்ஷன் கணேசனும் இதில் காவலராகக் களம் இறங்கி அசத்தியிருக்கிறார். இளையராஜாவின் இசை இப்படத்திற்கு மிகப்பெரிய பலம்!”
இயக்குநர் பி. வாசு:
“கங்கை அமரன் எப்போதும் ஜாலியான மனிதர். ஆனால் இதில் கோபமான, அழுத்தமான பாத்திரத்தில் நடித்திருப்பதைப் பார்த்து வியந்துவிட்டேன். அவரிடமிருந்த நடிகனை வெளியில் கொண்டுவந்த சத்யஜோதி பிலிம்ஸிற்கும் இயக்குநர் பாலச்சந்திரனுக்கும் வாழ்த்துகள்!”

இசையமைப்பாளர் இளையராஜா:
“நடிகர் திலகம் சிவாஜி அண்ணா நேரத்தை மிகவும் கடைப்பிடிப்பவர். ஒரு நடிகனைப் பார்த்து ‘யாருப்பா இது?’ என்று ரசிகர்கள் வியக்க வேண்டும் என்பார். அப்படிப்பட்ட சிவாஜி அண்ணாவின் பேரன் தர்ஷன், அந்த நடிப்பு வம்சாவளியின் பெருமையைக் காப்பாற்றும் வகையில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.”
நடிகர் தர்ஷன் கணேசன்:
“சிறுவயது முதலே சிவாஜி சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த சத்யஜோதி பிலிம்ஸிற்கும், என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் பாலச்சந்திரனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”

இயக்குநர் வெங்கட் பிரபு:
“என் அப்பாவிற்கு (கங்கை அமரன்) பொதுவாக கொஞ்சம் ஓவர் ஆக்டிங் உண்டு. ஆனால் இதில் மிகவும் இயல்பாக நடிக்க வைத்த பெருமை பாலச்சந்திரனையே சேரும். உண்மைச் சம்பவத்தை எந்த கமர்ஷியல் சமரசமும் இல்லாமல் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார்கள்!”
நடிகை ரோஜா:
“என் முதல் படமான ‘செம்பருத்தி’க்கு இசையமைத்த இளையராஜா சாேர, 30 ஆண்டுகளுக்குப் பிறகு என் ரீ-என்ட்ரி படத்திற்கும் இசையமைத்திருப்பது பேரானந்தம். சிவாஜி சாரின் 3 தலைமுறை நடிகர்களுடனும் நடித்த பெருமை எனக்குக் கிடைத்திருக்கிறது.”
இயக்குநர் D.D. பாலச்சந்திரன்:
“எனக்கு T.நகர் என்றால் தியாகராய நகர் அல்ல, ‘தியாகராஜன் நகர்’தான். என்னைப் போன்ற ஒரு புதுமுகத்தை நம்பி இந்த மாபெரும் பொறுப்பைக் கொடுத்த தயாரிப்பாளருக்கு என் ஆயுள் முழுதும் கடமைப்பட்டுள்ளேன்.”
கங்கை அமரனின் புதுமையான நடிப்பு, ரோஜாவின் கம்பீரமான ரீ-என்ட்ரி, தர்ஷன் கணேசனின் அதிரடி அறிமுகம், இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை எனக் கலைகட்டியுள்ள “லெனின் பாண்டியன்”, செப்டம்பர் 25 முதல் வெள்ளித்திரையில் புயலைக் கிளப்ப வருகிறது!

